1 | ஆண்டவர் மோசேயிடம், |
2 | “இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு: அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார். |
3 | மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள். |
4 | இஸ்ரயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரம் பேரைப் போருக்கு அனுப்ப வேண்டும். |
5 | அப்படியே இஸ்ரயேலின் பல்லாயிரத்தவர்களிலிருந்து குலம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் பன்னீராயிரம் பேர் போரிடுவதற்குத் தயார் நிலையில் அனுப்பப்ட்டனர். |
6 | மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் வந்த ஆயிரம் பேரை குரு எலயாசர் மகன் பினகாசுடன் போருக்கு அனுப்பினார்.அவர் திருத்தலத் துணைக்கலன்களையும் போர் எக்காளங்களையும் கையோடு எடுத்துச் சென்றார். |
7 | ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மிதியானுக்கெதிராகப் எதிராக போரிட்டு ஆண்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினர். |
8 | இவ்வாறு வெட்டி வீழ்த்தப்பட்டவர்களைத் தவிர மிதியான் மன்னர்களையும் அவர்கள் கொன்றனர்: மிதியானின் ஐந்து அரசர்கள் ஏலி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியோர்: அத்துடன் பெகோரின் மகன் பிலயாமையும் அவர்கள் வாளால் வெட்டி வீழ்த்தினர். |
9 | இஸ்ரயேல் மக்கள் மிதியானின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிறைப்பிடித்தனர்: அவர்களுடன் அவர்களின் கால்நடைகள், மந்தைகள் அனைத்தையும் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் கொள்ளைப் பொருளாகக் கவர்ந்து கொண்டனர். |
10 | அவர்கள் குடியிருந்த இடங்களின் அனைத்து நகர்களையும் அவர்களின் அரண்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர். |
11 | ஆள்களும் கால்நடைகளும் உட்பட அவர்கள் கொள்ளையடித்தவை, சூறையாடியவை அனைத்தையும் கொண்டு சென்றனர். |
12 | பின்பு அவர்கள் சிறைப்பிடித்தோர், கொள்ளையடித்தவை, சூறையாடியவை ஆகியவற்றை எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையத்திலிருந்த மோசே, குரு எலயாசர், இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆகியோரிடம் கொண்டு சென்றனர். |
13 | மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவர்களைச் சந்திக்கும்படி பாளையத்துக்கு வெளியே வந்தனர். |
14 | ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களாகிய படைத்தளபதிகள், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த போது அவர்கள் மேல் மோசே சினங்கொண்டார். |
15 | மோசே அவர்களிடம் கூறியது: பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா? |
16 | பிலயாமின் சொல் கேட்டு இஸ்ரயேல் மக்கள் பெகோர் காரியத்தில் ஆண்டவருக்கு எதிராக இழிவாக நடக்கக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே! அதனால்தான் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பினுள் கொள்ளைநோய் வந்தது. |
17 | எனவே ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்: ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள். |
18 | ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள். |
19 | உங்களுள் ஆளைவெட்டி வீழ்த்திய ஒவ்வொருவனும் தீட்டுப்பட்டதைத் தொட்டவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் பாளையத்துக்கு வெளியே தங்கியிருங்கள்.உங்களையும், நீங்ள் சிறைப்பிடித்தவர்களையும் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்துங்கள். |
20 | உடைகள், தோல் பொருள்கள், வெள்ளாட்டு உரோம வேலைப்பாடுகள், மரப்பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும். |
21 | பின்னர் குரு எலயாசர் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களைப் பார்த்துக் கூறியது: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டருளிய திருச்சட்ட நியமம் இதுவே: |
22 | பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய, |
23 | நெருப்பைத் தாங்கக் கூடிய அனைத்தையும் நீங்கள் நெருப்பிலே போட்டு எடுக்க வேண்டும்.அப்பொழுது அவற்றின் தீட்டு அகலும்.மேலும் அவை தண்ணீராலும் தூய்மையாக்கப்பட வேண்டும்: நெருப்பைத் தாங்கக் கூடாதது எதுவோ அதைத் தண்ணீரில் தோய்த்தெடுத்த வேண்டும். |
