1 | ஆண்டவர் மோசேயிடம், |
2 | “இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு: மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்” என்றார். |
3 | ஆண்டவர் கட்டளைப்படியே மோசெ அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்: அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள். |
4 | அவர்களின் பெயர்கள்: ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா: |
5 | சிமியோன் குலத்திலிருந்து ஓரியின் மகன் சாபாற்று: |
6 | யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு: |
7 | இசக்கார் குலத்திலிருந்து யோசேப்பின் மகன் இகால்: |
8 | எப்ராயிம் குலத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா: |
9 | பென்யமின் குலத்திலிருந்து இராபின் மகன் பல்தி: |
10 | செபுலோன் குலத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்: |
11 | யோசேப்பு குலத்திலுள்ள மனாசே குலத்திலிருந்து சூசியின் மகன் காத்தி: |
12 | தாண் குலத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மீயேல்: |
13 | ஆசேர் குலத்திலிருந்து மிக்கேலின் மகன் செதூர்: |
14 | நப்தலி குலத்திலிருந்து ஓப்சியின் மகன் நக்பி: |
15 | காத்து குலத்திலிருந்து மாக்கியின் மகன் கெயுவேல்: |
16 | நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே.மோசே நூனின் மகன் ஓசேயாவை”யோசுவா” என்று பெயரிட்டு அழைத்தார். |
17 | கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்: அவர் அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்: |
18 | அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா, |
19 | அவர்கள் குடியிருக்கும் நாடு வளமையானதா வளமையற்றதா, அவர்கள் தங்கியிருக்கும் நகர்கள் பாளையங்களா கோட்டைகளா, |
20 | அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்: துணிவுடன் இருங்கள்: அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.அது திராட்சையின் முதற்கனிப் பருவம். |
21 | அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர். |
22 | அவர்கள் நெகேபினுள் சென்று, பின் எபிரோனுக்கு வந்தனர்.அங்கு ஆனாக்கின் வழிமரபினரான அகிமான், சேசாய், தல்மாய் ஆகியோர் இருந்தனர்: எகிப்திலுள்ள சோவானிலும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே எபிரோன் கட்டப்பட்டிருந்தது. |
23 | பின்னர் அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்: அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்: அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்: அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர். |
24 | இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு”எசுக்கோல்” பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. |
25 | நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர். |
26 | அவர்கள் பாரான் பாலை நிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்: அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்: நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர். |
27 | அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்: அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது: இதுவே அதன் கனி. |
28 | ஆயினும் அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்: நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை: அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்: |
29 | அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்: இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலை நாட்டில் வாழ்கின்றனர்: கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர். |
30 | காலேபு மோசேமுள்ள மக்களை உடனே அமைதிப்படுத்தி, “நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்: ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்” என்றார். |
31 | ஆனால் அவருடன் சென்றிருந்த ஆள்கள், “நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது: ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்” என்றனர். |
32 | இவ்வாறு அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்: அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது: அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்: |
33 | அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்: எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்: அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். |