வேதாகமத்தை வாசி

எசேக்கியேல் 7

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2மானிடா! இஸ்ரயேல் நாட்டை நோக்கித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ முடிவு வந்துவிட்டது! நாட்டின் நான்கு மூலைகள் வரையிலும் முடிவு வந்துவிட்டது!
3இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நான் என் சினத்தை உன்மீது அனுப்புவேன்: உன் நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பிடுவேன்: வெறுப்புக்குரிய உன் எல்லாச் செயல்களுக்கும் தக்க பதிலளி கொடுப்பேன்.
4என் கண்களில் உனக்கு இரக்கம் இராது: நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக, உன் நடத்தைக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
5தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!
6முடிவு வந்துவிட்டது! வந்து விட்டது முடிவு! உனக்கெதிராக அது எழுந்து விட்டது: இதோ, அது வருகின்றது.
7நாட்டில் வாழ்வோனே! எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது. அந்த வேளை வந்தேவிட்டது. அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல: குழப்பத்தின் நாளே. நெருங்கிவிட்டது அந்நாள்.
8இப்போது விரைவில் என் சீற்றத்தை உன்மேல் பாய்ச்சி என் சினத்தை ஆற்றிக்கொள்வேன்: உன் வழிகளுக்கேற்ப உனக்குத் தீர்ப்பிட்டு, உன் அருவருப்புகளுக்குத் தக்கபடி உனக்குப் பதிலடி கொடுப்பேன்.
9என் கண்களில் உனக்கு இரக்கம் இராது: நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக உன் நடத்தைக்கும் உன் நடுவிலிருக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்றும் நானே தாக்குகிறேன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
10இதோ, அந்த நாள்! அது வந்துவிட்டது! கேடுகாலம் நெருங்கி விட்டது: அநீதி துளித்து விட்டது: செருக்கு அரும்பிவிட்டது.
11வன்முறை, கொடுமையின் கோலாக வளர்ந்துள்ளது: அவர்களோ அவர்களது செழிப்போ அவர்களது செல்வமோ, எதுவுமே தப்ப முடியாது. அவர்களுக்குள் யாருமே மேன்மையுடன் திகழ முடியாது.
12அந்நேரம் வந்துவிட்டது: அந்நாள் நெருங்கிவிட்டது. வாங்குவோர் மகிழ வேண்டாம்: விற்போர் வருந்த வேண்டாம். ஏனெனில் அக்கூட்டத்தினர் அனைவருமே சினத்துக்கு இலக்காகிவிட்டனர்.
13அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால்கூட, விற்றோர் விற்கப்பட்ட பொருளை மீண்டும் அடையவே முடியாது. ஏனெனில், அக்கூட்டத்தினர் அனைவரையும் பற்றிய இக்காட்சி மாறாது. அவர்கள் தீயவராய் இருப்பதால், எவரும் தம் உயிரை நிலைக்கச் செய்ய முடியாது.
14அவர்கள் எக்காளம் ஊதி எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும், போரிடச் செல்வோர் யாருமில்லை. எனெனில் என் சினம் அக்கூட்டத்தினர் அனைவர் மேலும் உள்ளது.
15வெளிப்புறம் வாளும் உட்புறம் பஞ்சமும் கொள்ளை நோயும் உள்ளன. வயலில் இருப்போர் வாளால் மடிவர். நகரில் இருப்போரையோ பஞ்சமும் கொள்ளை நோயும் விழுங்கும்.
16அவர்களுள் சிலர் பிழைத்து, தப்பி ஓடினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் மலைகளில் தம் குற்றங்களுக்காகப் பள்ளத்தாக்குப் புறாக்களைப் போல்ப் புலம்புவர்.
17கைகள் எல்லாம் வலுவிழந்து போகும்: முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப்போல் ஆகிவிடும்.
18அவர்கள் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொள்வர்: திகில் அவர்களை மூடிக்கொள்ளும்: முகங்கள் எல்லாம் வெட்சி நாணும்: அவர்களின் தலைகள் எல்லாம் மொட்டையடிக்கப்படும்.
19தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிவர்: பொன் அவர்களுக்குத் தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்: ஆண்டவரது சீற்றம் பொங்கும் அந்நாளில் அவர்களின் வெள்ளியாலும் பொன்னாலும் அவர்களை விடுவிக்க இயலாது: அவர்கள் மனநிறைவு பெறுவதும் இல்லை: அவர்களின் வயிறு நிரம்புவதும் இல்லை: ஏனெனில் அவர்களது குற்றப்பழியே அவர்களுக்கு முட்டுக்கட்டையாக ஆகிவிட்டது.
20அழகிய அணிகலன்களைப் பகட்டுக்காகப் பயன்படுத்தினர்: அவற்றால் தங்கள் அருவருக்கத்தக்க சிலைகளையும் வெறுக்கத்தக்க பொருள்களையும் செய்துகொண்டனர்: எனவே அவற்றை அவர்களுக்குத் தீட்டான பொருளாக மாறச் செய்தேன்.
21மேலும் அதை அன்னியர் கையில் கொள்ளைப் பொருளாகவும் உலகின் தீயோர் சூறையாடும் பொருளாகவும் கொடுப்பேன்: அவர்கள் அதைக் கறைப்படுத்துவார்கள்.
22அவர்கள் செய்வதைக் கண்டுகொள்ள மாட்டேன்: அவர்களும் என் அரும்பொருளைத் தீட்டுப்படுத்துவார்கள்: கள்வரும் அதனுள் நுழைந்து கறைப்படுத்துவர்.
23நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்: நாடு கொலைத் தீர்ப்புகளாலும் நகர் வன்செயல்களாலும் நிறைந்துள்ளன.
24ஆகையால் வேற்றினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவேன்: அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்: வலியோரின் ஆணவத்தை அடக்குவேன்: அவர்களின் திருத்தலங்கள் கறைப்படுத்தப்படும்.
25கடுந்துயர் அடையும்பொழுது, அமைதியை நாடுவர்: ஆனால் அது கிடைக்காது.
26அழிவுக்குமேல் அழிவு உண்டாகும், வதந்திக்கு மேல் வதந்தி பரவும்: இறைவாக்கினரின் காட்சியை நாடுவர்: ஆனால் குருக்களிடம் திருச்சட்டமும் மூப்பர்களிடம் அறிவுரையும் அற்றுப்போகும்.
27அரசன் புலம்புவான்: இளவரசன் அவநம்பிக்கையை அணிந்திருப்பான்: நாட்டு மக்களின் கைகளோ நடுங்கிக்கொண்டிருக்கும்: அவர்களின் வழிகளுக்கேற்ப நானும் அவர்களுக்குச் செய்வேன்: அவர்களின் தீர்ப்பு முறைகளின்படியே நானும் அவர்களுக்குத் தீர்ப்பிடுவேன்: அப்போது நானே ஆண்டவரென அவர்கள் அறிந்துகொள்வர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.