1 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
2 | மானிடா! உன் முகத்தைச் சேயிர் மலைக்கு நேராய்த் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்குரை. |
3 | அதற்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சேயிர் மலையே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன். என் கையை உனக்கெதிராய் நீட்டி உன்னைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன். |
4 | உன் நகர்களை இடிபாடுகளாய் மாற்றுவேன். நீ பாழிடமாய் இருப்பாய். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய். |
5 | ஏனெனில் முற்காலப் பகையை மனத்தில் கொண்டு நீ இஸ்ரயேலரை அவர்களின் துன்பகாலத்தில், அவர்களது தண்டனையின் உச்சக் கட்டத்தில் வாளுக்கு இரையாக்குமாறு கையளித்தாய். |
6 | எனவே, என்மேல் ஆணை! உன்னை இரத்தப் பழிக்குக் கையளிப்பேன். அப்பழி உன்னைத் தொடரும், நீ இரத்தம் சிந்துதலை வெறுக்காததால் அது உன்னைத் தொடரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
7 | சேயிர் மலையைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன். அதன் வழியாய்ச் செல்லும் போக்குவரத்தை நிறுத்துவேன். |
8 | உன் மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவேன். வாளால் கொல்லப்பட்டோர் உன் குன்றுகளிலும் பள்ளத் தாக்குகளிலும் எல்லா ஓடைகளிலும் வீழ்வர். |
9 | உன்னை என்றென்றும் பாழிடமாய் ஆக்குவேன். உன் நகரங்கள் குடியற்றுப்போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வாய். |
10 | ஆண்டவராகிய நான் அங்கே இருந்தபோதும் நீ இவ்விரு இனங்களும் நாடுகளும் என்னுடையவை: நான் அவற்றை உடைமையாக்கிக் கொள்வேன்” எனச் சொன்னாய். |
11 | எனவே, என் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராகக் காட்டிய பகைமைக்கும் சினத்திற்கும் பொறாமைக்கும் ஏற்ப, நான் உன்னை நடத்துவேன். நான் உன்னைத் தீர்ப்பிடும்போது, அவர்களிடையே என்னை அறியச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
12 | அப்போது, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராகச் சொன்ன எல்லா இழிசொற்களையும், ஆண்டவராகிய நான் கேட்டேன் என அறிந்து கொள்வாய். “அவை பாழாக்கப்பட்டுவிட்டன: இரையாகத் தரப்பட்டுள்ளன” என்று நீ சொன்னாய். |
13 | நீ எனக்கெதிராய்ப் பெருமை பாராட்டி, உன் வாயினால் எனக்கெதிராய்க் கட்டுப்பாடற்ற சொற்களை உரைத்தாய். அவற்றை நான் கேட்டேன். |
14 | எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உலகு முழுவதும் மகிழ்வடையும்படி நான் உன்னைப் பாழாக்குவேன். |
15 | இஸ்ரயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழாக்கப்படுகையில் நீ மகிழ்வடைந்ததால் நானும், உனக்கு அவ்வாறே நடக்கச் செய்வேன். சேயிர் மலையும் ஏதோம் முழுவதும் பாழிடமாகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர். |