1 | லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனம், |
2 | இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர்.இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர். |
3 | அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்து அவர்களிடம், “நீங்கள் மிதமிஞ்சிப் போய்வீட்டீர்கள்: மக்கள் கூட்டமைப்பு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தூயவர்தாம்: ஆண்டவரும் அவர்களோடு இருக்கிறார்: அப்படியிருக்க ஏன் ஆண்டவரின் சபைக்கு மேலாக உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டனர். |
4 | மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார். |
5 | அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்: தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்: |
6 | செய்யவேண்டியது இதுவே: கோராகே! அவன் கூட்டத்தவரே! தூபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்: |
7 | நாளை ஆண்டவர் திருமுன் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்: ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்: லேவியின் புதல்வரே! நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள். |
8 | மேலும் மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்: |
9 | இஸ்ரயேலின் கடவுள் உங்களைத் தம்மருகில் வரச்செய்து, ஆண்டவரின் திருவுறைவிடத்தல் நீங்கள் பணி செய்யவும் மக்கள் கூட்டமைப்பின்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்யவும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது அற்பமான காரியமா? |
10 | அவர் உன்னையும் லேவியின் புதல்வரின் உன் சகோதரர் அனைவரையும் தம்மருகில் வரச் செய்தாரே! இதனோடு குருத்துவத்தையும் நாடுவீர்களோ? |
11 | ஆதலால் நீயும் உன் கூட்டத்தவரும் ஆண்டவருக்கு எதிராகவே இருக்கிறீர்கள்: ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவர் யார்? |
12 | பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார்.அவர்களோ, “நாங்கள் வர மாட்டோம்: |
13 | இப்பாலை நிலத்தில் எங்களைக் கொல்லும்படி, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலிருந்து எங்களைக் கொண்டு வந்து, இப்போது எங்கள்மேல் நீர் உம்மை அதிகாரியாக்கிக் கொள்வது அற்பமான காரியமா? |
14 | மேலும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்கு நீர் எங்களைக் கொண்டு வரவுமில்லை: திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவுமில்லை: இம்மனிதர்களின் கண்களைப் பிடுங்கி விடுவீரோ? நாங்கள் வரவே மாட்டோம்” என்றனர். |
15 | மோசே கடுஞ்சினம் கொண்டார்.அவர் ஆண்டவரிடம், “இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்: இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை: இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை” என்றார். |
16 | பின் மோசே கோராகிடம், “நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும்-நீயும் அவர்களும் ஆரோனும் நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்: |
17 | உங்களுள் ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்து, அதில் தூபமிட்டு, ஆளுக்கு ஒன்றாக மொத்தம் இருநூற்றைம்பது தூப கலசங்களை, ஆண்டவர் திருமுன் கொண்டு வரட்டும்.நீயும் ஆரோனும் உங்கள் தூப கலசங்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். |
18 | அவ்வாறே ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்: அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்: அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள். |
19 | பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான்.ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது. |
20 | ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும், |
21 | ”ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றார். |
22 | அவர்களோ முகங்குப்புறவிழுந்து, “கடவுளே! உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே! ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்?” என்றனர். |
23 | உடனே ஆண்டவர் மோசேயிடம், |
24 | ”கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல்” என்றார். |
25 | மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்: இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர். |
26 | அவர் மக்கள் கூட்டமைப்பிடம், “இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்: அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம்” என்றார். |
27 | அவ்வாறே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்: தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர். |
28 | மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள். |
29 | எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள். |
30 | ஆனால் ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால் நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால் அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள். |
31 | இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி முடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது: |
32 | தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது. |
33 | இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்: தரை தன் வாயை மூடிக்கொண்டது: சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர். |
34 | அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், “நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே” என்று அஞ்சியோடினர். |
35 | பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது. |
36 | பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
37 | எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல். |
38 | ஏனெனில் அவை புனிதமானவை: பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன: அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்: அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்: ஆகவேதான் அவை புனிதமானவை: இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும். |
39 | அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்தார்: பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன. |
40 | இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்: இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்: மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே. |
41 | ஆயினும் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, “ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்” என்றனர். |
42 | மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்: உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது. |
43 | மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள். |
44 | ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது: |
45 | நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.”மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர். |
46 | மோசே ஆரோனிடம், “உன் தூபகலசத்தைப் பலிபீடத்திலிருந்து எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் போட்டு விரைவாக அதனை மக்கள் கூட்டமைப்பினரிடம் கொண்டு போய் அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்: ஆண்டவரிடமிருந்து கடுஞ்சினம் புறப்பட்டுவிட்டது கொள்iநோய் தொடங்கிவிட்டது” என்றார். |
47 | மோசே சொன்னபடியே ஆரோன் தூபகலசத்தை எடுத்துக் கொண்டு சபை நடுவே ஓடினார்: அந்தோ, மக்களிடையே கொள்ளை நோய் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.அவர் தூபம் போட்டு மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தார். |
48 | அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்: கொள்ளைநோய் நின்றது. |
49 | அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலியிரத்து எழுநூறு பேர். |
50 | கொள்ளைநோய் நின்றதும் ஆரோன் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலருகில் மோசேயிடம் திரும்பி வந்தார். |