1 | நினிவேயைக் குறித்த இறைவாக்கு: எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல். |
2 | ஆண்டவர் அநீதியைப் பொறாத இறைவன்: பழிவாங்குபவர்: ஆண்டவர் பழிவாங்குபவர்: வெகுண்டெழுபவர்: தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்: தம் பகைவர்மீது சினம் கொள்பவர். |
3 | ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்: ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார். சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி: மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்! |
4 | அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார்: ஆறுகளையெல்லாம் வற்றிப்போகச் செய்கின்றார்: பாசானும் கர்மேலும் காய்ந்து போகின்றன: லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன. |
5 | அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன: குன்றுகள் கரைகின்றன: நிலமும் உலகும் அதில் குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன. |
6 | அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் முன் நிற்பவன் யார்? தீயைப்போல் அவரது கோபம் கொட்டுகின்றது: பாறைகளும் அவர்முன் தவிடு பொடியாகின்றன. |
7 | ஆண்டவர் நல்லவர்: துன்பநாளில் அவர் காவலரண் ஆவார்: அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார். |
8 | தம் எதிரிகளைப் பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே முற்றிலும் அழித்திடுவார்: தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார். |
9 | ஆண்டவரைப்பற்றி நீங்கள் நினைப்பது என்ன? அவர் முற்றிலும் அழித்துவிடுவார்: தீமை மீண்டும் தலைதூக்காது. |
10 | குடிவெறியில் மயங்கிக் கிடக்கும் அவர்கள் பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும் காய்ந்த சருகுபோலும் முற்றிலும் எரிந்துபோவார்கள். |
11 | ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டித் தீய ஆலோசனைகளைக் கூறுபவன் உன்னிடமிருந்து தோன்றினான். |
12 | ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் வல்லவர்களாயினும் பெரும் தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்துவிடுவார்கள்: உன்னை நான் இதுவரை துன்புறுத்தியிருந்தாலும் இனிமேல் உன்னைத் துன்புறுத்தமாட்டேன. |
13 | இப்பொழுதே, உன்மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை நான் அறுத்துவிடுவேன்.” |
14 | ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட திர்ப்பு இதுவே: “உன் பெயரைத்தாங்கும் வழிமரபே இல்லாமல் போகும்: உன் தெய்வங்களின் கோவிலில் உள்ள செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன். நானே உனக்கு அங்குப் புதை குழி வெட்டுவேன்: ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன். |
15 | “வெற்றி! வெற்றி!” என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்: அவன் முற்றிலும் அழிந்து விட்டான். |