1 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
2 | “மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது” என்று அலறுங்கள்: |
3 | ஏனெனில் அருகில் உள்ளது அந்த நாள்: ஆண்டவருக்குரிய அந்நாள் அண்மையில் உள்ளது: அது மேகத்தின் நாள்: வேற்றினத்தாருக்கு அழிவின் நாள். |
4 | எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்: கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்: எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில் அதன் செல்வங்கள் வாரிக்கொண்டு செல்லப்படும்: அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும். |
5 | எகிப்துடன் கூசு, பூத்து, லூது, அனைத்து அரேபியா, லிபியா மற்றும் நான் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர். |
6 | ஆண்டவர் கூறுவது இதுவே: எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்: அதன் பெருமைக்குரிய வலிமை தோல்வியுறும்: மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
7 | அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள் பாழாகிக் கிடப்பர்: அவர்களின் நகரங்கள், அழிந்த நகரங்கள் நடுவே அழிந்து கிடக்கும். |
8 | நான் எகிப்துக்குத் தீ வைத்து அதற்குத் துணையாயிருந்தோரை நொறுக்கும்போது “நானே ஆண்டவர்” என்பதை அறிந்து கொள்வர். |
9 | அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான் கப்பலில் தூதரை அனுப்புவேன்: எகிப்தின் அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்: ஏனெனில் அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது. |
10 | தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரின் கையால் எகிப்தின் செல்வத்தை அழிக்கப்போகின்றேன். |
11 | மக்களினங்களில் மிகவும் வலிமை வாய்ந்த அவன் படைகளும் நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்: எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி, கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர். |
12 | ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன். அன்னியர் துணையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் வெறுமையாக்குவேன். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன். |
13 | தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் சிலைகளை அழிப்பேன்: நோபில் இருக்கும் உருவங்களுக்கு முடிவுகட்டுவேன்: எகிப்தில் இனி மன்னன் இரான்: நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்புவேன். |
14 | பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்: சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்: நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன். |
15 | எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது என் சினத்தைக் கொட்டுவேன்: நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன். |
16 | எகிப்துக்கு நெருப்பிடுவேன்: சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்: புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்: தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும். |
17 | ஆவேன் மற்றும் பீபசேத்து நகர இளைஞர் வாளால் வீழ்வர்: அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும். |
18 | எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில், தெகபனகேசு நகரின் பகல் இரவாகும்: இறுமாப்புக்குரிய அதன் வலிமை அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்: மேகங்களால் அது மூடப்படும்: சிறையிருப்புக்கு அதன் சிற்றூர்கள் செல்லும். |
19 | இவ்வாறு நான் எகிப்தின் மீது தண்டனை வரச்செய்வேன். அப்போது “நானே ஆண்டவர்” என்பதை அறிந்து கொள்வர். |
20 | பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
21 | “மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை: வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை. |
22 | எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன். அவனுடைய இரு கைகளையும்-நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும்-முறித்து, அவன் கையினின்று வாளை விழச் செய்வேன். |
23 | மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன். |
24 | பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான். |
25 | நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். |
26 | எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும், நாடுகளிடையேயும் சிதறடிப்பேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.” |