1 | பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே: |
2 | முதியோரே, இதைக் கேளுங்கள்: நாட்டிலிலுள்ள குடிமக்களே, நீங்கள் அனைவரும் செவி கொடுங்கள்: உங்கள் நாள்களிலாவது, உங்கள் தந்தையரின் நாள்களிலாவது இதுபோன்று நடந்ததுண்டோ? |
3 | இதைக் குறித்து உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்: உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்: அவர்களின் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும். |
4 | வெட்டுப் புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது: இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக் கிளி தின்றது: துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை வளர்த்த வெட்டுக்கிளி தின்றழித்தது. |
5 | குடிவெறியர்களே, விழித்தெழுந்து அழுங்கள்: திராட்சை இரசம் குடிக்கிறவர்களே, நீங்கள் அனைவரும் அந்த இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்: ஏனெனில், அது உங்கள் வாய்க்கு எட்டாமற் போயிற்று. |
6 | ஆற்றல்மிக்க, எண்ணிக்கையில் அடங்காத வேற்றினம் ஒன்று என் நாட்டிற்கு எதிராய் எழும்பி இருக்கின்றது: அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்: பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் அதற்கு உண்டு. |
7 | என்னுடைய திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று: அத்தி மரங்களை முறித்துப் போட்டது: அவற்றின் பட்டைகளை முற்றிலும் உரித்துக் கீழே எறிந்தது: அவற்றின் கிளைகள் வெளிறிப் போயின. |
8 | கணவனாக வரவிருந்தவனை இழந்ததால் சாக்கு உடை உடுத்திக் கொள்ளும் கன்னிப் பெண்ணைப்போல் கதறி அழுங்கள். |
9 | ஆண்டவரது இல்லத்தில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமல் ஒழிந்தன. ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் குருக்கள் புலம்பி அழுகின்றார்கள். |
10 | வயல்வெளிகள் பாழாயின: நிலமும் புலம்புகின்றது: ஏனெனில், தானிய விளைச்சல் அழிவுற்றது: இரசம் தரும் திராட்சைக் கொடிகள் காய்ந்துபோயின: எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள் பட்டுப் போயின: |
11 | உழவுத் தொழில் செய்வோரே, கலங்கி நில்லுங்கள்: திராட்சைத் தோட்டக்காரர்களே, அழுங்கள். ஏனெனில், கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற் போயின: வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று. |
12 | திராட்சைக் கொடி வாடிப் போகின்றது: அத்தி மரம் உலர்ந்துபோகின்றது: மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் யாவும் வதங்குகின்றன: மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது. |
13 | குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு தேம்பி அழுங்கள்: பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்: என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்: ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின. |
14 | உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்: ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்: ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். |
15 | மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்: |
16 | உணவுப் பொருளெல்லாம் பாழாய்ப் போனதை நம் கண்கள் காணவில்லையா? நம் கடவுளின் இல்லத்திலிருந்து மகிழ்ச்சியும் அக்களிப்பும் இல்லாமற்போனதை நாம் பார்க்கவில்லையா? |
17 | விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின: பண்டசாலைகள் பாழடைந்துவிட்டன: களஞ்சியங்கள் இடிந்து விழுந்தன: கோதுமை விளைச்சல் இல்லாமற் போயிற்று. |
18 | காட்டு விலங்கினங்கள் என்னவாய்த் தவிக்கின்றன! மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன: ஆட்டு மந்தைகளும் இன்னலுற்றுத் தவிக்கின்றன! |
19 | ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள் தீக்கிரையாயின: வயல்வெளியிலிருந்தே மரங்கள் அனைத்தையும் நெருப்பு சுட்டெரித்துவிட்டது. |
20 | நீரோடைகள் வற்றிப்போனதால் காட்டுவிலங்குகள்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன: பாலைநிலத்திலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு விழுங்கிவிட்டது. |