1 | சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: என்னுடைய திரு மலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்: அது வந்து விட்டது. |
2 | அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்: மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்: விடியற்காலை ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது: இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை: இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை. |
3 | அவை வரும்பொழுது தீயும் தணலும் கூட்டெரிக்கும். அவற்றின் வருகைக்குமுன் நாடு ஏதேன் தோட்டம் போலிருக்கும்: அவை போனபின்போ பாலைநிலம்போல் ஆகிவிடும்: அவற்றுக்கு எதுவுமே தப்பமுடியாது. |
4 | பார்வைக்கு அவை குதிரைகள் போலிருக்கின்றன: போர்க் குதிரைகள்போல் அவை விரைந்தோடுகின்றன. |
5 | அவை தேர்ப்படைகளின் கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு, சருகுகளைச் சுட்டெரிக்கும் நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி, போருக்கு அணிவகுத்த ஆற்றல் மிக்க படைகள்போல் மலையுச்சிகளின்மேல் குதித்துச் செல்லும். |
6 | அவற்றின்முன் மக்களினத்தார் நடுங்குவர்: அச்சத்தால் எல்லாரின் முகமும் வெளிறிப் போகும். |
7 | அவை போர் வீரர்களைப்போல் தாவி ஓடுகின்றன: படை வீரர்களைப்போல் சுவர்மேல் ஏறுகின்றன: ஒவ்வொன்றும் தனக்குரிய பாதையில் போகின்றது: தங்கள் இலக்கைவிட்டு அவை பிறழ்வதில்லை. |
8 | ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை: ஒவ்வொன்றும் தன் வழி தவறாது செல்கின்றது: போர்க் கருவிகளுக்கிடையே சிக்கிக் கொண்டாலும் அவை வரிசை கலையாமல் முன்னேறுகின்றன. |
9 | நகருக்குள் பாய்ந்து செல்கின்றன: மதில்மேல் ஓடுகின்றன: வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த் திருடனைப்போல் உள்ளே நுழைகின்றன. |
10 | அவற்றுக்கு முன்பாக நிலம் நடுங்குகின்றது: வானம் அசைகின்றது: கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன: விண்மீன்களும் ஒளி இழந்து போகின்றன. |
11 | ஆண்டவர் தம் படைகள்முன் முழக்கம் செய்கின்றார்: அவரது பாளையம் மிக மிகப் பெரிது: அவர் தம் வாக்கை நிறைவேற்ற ஆற்றல் உடையவர். ஏனெனில் ஆண்டவரின் நாள் மிகக் கொடியது: அச்சம் தர வல்லது, அதைக் தாங்கிக் கொள்ளக் கூடியவர் எவர்? |
12 | “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். |
13 | “நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.” அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். |
14 | ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்? |
15 | சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். |
16 | மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்: புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்: மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்: மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும். |
17 | ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், “ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்: உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக! “அவர்களுடைய கடவுள் எங்கே?” என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ? |
18 | அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார். |
19 | ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே: “நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்: நீங்களும் நிறைவு பெறுவீர்கள்: இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன்.” |
20 | வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு விரட்டியடிப்பேன்: அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்: ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது. |
21 | நிலமே நீ அஞ்சாதே: மகிழ்ந்து களிகூரு: ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார். |
22 | காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்: ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன: மரங்கள் கனி தருகின்றன: அத்திமரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன. |
23 | சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்: ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்: முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார். |
24 | போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்: ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும். |
25 | நான் உங்களுக்கு எதிராக அனுப்பிய என் பெரும் படையாகிய வெட்டுப் புழுக்கள், இளம் வெட்டுக்கிளிகள், துள்ளும் வெட்டுக்கிளிகள், வளர்ந்த வெட்டுக்கிளிகள் ஆகியவை அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன். |
26 | நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்: உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள். |
27 | இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். |
28 | அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். |
29 | அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். |
30 | இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்: எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். |
31 | அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்: நிலவோ இரத்தமாக மாறும். |
32 | அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்: ஏனெனில், ஆண்டவர் கூறிய வண்ணமே, சீயோன் மலையிலும் எருசலேமிலும் எஞ்சியிருப்போர் வாழ்வு அடைவர்: ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பார்கள். |