வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 31

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் மோசேயிடம்,
2“இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு: அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார்.
3மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
4இஸ்ரயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரம் பேரைப் போருக்கு அனுப்ப வேண்டும்.
5அப்படியே இஸ்ரயேலின் பல்லாயிரத்தவர்களிலிருந்து குலம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் பன்னீராயிரம் பேர் போரிடுவதற்குத் தயார் நிலையில் அனுப்பப்ட்டனர்.
6மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் வந்த ஆயிரம் பேரை குரு எலயாசர் மகன் பினகாசுடன் போருக்கு அனுப்பினார்.அவர் திருத்தலத் துணைக்கலன்களையும் போர் எக்காளங்களையும் கையோடு எடுத்துச் சென்றார்.
7ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மிதியானுக்கெதிராகப் எதிராக போரிட்டு ஆண்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினர்.
8இவ்வாறு வெட்டி வீழ்த்தப்பட்டவர்களைத் தவிர மிதியான் மன்னர்களையும் அவர்கள் கொன்றனர்: மிதியானின் ஐந்து அரசர்கள் ஏலி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியோர்: அத்துடன் பெகோரின் மகன் பிலயாமையும் அவர்கள் வாளால் வெட்டி வீழ்த்தினர்.
9இஸ்ரயேல் மக்கள் மிதியானின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிறைப்பிடித்தனர்: அவர்களுடன் அவர்களின் கால்நடைகள், மந்தைகள் அனைத்தையும் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் கொள்ளைப் பொருளாகக் கவர்ந்து கொண்டனர்.
10அவர்கள் குடியிருந்த இடங்களின் அனைத்து நகர்களையும் அவர்களின் அரண்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.
11ஆள்களும் கால்நடைகளும் உட்பட அவர்கள் கொள்ளையடித்தவை, சூறையாடியவை அனைத்தையும் கொண்டு சென்றனர்.
12பின்பு அவர்கள் சிறைப்பிடித்தோர், கொள்ளையடித்தவை, சூறையாடியவை ஆகியவற்றை எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையத்திலிருந்த மோசே, குரு எலயாசர், இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆகியோரிடம் கொண்டு சென்றனர்.
13மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவர்களைச் சந்திக்கும்படி பாளையத்துக்கு வெளியே வந்தனர்.
14ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களாகிய படைத்தளபதிகள், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த போது அவர்கள் மேல் மோசே சினங்கொண்டார்.
15மோசே அவர்களிடம் கூறியது: பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா?
16பிலயாமின் சொல் கேட்டு இஸ்ரயேல் மக்கள் பெகோர் காரியத்தில் ஆண்டவருக்கு எதிராக இழிவாக நடக்கக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே! அதனால்தான் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பினுள் கொள்ளைநோய் வந்தது.
17எனவே ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்: ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.
18ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்.
19உங்களுள் ஆளைவெட்டி வீழ்த்திய ஒவ்வொருவனும் தீட்டுப்பட்டதைத் தொட்டவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் பாளையத்துக்கு வெளியே தங்கியிருங்கள்.உங்களையும், நீங்ள் சிறைப்பிடித்தவர்களையும் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்துங்கள்.
20உடைகள், தோல் பொருள்கள், வெள்ளாட்டு உரோம வேலைப்பாடுகள், மரப்பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும்.
21பின்னர் குரு எலயாசர் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களைப் பார்த்துக் கூறியது: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டருளிய திருச்சட்ட நியமம் இதுவே:
22பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய,
23நெருப்பைத் தாங்கக் கூடிய அனைத்தையும் நீங்கள் நெருப்பிலே போட்டு எடுக்க வேண்டும்.அப்பொழுது அவற்றின் தீட்டு அகலும்.மேலும் அவை தண்ணீராலும் தூய்மையாக்கப்பட வேண்டும்: நெருப்பைத் தாங்கக் கூடாதது எதுவோ அதைத் தண்ணீரில் தோய்த்தெடுத்த வேண்டும்.
24ஏழாம் நாளில் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும்: அப்பொழுது உங்கள் தீட்டு அகலும்: நீங்கள் பாளையத்துக்குள் வரலாம்.
25ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
26ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள்.
