வேதாகமத்தை வாசி

எசேக்கியேல் 10

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் உற்று நோக்கினேன்: இதோ! கெருபுகளுக்குமேல் அவற்றின் தலைக்கு மேலிருந்த விதானத்தில் நீலமணி இழைத்த அரியணை உருவத்தின் சாயலைப் போன்றதொன்று தெரிந்தது.
2அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரிடம், “கெருபுகளுக்குக் கீழ் இடுக்கு சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபுகளின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கை நிறைய வாரி, நகரின் மீது வீசு” என்றார். என் கண்ணெதிரே அவரும் சென்றார்.
3அந்த மனிதர் உள்ளே சென்றபோது கோவிலின் வலப்புறத்தில் கெருபுகள் நின்றுகொண்டிருந்தன: மேகம் உள்முற்றத்தில் பரவியிருந்தது.
4ஆண்டவரது மாட்சி கெருபுகளிடமிருந்து புறப்பட்டு, கோவிலின் வாயிற்படிக்கு வந்தது. மேகம் கோவிலில் பரவியிருந்தது. முற்றம் முழுவதும் ஆண்டவரது மாட்சியின் பேரொளி நிறைந்து இலங்கிற்று.
5கெருபுகளின் இறக்கைகள் எழுப்பிய ஒலி வெளி முற்றம் வரை கேட்டது. அது எல்லாம் வல்லவரின் குரலொளிபோன்று இருந்தது.
6அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரை நோக்கி, “சக்கரங்களின் இடையே கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடு” என்று கட்டளையிட அவரும் சென்று சக்கரத்தின் அருகில் நின்றார்.
7அப்பொழுது, கெருபுகளுள் ஒன்று தன் கையை நீட்டிக் கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடுத்து நார்ப்பட்டு உடுத்தியவரின் உள்ளங்கையில் வைத்தது. அவரும் அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
8கெருபுகளின் இறக்கைகளின் கீழ் மனிதக் கையில் சாயல் காணப்பட்டது.
9இதோ! கெருபுகளின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கெருபின் அருகிலும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின.
10அவை நான்கும் ஒரே விதத் தோற்றம் கொண்டிருந்தன: சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பதுபோல் தோன்றின.
11அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை. முன் சக்கரம் நோக்கும் திசையில் மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் சென்றன.
12கெருபுகளின் உடல் முழுவதும்-முதுகு, கைகள், இறக்கைகள், சக்கரங்கள், அதாவது நான்கு சக்கரங்கள்-கண்களால் நிறைந்திருந்தன.
13“சுழல் சக்கரங்கள்” என்று அவை அழைக்கப்பட்டதை நான் கேட்டேன்.
14ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது எருது முகம்: இரண்டாவது மனித முகம்: மூன்றாவது சிங்க முகம்: நான்காவது கழுகு முகம்.
15அப்பொழுது கெருபுகள் மேலெழந்தன. கெபார் ஆற்றோரம் நான் கண்ட உயிரினங்கள் இவையே.
16கெருபுகள் சென்றபோது சக்கரங்களும் அவற்றோடு சென்றன. கெருபுகள் நிலத்திலிருந்து மேலெழும்பத் தங்கள் இறக்கைகளை விரித்தபோது சக்கரங்கள் திரும்பாமல் அவற்றுடன் இருந்தன.
17அவை நின்றபோது இவையும் நின்றன. அவை எழுந்தபோது இவையும் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி இவற்றில் இருந்தது.
18ஆண்டவரது மாட்சி கோவிலின் வாயிற்படியை விட்டுக் கெருபுகளின்மேல் வந்து நின்றது.
19என் கண்ணெதிரே, கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரித்து நிலத்தினின்று மேலெழந்தன. அவை சென்றபோது சக்கரங்களும் அவற்றுடன் சென்றன. ஆண்டவரது இல்லத்தின் கிழக்கு நுழைவாயிலில் அவை நின்றன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின் மேல் இருந்தது.
20கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக்கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன்.
21அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. அவற்றின் இறக்கைகளின் கீழ் மனிதக் கைகளின் சாயல் இருந்தது.
22அவற்றின் முகச் சாயல் கெபார் ஆற்றோரம் நான் கண்ட முகங்களைப் போன்றே தோன்றிற்று. அவை ஒவ்வொன்றும் நேர் முகமாய்ச் சென்றன.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.