1 | ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக உணவுப்படையல் செய்ய வந்தால், அவர் படையல் மெல்லிய மாவாய் இருக்கட்டும்.அவர் அதன் மேல் எண்ணெய் வார்த்து சாம்பிராணிப் பொடி தூவி, |
2 | அதை ஆரோனின் புதல்வராகிய குருக்களிடம் கொண்டு வருவார்.குரு அந்த எண்ணெய், சாம்பிராணி கலந்த அந்த மாவில் கை நிறைய எடுப்பார்.நினைவுப் படையலாக அதைக் குரு பலிபீடத்தின் மேல் எரிப்பார்.இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப் பலி ஆகும். |
3 | உணவுப் படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் உரியது.ஆண்டவருக்கான நெருப்புப்பலிகளில் அது மிகவும் தூயது. |
4 | நேர்ச்சையாக அடுப்பிலே சுட்ட உணவுப்படையலைச் செலுத்தினால், அது எண்ணெயில் பிசைந்த மெல்லியமாவில் செய்த புளிப்பற்ற அதிரசங்களும், எண்ணெயில் தோய்த்த அடைகளுமாய் இருக்கட்டும். |
5 | உனது நேர்ச்சை தட்டையான சட்டியில் சுட்ட உணவுப்படையலாக இருந்தால், அது எண்ணெய் வார்த்த புளிப்பற்ற மெல்லிய மாவால் செய்யப்பட வேண்டும். |
6 | அதைத் துண்டுகளாகப் பிட்டு அதன்மேல் எண்ணெய் விட வேண்டும், அது ஓர் உணவுப் படையல். |
7 | உனது நேர்ச்சை, சட்டியில் செய்யப்படுகிற உணவுப்படையல் எனில், அது மெல்லிய மாவால் எண்ணெயில் செய்யப்படவேண்டும். |
8 | இம்முறையில் செய்யப்பட்டவற்றை ஆண்டவருக்கு உணவுப் படையலாகச் செலுத்துவாயாக.அது குருவிடம் வந்து சேரும்போது அவர் அதைப் பலிபீடத்துக்குக் கொண்டு போவார். |
9 | குரு உணவுப் படையலிலிருந்து நினைவுப்படையலைத் தனித்தெடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிப்பார்.இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி. |
10 | உணவுப்படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் உரியது.ஆண்டவருக்கான நெருப்பும் பலிகளில் இது மிகவும் தூயது. |
11 | ஆண்டவருக்குச் செலுத்தும் உணவுப்படையல் எதுவும் புளிப்பேறியதாய்ச் செய்யப்படலாகாது.புளிக்காரம், தேன் எதையுமே ஆண்டவருக்கு நெருப்புப்பலியாக்க வேண்டாம். |
12 | அவற்றை, முதற்பலன் படையலாக ஆண்டவருக்குச் செலுத்தலாம்.ஆனால், இவை இனிய நறுமணமாகப் பலிபீடத்தில் எரிக்கப்படலாகாது. |
13 | நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும்.உன் உணவுப் படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக் குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக. |
14 | முதற்பலன்களின் உணவுப் படையலை ஆண்டவருக்கு செலுத்தினால், அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டி உதிர்த்து, உன் முதற்பலன்களின் உணவுப் படையலாகச் செலுத்த வேண்டும். |
15 | அதன்மேல் எண்ணெய் ஊற்றிச் சாம்பிராணி போடவேண்டும்.இதுவும் ஓர் உணவுப் படையலே. |
16 | உதிர்க்கப்பட்டவற்றிலும் எண்ணெயிலுமிருந்து நினைவுப் படையலுக்கான பகுதியை குரு எடுத்துச் சாம்பிராணியோடு எரித்து விடுவார்.இது ஆண்டவருக்கான நெருப்புப்பலி. |