27போருக்குச் சென்றிருந்த படைவீரருக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அனைவருக்குமிடையில் கொள்ளைப் பொருளைப் பங்கிடுங்கள்.
28போருக்குச் சென்றிருந்த படை வீரரிடமிருந்த ஆள்கள், மாடுகள், கழுதைகள், மந்தைகள், ஆகியவற்றில் ஐந்நூற்றில் ஒன்றை ஆண்டவருக்குரிய பங்காகக் கொடுங்கள்.
29அவர்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து அதை எடுத்து ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாககக் குரு எலயாசரிடம் கொடுக்க வேண்டும்.
30இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கான ஆள்கள், காளைகள், கழுதைகள், மந்தைகள் ஆகியவற்றிலிருந்து ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து ஆண்டவரின் திருவுறைவிடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் லேவியரிடம் கொடுக்க வேண்டும்.
31மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.
32படைவீரர் சூறையாடிய கொள்ளைப் பொருளில் மீந்திருந்தவை: ஆறு லட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள்,
33எழுபத்தீராயிரம் மாடுகள்,
34அறுபத்தோராயிரம் கழுதைகள்,
35ஆள்கள் மொத்தம் முப்பத்தீராயிரம் பேர்: அவர்கள் ஆணுறவு கொண்டிராத பெண்கள்.
36போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
37ஆண்டவர் பங்கில் இருந்த ஆடுகள் அறுநூற்று எழுபத்தைந்து.
38காளைகளின் தொகை முப்பத்தாறாயிரம்: அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.
39கழுதைகளின் தொகை முப்பத்தாயிரத்து ஐந்நூறு: அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.
40ஆள்கள் தொகை பதினாறாயிரம்: அவர்களிலிருந்து ஆண்டவருக்குரிய பங்காகத் தரப்பெற்றவர்கள் முப்பத்திரண்டு பேர்.
41ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆண்டவருக்குரிய பங்காகிய உயர்த்திப் படைக்கும் படையலை மோசே குரு எலயாசரிடம் கொடுத்தார்.
42போருக்குச் சென்றிருந்த ஆள்களுக்குரியது போக மோசே இஸ்ரயேல் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தப் பாதிப் பங்கு:
43மக்கள் கூட்டமைப்புக்குரிய பாதிப் பங்கில் ஆடுகள் மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
44காளைகள் முப்பத்தாறாயிரம்.
45கழுதைகள் முப்பத்தாறாயிரத்து ஐந்நூறு.
46ஆள்கள் பதினாறாயிரம் பேர்.
47ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து ஆள்களிலும் கால்நடைகளிலும் ஐம்பத்துக்கு ஒன்று வீதம் எடுத்து அவற்றை ஆண்டவரின் திருவுறைவிடத்திற்குப் பொறுப்பாயிருந்த லேவியரிடம் மோசே கொடுத்தார்.
48பின்பு பல்லாயிரத்தவர் படைத்தளபதிகள் ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும் மோசேயை அணுகினர்.
49அவர்கள் மோசேயிடம், “உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட போர்வீரரை எண்ணியபோது ஒருவரும் குறையவில்லை.
50அத்துடன் ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்குக் கறை நீக்கம் செய்வதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் தேடி எடுத்த பொன்னணிகளான காப்பு வகைககள், கடகங்கள், முத்திரை மோதிரங்கள், காது வளையங்கள், குமிழ் மணிகள் ஆகியவற்றை ஆண்டவருக்கு நேர்ச்சையாகக் கொண்டு வந்துள்ளோம்” என்றனர்.
51மோசேயும் குரு எலயாசரும் அவர்களிடமிருந்த கைவினைப் பொருள்களான எல்லாப் பொன் அணிகளையும் பெற்றுக் கொண்டனர்.
52ஆயிரத்தவர் தலைவர்களும் நூற்றுவர் தலைவர்களும் ஆண்டவருக்கு உயர்த்திப் படைத்த பொன்னின் நிறை மொத்தம் ஏறக்குறைய இருநூறு கிலோ கிராம்.
53ஒவ்வொரு படைவீரனும் கொள்ளைப் பொருளைக் கவர்ந்து கொண்டான்.
54மோசேயும் குரு எலயாசரும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர்: அதை ஆண்டவர் திருமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாகச் சந்திப்புக் கூடாரத்தினுள் கொண்டு வந்தனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.