வேதாகமத்தை வாசி

எசேக்கியேல் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆறாம் ஆண்டில், ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாள், நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். யூதாவின் மூப்பரும் என் முன்பாக அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே தலைவராகிய ஆண்டவரின் கை என்மீது விழுந்தது.
2அப்போது இதோ நெருப்புப் போன்ற ஒருவரின் சாயலைக் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும், அவரது இடைக்கு மேற்புறம் பளபளக்கும் வெண்கலம் போன்றும் ஒளிர்வதைக் கண்டேன்.
3அவர் கைபோன்று தெரிந்த ஒன்றை நீட்டி என் தலை முடியைப் பிடித்தார். கடவுள் அருளிய இக்காட்சியில் ஆவி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவில் தூக்கி எருசலேமுக்குக் கொணர்ந்து அங்கே ஆண்டவரது சகிப்பின்மையைத் தூண்டும் சிலை இருக்கும் வடதிசை நோக்கி அமைந்த உள்வாயிலின் முற்றத்தில் என்னை விட்டது.
4அங்கே சமவெளியில் நான் கண்ட காட்சியைப் போன்று இஸ்ரயேலின் கடவுளது மாட்சி இலங்கியது.
5அவர் என்னை நோக்கி, “மானிடா! உன் கண்களை உயர்த்தி வடக்கே பார்” என்றார். நானும் வடதிசைநோக்கி என் கண்களை உயர்த்தினேன். அங்கே வடக்கில் பலிபீடத்தின் முற்றத்தில் நுழைவாயிலின் அருகே ஆண்டவரது சகிப்பின்மையைத் தூண்டும் சிலை இருந்தது.
6அவர் என்னை நோக்கி, “மானிடா! அவர்கள் செய்வதைப் பார்த்தாயா? என் திருத்தலத்திலிருந்து நான் விலகியிருக்குமாறு இஸ்ரயேல் வீட்டார் செய்கிற மிகவும் அருவருக்கத்தக்கவற்றைப் பார்க்கின்றாய் அல்லவா? திரும்பி வா, இதை விடவும் அருவருக்கத்தக்கவற்றைக் காண்பாய்” என்றார்.
7பின்னர் அவர் என்னை முற்றத்தின் வாயிலுக்குக் கொண்டு சென்றார். அங்கே சுவரில் ஒரு துளை இருக்கக் கண்டேன்.
8அவர் என்னிடம், “மானிடா! சுவரை உடை” என்றார். நான் சுவரை உடைத்தபோது அங்கே ஒரு வாயிற்படி இருந்தது.
9அவர் என்னை நோக்கி, “உள்ளே போய் அவர்கள் செய்யும் தீய அருவருப்பான செயல்களைப் பார்” என்றார்.
10நான் உள்ளே நுழைந்து பார்த்தேன். இதோ எல்லாவகை ஊர்வனவும், வெறுக்கத்தக்க விலங்குகளும், இஸ்ரயேல் வீட்டினரின் தெய்வ உருவங்களும் சுவரைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன.
11அவற்றிற்கு முன் இஸ்ரயேல் வீட்டு மூப்பர்களில் எழுபதுபேர் கையில் நறுமணம் கமழும் தூபகலசத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவே சாப்பானின் மகன் யாசனியாவும் நின்று கொண்டிருந்தார்.
12ஆண்டவர் என்னை நோக்கி, “மானிடா! இஸ்ரயேல் வீட்டு மூப்பர்களை இருளில் தாங்கள் வைத்த தெய்வ உருவங்களின்முன் என்ன செய்கிறார்கள்? பார்த்தாயா! 'ஆண்டவர் நம்மைப் பார்க்கவில்லை: ஆண்டவர் நாட்டைக் கைவிட்டுவிட்டார்' என அவர்கள் சொல்கின்றனர்” என்றார்.
13மீண்டும் அவர் என்னை நோக்கி, “திரும்பி வா. இவர்கள் செய்யும் இன்னும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப் போகிறாய்” என்று சொன்னார்.
14பின் அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் வடக்கு வாயிலுக்குக் கூட்டிவந்தார். அங்கே பெண்கள் உட்கார்ந்து தம்மூசுக்காக அழுது கொண்டிருந்தனர்.
15பின் அவர் என்னை நோக்கி, “பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா. இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப்போகிறாய்” என்றார்.
16அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்.
17அவர் என்னை நோக்கி, “பார்த்தாயா? மானிடா! யூதா வீட்டார் இங்கு செய்கிற அருவருப்புகள் அற்பமானவையோ? அவர்கள் நாட்டை வன்முறையினால் நிரப்பி மீண்டும் மீண்டும் எனக்குச் சினமூட்டுகிறார்கள். அதோ பார், திராட்சைக் கிளைகளைத் தங்கள் மூக்கிற்கு எதிராகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
18எனவே நான் அவர்களிடம் சினத்துடன் நடந்து கொள்வேன். என் கண் அவர்களுக்கு இரக்கம் காட்டாது. நான் அவர்களைத் தப்பவிடேன். என் செவிகளில் அவர்கள் பெரும் குரலிட்டு அழுதாலும் நான் கேட்கமாட்டேன்.”

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.