1 | இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை! |
2 | சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! |
3 | குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்: வாள் மின்னுகின்றது: ஈட்டி பளபளக்கின்றது: வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்: பிணங்கள் குவித்து கிடக்கின்றன: செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை: அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர். |
4 | அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தனங்களால் மற்ற வேற்றினத்தாரையும் தன் மயக்கும் கவர்ச்சியால் பல இனங்களையும் ஏமாற்றிய அந்த விலைமகளின் எணண்ற்ற வேசித்தனங்களே இதற்குக் காரணம்! |
5 | இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கெதிராக நான் எழும்புவேன்: நீ உடுத்தியிருக்கும் ஆடையை உன் முகத்துக்கு மேலாகத் தூக்குவேன்: மற்ற வேற்றினத்தார் உன் திறந்த மேனியையும் அரசுகள் உன் அவமானத்தையும் பார்க்கும்படி செய்வேன். |
6 | அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்: உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன். |
7 | உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, “நினிவே பாழாய்ப் போனது: அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?” என்று சொல்வார்கள். உன்னை தேற்றுவோரை எங்கே தேடுவேன்? |
8 | நைல் நதியின் கரையருகில் நீரால் சூழப்பட்ட, கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று இருந்தாயோ? |
9 | எத்தியோப்பியாவும் எகிப்தும் அந்த நகருக்கு வலிமையாய் இருந்தன: அதன் வலிமைக்கோ எல்லை இல்லை: பூத்தும் லிபியாவும் அதற்குத் துணையாய் இருந்தன. |
10 | இருந்தும், அதன் மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்: அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் மோதியடிக்கப்பட்டனர்: அதன் உயர்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது: அதன் பெரிய மனிதர் அனைவரும் சங்கிலிகளால் இறுகக் கட்டப்பட்டனர். |
11 | நீயும் குடிவெறியில் மயங்கிக் கிடப்பாய்: நீயும் உன் பகைவரிடமிருந்து தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய். |
12 | உன் அரண்கள் யாவும் முதலில் பழுத்த கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை: அத்தி மரங்களைப் பிடித்து உலுக்கும்போது பழங்கள் தின்பதற்கு வாயில் விழும். |
13 | உன் போர்வீரர்கள் உன் பெண்களைப் போன்றவர்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்களுக்காகத் திறந்து கிடக்கின்றன: உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின. |
14 | முற்றுகை நாள்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை: உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து: களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு: செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு. |
15 | ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும்: வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்: வெட்டுக்கிளிபோல் அது உன்னை விழுங்கிவிடும்: வெட்டுக்கிளிபோல் நீங்கள் பலுகுங்கள்: பச்சைக்கிளிபோல் நீங்கள் பெருகுங்கள். |
16 | விண்மீன்களைவிட மிகுதியாக உன் வணிகர்களைப் பெருகச் செய்தாய்: இந்த வெட்டுக்கிளிகள் இறக்கையை விரித்துப் பறந்தோடிவிடும். |
17 | உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும் உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்: குளிர்ந்த நாளில் அவை வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன: கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன: அதன்பின் அவை இருக்குமிடம் யாருக்கும் தெரியாது. |
18 | அசீரிய மன்னனே! உன் ஆயர்கள் துயில் கொண்டனர்: உன் படைத் தலைவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்: கூட்டிச் சேர்க்க யாருமின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப் போயினர். |
19 | உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது: உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்: ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை. |