24 | ஏழாம் நாளில் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும்: அப்பொழுது உங்கள் தீட்டு அகலும்: நீங்கள் பாளையத்துக்குள் வரலாம். |
25 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
26 | ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள். |
27 | போருக்குச் சென்றிருந்த படைவீரருக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அனைவருக்குமிடையில் கொள்ளைப் பொருளைப் பங்கிடுங்கள். |
28 | போருக்குச் சென்றிருந்த படை வீரரிடமிருந்த ஆள்கள், மாடுகள், கழுதைகள், மந்தைகள், ஆகியவற்றில் ஐந்நூற்றில் ஒன்றை ஆண்டவருக்குரிய பங்காகக் கொடுங்கள். |
29 | அவர்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து அதை எடுத்து ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாககக் குரு எலயாசரிடம் கொடுக்க வேண்டும். |
30 | இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கான ஆள்கள், காளைகள், கழுதைகள், மந்தைகள் ஆகியவற்றிலிருந்து ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து ஆண்டவரின் திருவுறைவிடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் லேவியரிடம் கொடுக்க வேண்டும். |
31 | மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர். |
32 | படைவீரர் சூறையாடிய கொள்ளைப் பொருளில் மீந்திருந்தவை: ஆறு லட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள், |
33 | எழுபத்தீராயிரம் மாடுகள், |
34 | அறுபத்தோராயிரம் கழுதைகள், |
35 | ஆள்கள் மொத்தம் முப்பத்தீராயிரம் பேர்: அவர்கள் ஆணுறவு கொண்டிராத பெண்கள். |
36 | போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. |
37 | ஆண்டவர் பங்கில் இருந்த ஆடுகள் அறுநூற்று எழுபத்தைந்து. |
38 | காளைகளின் தொகை முப்பத்தாறாயிரம்: அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று. |
39 | கழுதைகளின் தொகை முப்பத்தாயிரத்து ஐந்நூறு: அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று. |
40 | ஆள்கள் தொகை பதினாறாயிரம்: அவர்களிலிருந்து ஆண்டவருக்குரிய பங்காகத் தரப்பெற்றவர்கள் முப்பத்திரண்டு பேர். |
41 | ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆண்டவருக்குரிய பங்காகிய உயர்த்திப் படைக்கும் படையலை மோசே குரு எலயாசரிடம் கொடுத்தார். |
42 | போருக்குச் சென்றிருந்த ஆள்களுக்குரியது போக மோசே இஸ்ரயேல் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தப் பாதிப் பங்கு: |
43 | மக்கள் கூட்டமைப்புக்குரிய பாதிப் பங்கில் ஆடுகள் மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. |
44 | காளைகள் முப்பத்தாறாயிரம். |
45 | கழுதைகள் முப்பத்தாறாயிரத்து ஐந்நூறு. |
46 | ஆள்கள் பதினாறாயிரம் பேர். |
47 | ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து ஆள்களிலும் கால்நடைகளிலும் ஐம்பத்துக்கு ஒன்று வீதம் எடுத்து அவற்றை ஆண்டவரின் திருவுறைவிடத்திற்குப் பொறுப்பாயிருந்த லேவியரிடம் மோசே கொடுத்தார். |
48 | பின்பு பல்லாயிரத்தவர் படைத்தளபதிகள் ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும் மோசேயை அணுகினர். |
49 | அவர்கள் மோசேயிடம், “உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட போர்வீரரை எண்ணியபோது ஒருவரும் குறையவில்லை. |
50 | அத்துடன் ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்குக் கறை நீக்கம் செய்வதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் தேடி எடுத்த பொன்னணிகளான காப்பு வகைககள், கடகங்கள், முத்திரை மோதிரங்கள், காது வளையங்கள், குமிழ் மணிகள் ஆகியவற்றை ஆண்டவருக்கு நேர்ச்சையாகக் கொண்டு வந்துள்ளோம்” என்றனர். |
51 | மோசேயும் குரு எலயாசரும் அவர்களிடமிருந்த கைவினைப் பொருள்களான எல்லாப் பொன் அணிகளையும் பெற்றுக் கொண்டனர். |
52 | ஆயிரத்தவர் தலைவர்களும் நூற்றுவர் தலைவர்களும் ஆண்டவருக்கு உயர்த்திப் படைத்த பொன்னின் நிறை மொத்தம் ஏறக்குறைய இருநூறு கிலோ கிராம். |
53 | ஒவ்வொரு படைவீரனும் கொள்ளைப் பொருளைக் கவர்ந்து கொண்டான். |
54 | மோசேயும் குரு எலயாசரும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர்: அதை ஆண்டவர் திருமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாகச் சந்திப்புக் கூடாரத்தினுள் கொண்டு வந்தனர். |