1 | பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்: எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்” என்றார். |
2 | பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்: பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர். |
3 | பிலயாம், பாலாக்கைப் பார்த்து, “உம் எரிபலியருகே நின்று கொள்ளும்: நான் போகிறேன்: அவர் எதையெல்லாம் எனக்குக் காண்பிக்கிறாரோ அதை உமக்கு அறிவிப்பேன்” என்றார்.பின் அவர் மொட்டை மேடு நோக்கிப் போனார். |
4 | கடவுள் பிலயாமைச் சந்தித்தார்.பிலயாம் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டுள்ளேன்” என்றார். |
5 | ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்றார். |
6 | அவர் அவனிடம் திரும்பிப் போகையில் அவன் மோவாபின் எல்லாத் தலைவர்களோடும் தன் எரிபலியருகில் நின்று கொண்டிருந்தான். |
7 | பிலயாம் திருஉரையாகக் கூறியது: “ஆராமிலிருந்து பாலாக்கு, கீழை மலைகளிலிருந்து மோவாபின் மன்னன், என்னைக் கொண்டு வந்துள்ளான். “வா, எனக்காக யாக்கோபைச் சபி! வா, இஸ்ரயேலைப் பழித்துரை!” என்கிறான். |
8 | கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்? |
9 | மலைகளின் உச்சியிலிருந்து நான் அவனை நோக்குகிறேன்: குன்றுகளிலிருந்து நான் அவனைப் பார்க்கிறேன்: இதோ! தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம்.இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை: |
10 | யாக்கோபின் தூசியை எண்ணிக்கையிடவோ இஸ்ரயேலின் கால் பங்கைக் கணக்கெடுக்கவோ யாரால் இயலும்? நான் நேர்மையாளர் இறப்பை அடைவேனாக! என் முடிவும் அவர் போன்று இருப்பதாக!” |
11 | பின்னர் பாலாக்கு பிலயாமிடம், “நீர் என்ன எனக்கு இப்படிச் செய்துவிட்டீர்! என் எதிரிகளைச் சபிக்கும்படி நான் உம்மைக் கொண்டுவந்தேன்: ஆனால் இதோ! நீர் அவர்களுக்கு ஆசிமேல் ஆசி வழங்குகிறீர்!” என்றான். |
12 | அதற்கு மறுமொழியாக அவர், “ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ?” என்றார். |
13 | பாலாக்கு அவரிடம், “வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்: அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்: பின்பு எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும்” என்றான்: |
14 | அவ்வாறே பாலாக்கு அவரைப் பிஸ்காவின் கொடுமுடிவில் சோபிம் வயல்வெளிக்குக் கொண்டு போனான்: அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான். |
15 | பிலயாம் பாலாக்கிடம், “நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எலிபலியருகில் நின்றுகொள்ளும்” என்றார். |
16 | ஆண்டவர் பிலயாமைச் சந்தித்தார்: அவர் அவரது வாயில் ஒரு வார்த்தையை வைத்து, “பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு” என்று சொன்னார். |
17 | அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்: மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள்.பாலாக்கு அவரிடம், “ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்?” என்று கேட்டான். |
18 | பிலயாம் திருஉரையாகக் கூறியது: “பாலாக்கு, எழுந்து கேள்: கிப்போர் மகனே, எனக்குச் செவிகொடு. |
19 | பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்: மனத்தை மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர்.அவர் சொல்லியரைச் செய்யாமலிருப்பாரா? அல்லது உரைத்ததை நிறைவேற்றிமலிருப்பாரா? |
20 | இதோ, நான் ஆசி கூறவே ஒரு கட்டளை பெற்றேன்: அவர் ஆசி பொழிந்துள்ளார்: அதை என்னால் மாற்றியமைக்க இயலாது. |
21 | யாக்கோபில் தீங்கினை அவர் கண்டதில்லை! இஸ்ரயேலில் துயரத்தை அவர் பார்த்ததுமில்லை! ஆண்டவராம் கடவுள் அவர்களோடிருக்கிறார்? ஓர் அரசனின் பெருமுழக்கம் அவர்களிடையே உண்டு. |
22 | எகிப்திலிருந்து இறைவன் அவர்களை வெளிக்கொணர்கின்றார்: காண்டாமிருகத்தின் கொம்புகள் அவர்களுக்கு உண்டு. |
23 | யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதமில்லை.இஸ்ரயேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை: யாக்கோபையும் இஸ்ரயேலையும் பற்றி இப்போது சொல்லப்படுவது: “எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்! |
24 | இதோ ஒரு மக்களினம்: அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது: ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது.இரையை விழுங்கி, கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் அது படுப்பதில்லை.” |
25 | பாலாக்கு பிலாயாமிடம், “ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம்” என்றான். |
26 | ஆனால் பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, “ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ?” என்றார். |
27 | பின்னர் பாலாக்கு பிலயாமிடம், “மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன்.ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும்” என்றான். |
28 | அங்ஙனமே பாலாக்கு பிலயாமைப் பெகோரின் கொடுமுடிக்குக் கொண்டு போனான்: அது பாலை நிலத்தை நோக்கியவாறு அமைந்திருந்தது. |
29 | பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டும்: எனக்கு இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் ஏற்பாடு செய்யும்” என்றார். |
30 | பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்து ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான். |