வேதாகமத்தை வாசி

எசேக்கியேல் 19

                   
புத்தகங்களைக் காட்டு
1“நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,
2சொல்: சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய்! இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்.
3அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது: அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.
4வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்: அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.
5தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்: எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள்.
6அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று: அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.
7அது கோட்டைகளைத் தாக்கி, நகர்களைச் சூறையாடிற்று: அதன் கர்ச்சிக்கும் ஒலி கேட்டபோதெல்லாம் நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.
8அண்டை நாடுகளிலிருந்து வேற்றினத்தார் அதற்கெதிராக எப்பக்கமும் எழுந்தனர்: தங்கள் வலையை அதன்மீது வீச, அது அவர்கள் குழியில் விழுந்தது.
9அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர்.
10திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்: மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது.
11அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன: அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது.
12ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது: கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது: அதன் கனி உதிர்ந்து போயிற்று: தண்டு உலாந்து தீக்கிரையாயிற்று.
13இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது.
14அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது: அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்: இதனை இரங்கற்பாவவெனக் கொள்க.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.