1 | ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன: அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்: அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது. |
2 | எனவே அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து, |
3 | “அற்றரோத்து, தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ, பெயோன் ஆகிய பகுதிகள் |
4 | இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் பார்வையில் ஆண்டவர் அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்றவை: உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு” என்றனர். |
5 | மேலும் அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்: எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம்” என்றனர். |
6 | ஆனால் மோசே காத்துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது: நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா? |
7 | ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்? |
8 | அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர். |
9 | அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர். |
10 | அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது: அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது: |
11 | எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியநாட்டினைக் காணமாட்டார்கள்: ஏனெனில் அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை. |
12 | எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு: ஏனெனில் அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர். |
13 | அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது: அவர் இப்பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்: ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது. |
14 | இப்போதும் நீங்கள் உங்கள் மூதாதையருக்குப் பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள்.இஸ்ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் கனலை இன்னும் கடுமையாக்கி விடுகிறீர்களே! |
15 | அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்: இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள். |
16 | பின்னும் அவர்கள் அவரிடம் நெருங்கி வந்து, “நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்: |
17 | ஆயினும் நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்: எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்: |
18 | இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம். |
19 | நாங்கள் யோர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர்களுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம்.ஏனெனில் எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தானுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது” என்றார்கள். |
20 | மோசே அவர்களிடம் கூறியது: நீங்கள் இதைச் செய்தால் ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால், |
21 | உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொரு வரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால் |
22 | நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்: அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்: ஆண்டவருக்கு இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்: இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும். |
23 | ஆனால் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்: உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம். |
24 | உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்: நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள். |
25 | காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மோசேயிடம், “எம் தலைவர் கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்: |
26 | எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்: |
27 | ஆனால் எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம்” என்றனர். |
28 | இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார். |
29 | மோசே அவர்களிடம், “காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்: நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்: பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்: |
30 | ஆனால் அவர்கள் போர்க்கலந்தாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமைகள் பெறுவர்” என்றார். |
31 | காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, “ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்: |
32 | நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்: எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்” என்றனர். |
33 | மோசே, காத்துப் புதல்வர், ரூபன் புதல்வர், யோசேப்பு மகன் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரிய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் ஓகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அதன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற நகர்களையும் கொடுத்தார். |
34 | காத்துப் புதல்வர் தீபோன், அற்றரோத்து, அரோயேர், |
35 | அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா, |
36 | பெத்நிம்ரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர். |
37 | ரூபன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம், |
38 | நெபோ, பாகால்மெகோன், (இந்த பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்: அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர். |
39 | மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர். |
40 | மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்: அவர் அதில் வாழ்ந்தார். |
41 | மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்: அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார். |
42 | நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்: அவர் அதைத் தம் பெயராலேயே”நோபாகு” என்று அழைத்தார். |