1 | “மானிடா! மழிக்கும் கத்தியைப் போன்று கருக்கலான ஒரு வாளை எடுத்து, அதைக்கொண்டு உன் தலையையும் தாடியையும் மழித்துக்கொள். ஒரு தராசை எடுத்து அந்த முடியைப் பங்கிடு. |
2 | அதில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாள்கள் முடியும்போது நகரின் நடுவில் நெருப்பினால் சுட்டெரி: மூன்றிலொரு பங்கை நகரைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போடு: மூன்றில் ஒரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு. ஏனெனில் நான் அவர்களை உருவிய வாளுடன் பின்தொடர்வேன். |
3 | அதில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனைகளில் முடிந்து வை. |
4 | பிறகு அதில் இன்னும் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயிலிட்டுச் சுட்டெரி. அதனினின்று இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் எதிராகத் தீ புறப்படும்.” |
5 | தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினத்தாரிடையேயும் சூழ்ந்துள்ள நாடுகள் நடுவிலும் நான் திகழச் செய்த எருசலேம் இதுவே. |
6 | அம்மக்கள் வேற்றினத்தாரைவிடக் கேடு கெட்டவர்களாய் என் நீதிநெறிகளை எதிர்த்தார்கள். தங்கைச் சுற்றியுள்ள நாடுகளைவிட மிகுதியாக என் நியமங்களை எதிர்த்தார்கள். ஏனெனில் அவர்கள் என் நீதிநெறிகளை ஒதுக்கித் தள்ளி, என் நியமங்களின்படி நடவாமற் போனார்கள். |
7 | எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களைக் காட்டிலும் அதிகமாய் நீங்கள் கிளர்ச்சி செய்தீர்கள்: என் நியமங்களின்படி நடக்கவில்லை. என் நீதி நெறிகளைக் கடைப்பிடிக்கவில்லை. உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களின் நீதிநெறிகளின்படி நீங்கள் நடக்கவில்லை. |
8 | ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: வேற்றினத்தார் கண்முன் நானே உங்கள் நடுவிலிருந்து உங்களுக்கெதிராகத் தீர்ப்பு வழங்குவேன். |
9 | உங்கள் எல்லா அருவருப்பான செயல்களுக்காகவும், நான் இதுவரை செய்யாததும் இனிச் செய்யாதிருக்கப் போவதுமான ஒன்றை உங்கள் நடுவே செய்யப்போகிறேன். |
10 | எனவே உங்களுள் பெற்றோர் தம் பிள்ளைகளையும் பிள்ளைகள் தம் பெற்றோரையும் தின்பர்: உங்களுக்கு நான் தண்டனைத் தீர்ப்பு அளித்து உங்களுள் எஞ்சியிருப்போர் அனைவரையும் எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன். |
11 | என்மேல் ஆணை! வெறுப்புக்கும் அருவருப்புக்கும் உரிய உங்கள் எல்லாச் செயல்களாலும் என் திருத்தூயகத்தை நீங்கள் தீட்டுப்படுத்தியதால் நான் உங்களைவிட்டு விலகிவிடுவேன். என் கண்கள் உங்களுக்கு இரக்கம் காட்டா. இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு. |
12 | உங்களுள் மூன்றிலொரு பங்கினர் கொள்ளை நோயால் மடிவர்: பஞ்சத்தால் அழிவர்: இன்னும் மூன்றிலொரு பங்கினர் வாளால் வீழ்வர்: எஞ்சிய மூன்றிலொரு பங்கினரை எத்திசையிலும் சிதறுண்டு போகச் செய்து, அவர்களை உருவிய வாளோடு தொடர்வேன். |
13 | இவ்வாறு என் சினம் தணியும்: அவர்கள்மீது எனக்குள்ள சீற்றத்தை ஆற்றிக்கொள்வேன், பழிதீர்த்துக் கொள்வேன். என் சீற்றம் அவர்கள் மீது பாய்ந்து முடியும்போது ஆண்டவராகிய நான் என் பேரார்வத்தினால் பேசியுள்ளேன் என அவர்கள் அறிந்து கொள்வர். |
14 | இவ்வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களிடையே உன்னைப் பாழாக்கி, பழிச்சொல்லுக்கு ஆளாக்குவேன். |
15 | சினத்தோடும், சீற்றத்தோடும் உனக்கு நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும்போது, உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களுக்கு அது பழிச்சொல்லும் வசைமொழியும் எச்சரிக்கையும் திகிலுமாய் இருக்கும். ஆண்டவராகிய நான் பேசியுள்ளேன். |
16 | உங்களைப் பாழாக்குவதற்காக நான் வறட்சியின் கொடிய அம்புகளை அவர்கள்மீது எய்வேன். உங்களை அழிப்பதற்காகவே அவற்றை எய்வேன். உங்களிடையே வறட்சியை மிகுதிப்படுத்தி உங்கள் உணவின் தரவை நிறுத்திவிடுவேன். |
17 | நான் வறட்சியையும், கொடிய விலங்குகளையும் உங்கள் மேல் ஏவுவேன். அதனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை இழப்பீர்கள்: கொள்ளை நோயும் இரத்தக் களறியும் உங்களிடையே உண்டாகும். ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன். |