வேதாகமத்தை வாசி

லேவியராகமம் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியது: ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது:
3அருள்பொழிவு பெற்ற குரு பாவம் செய்து மக்கள்மீது குற்றப்பழி வந்தால், தான் செய்த பாவத்தை முன்னிட்டுப் பழுதற்ற ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்குச் செலுத்துவாராக.
4சந்திப்புக் கூடார நுழைவாயிலில், ஆண்டவர் திருமுன் அதைக்கொண்டு வந்து, அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆண்டவர் திருமுன் அதைக் கொல்வார்.
5அருள்பொழிவு பெற்ற குரு அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அதைச் சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து,
6அந்த இரத்தத்தில் தன் விரலைத் தோய்த்துத் தூயகத்தின் தொங்குதிரைக்கு எதிரே ஆண்டவர் திருமுன் ஏழுமுறை தெளிப்பாராக.
7குரு அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் நறுமணத்தூப பீடக்கொம்புகளில் பூசுவார்.காளையின் எஞ்சிய இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி அடித்தளத்தில் ஊற்றுவார்.
8பாவம் போக்கும் பலிக்காளையின் எல்லாக் கொழுப்பையும் குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பு முழுவதையும் எடுப்பார்.
9மேலும் இரு சிறுநீரகங்கள், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பு, சிறுநீரகங்களை அடுத்துக் கல்லீரலின்மேல் உள்ள சவ்வு ஆகியவற்றை
10நல்லுறவுப் பலிக் காளையிலிருந்து எடுப்பதுபோல எடுத்து, குரு அவற்றை எரிபலிபீடத்தின்மேல் எரிப்பார்.
11காளையின் தோலையும் அதன் இறைச்சியையும் தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும்
12காளை முழுவதையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற தூய்மையான இடத்தில் கொண்டுபோய் விறகுக்கட்டைகளிட்டு நெருப்பால் எரிக்க வேண்டும்.சாம்பல் கொட்டும் இடத்தில் அனைத்தையும் சுட்டெரிக்க வேண்டும்.
13இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால்,
14அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும்.
15மக்கள் கூட்டமைப்பின் பெரியோர் அனைவரும் ஆண்டவர் திருமுன் தம் கைகளைக் காளையின் தலைமேல் வைப்பார்கள்.ஆண்டவர் திருமுன் அந்தக் காளை கொல்லப்படும்.
16அருள்பொழிவு பெற்ற குரு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவருவார்.
17குரு அந்த இரத்தத்தில் தம் விரலைத் தோய்த்து ஆண்டவர் திருமுன் தொங்குதிரைக்கு முன்பாகத் தெளிப்பார்.
18சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடக் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தை எல்லாம் சந்திப்புக்கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
19காளையின் கொழுப்பு முழுவதையும் எடுத்துப் பலிபீடத்தில் எரிப்பார்.
20பாவம் போக்கும் பலிக்காளைக்குச் செய்ததுபோல, இந்தக் காளைக்கும் செய்து, குரு அவர்களுக்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.அப்பொழுது அவர்கள் மன்னிப்புப் பெறுவர்.
21முன்னைய காளையை எரித்ததுபோல இதையும் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்ச் சுட்டெரிப்பாராக.இது சபையாருக்கான பாவம்போக்கும் பலி.
22தலைவன் ஒருவன் தன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப்பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,
23தான் செய்தது பாவமென்று அவனுக்குத் தெரியவரும்போது, வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு கிடாயைப் பலியாகக் கொண்டு வருவான்.
24அந்த ஆட்டுக்கிடாயின் தலைமேல் அவன் தன் கையை வைத்து, எரிபலிப்பொருள் வெட்டப்படும் இடத்தில், ஆண்டவருக்குமுன் அந்தக்கிடாயைப் பலிகொடுப்பான்: இது பாவம் போக்கும் பலி.
25குரு பாவம் போக்கும் பலிஇரத்தத்தில் சிறிது தம்விரலால் எடுத்து எலிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
26அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார்.குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்: அவன் மன்னிப்புப் பெறுவான்.
27பொதுமக்களின் ஒருவர் ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப் பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,
28தாம் செய்தது பாவம் என்று அவருக்குத் தெரியவரும்போது, அவர் செய்த பாவத்தை முன்னிட்டு, பழுதற்ற ஒரு வெள்ளாட்டுப் பெண் குட்டியைப் பலியாகக் கொண்டு வருவார்.
29பாவம் போக்கும் பலியின் தலைமேல் தம் கையை வைத்து, எரிபலியிடும் இடத்தில் அந்தப் பாவம் போக்கும் பலியாட்டை அடிப்பார்.
30குரு அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து, எரிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்விவிடுவார்.
31அதன் கொழுப்பு முழவதையும் நல்லுறவு பலியிலுள்ள கொழுப்பைப் போன்று எடுத்துப் பலிபீடத்தின் மேல் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக குரு எரித்துப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.அந்த மனிதரும் மன்னிப்புப் பெறுவார்.
32பாவக்கழுவாய் பலியாக அவர் ஓர் ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்தால் அது பழுதற்ற பெண் ஆட்டுக் குட்டியாக இருக்கவேண்டும்.
33அந்தப் பாவம்போக்கும் பலிப்பொருளின் தலைமீது தம் கையை வைத்து எரிபலியை அடிக்க வேண்டும்.அதே இடத்தில், இப்பாவம் போக்கும் பலியையும் அடிக்க வேண்டும்.
34குரு அந்தப் பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து எரிபலிபீடக் கொம்புகளின்மேல் பூசி, எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
35அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப் பலிக்கிடாயின் கொழுப்பை எடுப்பது போன்று எடுத்து, எரிபலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கான நெருப்புப்பலி போல எரித்துவிடுவார். இவ்வாறாக அந்த மனிதர் செய்த பாவத்திற்குக் குரு பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்: அவரும் மன்னிப்புப் பெறுவார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.