வேதாகமத்தை வாசி

எசேக்கியேல் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1அவர் என்னை நோக்கி, “மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார்.
2நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார்.
3மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது.
4மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு.
5ஏனெனில், புரியாத பேச்சும் கடின மொழியும் உடைய மக்களிடம் அல்ல, இஸ்ரயேல் வீட்டாரிடமே நீ அனுப்பப்படுகிறாய்.
6புரியாத பேச்சும் கடின மொழியும் உனக்கு விளங்காத சொற்களும் கொண்ட பல்வேறு மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை. அத்தகைய மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பியிருந்தாலாவது அவர்கள் உனக்குச் செவி சாய்திருப்பார்கள்.
7ஆனால் இஸ்ரயேல் வீட்டார் நான் சொல்வதைக் கேட்க விரும்பாததால் அவர்கள் நீ சொல்வதைக் கேட்கவும் விரும்பமாட்டார்கள். அவர்கள் தலைக்கனமும் கல்நெஞ்சமும் கொண்டவர்கள்.
8எனவே, நான் உன் முகத்தை அவர்கள் முகங்களுக்கு எதிராகவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றிகளுக்கு எதிராகவும் கடுமையாக்கியுள்ளேன்.
9உன் நெற்றியைத் தீக்கல்லை விட உறுதிபெற்ற வைரக்கல் போல் ஆக்கியுள்ளேன். அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் பார்வையைக் கண்டு கலங்காதே. ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்” என்றார்.
10மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா! நான் உனக்குக் கூறும் சொற்களையெல்லாம் செவிகொடுத்துக் கேட்டு உன் இதயத்தில் பதித்துக் கொள்.
11நீ புறப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கும் உன் மக்களின் பிள்ளைகளிடம் போ: அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று அவர்களுக்குச் சொல்” என்றார்.
12அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, நான் என்பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன்.
13உயிரினங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உராயும் ஒலியும் சக்கரங்களின் ஒலியும் இணைந்து மாபெரும் அதிரொலியும் ஓசைபோல் ஒலித்தது.
14அப்போது ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு சென்றது. நானோ மனம் கசந்து, சினமுற்றுச் சென்றேன். ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது.
15பின்னர், நான் கெபார் ஆற்றோரம் தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய் அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன்.
16ஏழு நாள்களுக்குப்பின் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
17மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய்.
18தீயோரிடம் “நீங்கள் சாவது உறுதி” என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில்-அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால்-அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
19மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
20நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்: அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
21மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய்.
22அங்கே ஆண்டவரின் கைவன்மை என்மீது இருந்தது. அவர் என்னை நோக்கி, “எழுந்து சமவெளிக்குச் செல். அங்கே நான் உன்னோடு பேசுவேன்” என்றார்.
23நானும் எழுந்து சமவெளிக்குச் சென்றேன். இதோ ஆண்டவரின் மாட்சி, கெபார் ஆற்றோரம் நான் கண்டதைப் போன்றே விளங்கிற்று. நான் முகம்குப்புற விழுந்தேன்.
24பின்னர், ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது. அப்போது அவர் என்னிடம் உரைத்தது: “நீ சென்று உன் வீட்டினுள் உன்னை அடைத்துக் கொள்!
25மானிடா! நீ வெளியே சென்று அவர்களிடையே நடமாட முடியாதபடி உன்மேல் கயிறுகள் போட்டு அவற்றால் உன்னைக் கட்டுவார்கள்.
26நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய். ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.
27ஆனால் நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன். நீ அவர்களிடம் “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே” என்று சொல். கேட்பவன் கேட்கட்டும்: மறுப்பவன் மறுக்கட்டும்: ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.