1 | ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன. |
2 | அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன. |
3 | அவர் என்னிடம், “மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா?” என்று கேட்டார். நான், “தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே” என்று மறுமொழி அளித்தேன். |
4 | அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. “உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்” என்று சொல். |
5 | தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். |
6 | நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்: உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள். |
7 | எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது. |
8 | நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை. |
9 | பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை: மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் “உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.” |
10 | எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர். |
11 | அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ “எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்” எனச் சொல்கிறார்கள். |
12 | எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். |
13 | அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். |
14 | என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்: நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
15 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
16 | மானிடா! நீ ஒரு கோலை எடுத்துக்கொள். அதில் “யூதாவுக்கும் அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உரியது” என்று எழுது. பின்னர் இன்னொரு கோலை எடுத்து அதில் “யோசேப்புக்கும் அவனோடு சேர்ந்த இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் உரிய எப்ராயிமின் கோல்” என்று எழுது. |
17 | அவை இரண்டும் உன் கையில் ஒரே கோலாயிருக்கும்படி, அவற்றை ஒன்றாகச் சேர். |
18 | உன் மக்களினத்தார் உன்னிடம், “இவற்றால் என்ன கூட்டிக்காட்ட விழைகிறீர்?” எனக் கேட்கையில், |
19 | அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் எப்ராயிமின் கையிலிருக்கும் யோசேப்பு மற்றும் அதனுடன் சேர்ந்த இஸ்ரயேல் குலங்களின் கோலை எடுத்து அதை யூதாவின் கோலுடன் சேர்த்து அவற்றை ஒரே கோலாய் மாற்றுவேன். அவை என் கையில் ஒரே கோலாய் இருக்கும். |
20 | நீ எழுதிய கோல்களை அவர்கள் கண்முன்னால் உன் கையில் பிடித்து, |
21 | அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன். |
22 | இஸ்ரயேலின் மலைகள்மிது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார். |
23 | அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்தக் குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்: நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். |
24 | என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசானய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்: என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர். |
25 | நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும் அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான். |
26 | நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். |
27 | என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்: நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். |
28 | என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்து கொள்வர். |