வேதாகமத்தை வாசி

ஓசியா 7

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது, எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்: சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்: அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்: திருடன் உள்ளே நுழைகின்றான்: கொள்ளையர் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.
2அவர்களுடைய தீவினைகளையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கின்றேன் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்பொழுது அவர்கள் செயல்களே அவர்களை வளைத்துக் கொண்டன. அவை என் கண்முன் இருக்கின்றன.
3தங்கள் தீமையினால் அரசனையும், தங்கள் பொய்களினால் தலைவர்களையும் அவர்கள் மகிழ்விக்கின்றார்கள்.
4அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்: எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்: அப்பம் சுடுபவன் மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும்வரையில் கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள்.
5“நம் அரசனின் திருநாள்!” என்று சொல்லித் தலைவர்கள் திராட்சை இரசத்தால் போதையேறிக் கிடந்தார்கள்: அரசனும் ஏளனக்காரரோடு கூடிக் குலாவினான்.
6அவர்களின் இதயம் சதித்திட்டத்தால் அடுப்பைப்போல் எரிகின்றது: அவர்களின் கோபத்தீ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்: அது காலையில் நெருப்பைப் போலக் கொழுந்துவிட்டு எரியும்.
7அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாய் இருக்கின்றார்கள்: தங்களின் ஆட்சியாளர்களை விழுங்குகின்றார்கள்: அவர்களின் அரசர்கள் அனைவரும் வீழ்ச்சியுற்றார்கள்: அவர்களுள் எவனுமே என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.
8எப்ராயிம் வேற்றினத்தாருடன் கலந்து வாழ்கின்றான்: எப்ராயிம் ஒருபுறம் வெந்த அப்பமாயிருக்கின்றான்:
9அன்னியர் அவன் ஆற்றலை உறிஞ்சிவிட்டனர்: அதை அவன் அறியவில்லை. அவனுக்கு நரைவிழுந்துவிட்டது: அதையும் அவன் அறியவில்லை.
10இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று சொல்கின்றது: ஆயினும், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை: இவை அனைத்திற்குப் பிறகும் அவரைத் தேடவில்லை.
11எப்ராயிம் அறிவில்லாப் பேதைப் புறாவைப்போல் இருக்கின்றான்: அவர்கள் எகிப்தைத் துணைக்கு அழைக்கின்றார்கள்: அசீரியாவிடம் புகலிடம் தேடுகின்றார்கள்.
12அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் விரித்திடுவேன்: வானத்துப் பறவைகளைப்போல அவர்களைக் கீழே விழச் செய்வேன்: அவர்கள் தீச்செயல்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன்.
13அவர்களுக்கு ஐயோ கேடு! என்னை விட்டு விலகி, அலைந்து திரிகின்றார்கள்: அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கின்றது, அவர்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்: நான் அவர்களை மீட்டு வந்தேன்: ஆனால் அவர்கள் எனக்கு எதிராகப் பொய் சொல்கின்றார்கள்.
14தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை, அதற்கு மாறாக, தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகின்றார்கள்: கோதுமைக்காகவும் திராட்சை இரசத்திற்காகவும், தங்களையே பிய்த்துப் பிடுங்கிப் கொள்கின்றார்கள்:
15நானே அவர்களைப் பயிற்றுவித்து, அவர்கள் புயங்களை வலிமையுறச் செய்திருந்தும் எனக்கு எதிராகத் தீங்கு நினைக்கின்றார்கள்.
16பாகாலை நோக்கியே திரும்புகின்றார்கள்: நம்பமுடியாத வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்: அவர்களுடைய தலைவர்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு வாளால் மடிவார்கள்: இதுவே எகிப்தை முன்னிட்டு அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.