| 1 | இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, |
| 2 | இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத்தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். |
| 3 | இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. |
| 4 | அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். |
| 5 | அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக்கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே. |
| 6 | நீ எழுந்து நகருக்குள் செல்: நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். |
| 7 | அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். |
| 8 | சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். |
| 9 | அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. |
| 10 | தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “அனனியா” என அழைக்க, அவர், “ஆண்டவரே, இதோ அடியேன்” என்றார். |
| 11 | அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். |
| 12 | அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார். |
| 13 | அதற்கு அனனியா மறுமொழியாக, “ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். |
| 14 | உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார். |
| 15 | அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார். |
| 16 | என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்” என்றார். |
| 17 | அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார். |
| 18 | உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார். |
| 19 | பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். |
| 20 | உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார். |
| 21 | கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், “எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன் தானே இவன்” என்றார்கள். |
| 22 | சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், “இயேசுவே கிறிஸ்து” என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார். |
| 23 | இவ்வாறே பல நாள்கள் கழிந்தன: யூதர்கள் சவுலைக் கொன்றுவிடத்திட்டமிட்டார்கள். |
| 24 | அவரைக் கொன்று விடுவதற்காக அவர்கள் இரவும் பகலும் நகர வாயில்களைக் காவல் செய்தார்கள். அவர்களுடைய இச்சூழ்ச்சி சவுலுக்குத் தெரியவந்தது. |
| 25 | ஆகவே அவருடைய சீடர்கள் இரவில் அவரைக் கூடையில் வைத்து, நகர மதில் வழியாக இறக்கி விட்டார்கள். |
| 26 | அவர் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். |
| 27 | பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியதுபற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். |
| 28 | அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார். |
| 29 | கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். |
| 30 | ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள். |
| 31 | யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது. |
| 32 | பேதுரு எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்: ஒருநாள் லித்தாவில் வாழ்ந்த இறைமக்களிடம் வந்து சேர்ந்தார். |
| 33 | அங்கே அவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவரைக் கண்டார்: |
| 34 | அவரிடம், “ஐனெயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்: எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்படுத்தும்” என்று பேதுரு கூறினார். உடனே அவர் எழுந்தார். |
| 35 | லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆண்டவரிடம் திரும்பினார்கள். |
| 36 | யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார். அவர் தொற்கா என்றும் அழைக்கப்பட்டார்: நன்மை செய்வதிலும் இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார். |
| 37 | உடல்நலம் குன்றி ஒருநாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல் மாடியில் கிடத்தியிருந்தனர். |
| 38 | யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, “எங்களிடம் உடனே வாருங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார்கள். |
| 39 | பேதுரு புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவர்கள் அவரை மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். கைம்பெண்கள் அவரருகில் வந்து நின்று, தொற்கா தங்களோடு இருந்தபோது செய்துகொடுத்த எல்லா அங்கிகளையும் ஆடைகளையும் காண்பித்தவாறே அழுதார்கள். |
| 40 | பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்: அவரது உடலின் பக்கமாகத் திரும்பி, “தபித்தா, எழுந்திடு” என்றார். உடனே அவர் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டு, எழுந்து உட்கார்ந்தார். |
| 41 | பேதுரு அவருடைய கையைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். இறைமக்களையும் கைம்பெண்களையும் கூப்பிட்டு, அவர்கள் முன் அவரை உயிருடன் நிறுத்தினார். |
| 42 | இது யோப்பா நகர் முழுவதும் தெரிய வரவே ஆண்டவர் மீது பலர் நம்பிக்கை கொண்டனர். |
| 43 | யோப்பாவிலுள்ள தோல் பதனிடும் சீமோன் என்பவரிடம் பேதுரு பலநாள் தங்கியிருந்தார். |