1 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
2 | “மானிடா! அவளுக்குத் தீர்ப்பிட மாட்டாயா? குருதியைச் சிந்திய இந்நகருக்கு நீ தீர்ப்பிட மாட்டாயா? அவ்வாறெனில், அவளின் எல்லா அருவருப்புகளையும் எடுத்துக்கூறு.” |
3 | நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தனக்குத் தண்டனை நாள் வரும்படித் தன் நடுவில் குருதியைச் சிந்தித் தனக்கெனச் சிலைகளைச் செய்து தீட்டுப்படுத்திக் கொண்ட நகர் இதுவே! |
4 | நீ சிந்திய குருதியினால் குற்றப்பழிக்கு ஆளானாய். நீ வடித்த தெய்வச் சிலைகளால் தீட்டுப்பட்டவளானாய். நீ உன் நாள்களை முடித்து விட்டாய். உன் ஆண்டுகளை முடிவுக்குக் கொணர்ந்து விட்டாய். ஆகவே உன்னை வேற்றினத்தாருக்கு இழி பொருளாகவும், எல்லா நாட்டினருக்கும் ஏளனப் பொருளாகவும் ஆக்குவேன். |
5 | உன் அருகில் உள்ளோரும் தொலைவில் உள்ளோரும் உன்னைப் பேர்கெட்ட நகர் எனவும் அமளி நிறைந்தவள் எனவும் இகழ்வர். |
6 | உன்னிடத்திலுள்ள இஸ்ரயேலின் தலைவர்கள் தங்கள் வலிமையால் குருதி சிந்துகிறார்கள்: |
7 | உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்: அன்னியரைத் துன்புறுத்தித் தந்தையற்றோதரையும் கைம்பெண்களையும் இழிவாய் நடத்தினார்கள். |
8 | நீயோ எனக்குரிய தூய்மையானவற்றை அவமதித்து, ஓய்வுநாள்களைத் தீட்டுப்படுத்தினாய். |
9 | புறங்கூறிக் கொலை செய்வோர் உன்னிடம் உள்ளனர். அவர்கள் மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்கின்றனர். உன்னிடையே முறைகேடானதைச் செய்கின்றனர். |
10 | தங்கள் தந்தையின் திறந்த மேனியை வெளிப்படுத்துகிறவர்களும் தீட்டான காலத்தில் பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னிடையே உள்ளனர். |
11 | ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான். வேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான். |
12 | உன்னிடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர். நீ வட்டி வாங்குகிறாய், கொடுத்ததற்கு மேலாய்ப் பிடுங்கி, அடுத்திருப்பவனை ஒடுக்குகிறாய். நீ என்னை மறந்துவிட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
13 | உன் நீதியற்ற வருமானத்தை முன்னிட்டும் நீ உன்னிடையே சிந்திய இரத்தத்தை முன்னிட்டும் நான் என் கைகளைத் தட்டுவேன். |
14 | நான் உன்னைத் தண்டிக்கும் நாளில் உன் மனவுறுதி நிலைத்திருக்குமா? அல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா? ஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன். நான் இதைச் செய்தே தீர்வேன். |
15 | உன்னை வேற்றினத்தாரிடையே சிதறடிப்பேன்: நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்: உன் அருவருப்புக்கு ஒரு முடிவு கட்டுவேன். |
16 | வேற்றினத்தாரிடையே தீட்டுப்பட்டவளாய் நீ நிற்கையில், நானே ஆண்டவர் என அறிந்து கொள்வாய். |
17 | ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: |
18 | “மானிடா! இஸ்ரயேல் வீட்டார் எனக்குக் களிம்பாகிவிட்டனர். அவர்கள் எல்லாரும் எரி நெருப்பில் கிடக்கும் வெள்ளி, வெண்கலம், வெள்ளீயம், இரும்பு, ஈயம் ஆகியன போலாயினர்: அவர்கள் களிம்பாகி விட்டார்கள்”. |
19 | ஆகவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் யாவரும் களிம்பாகி விட்டதால் உங்கள் எல்லாரையும் எருசலேமில் ஒன்று சேர்ப்பேன். |
20 | வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை நெருப்பிலிட்டு உருக்குவது போல், நானும் என் சினத்திலும் சீற்றத்திலும் நகரின் நடுவில் இட்டு உருக்குவேன். |
21 | நான் உங்களை ஒன்றாய்ச் சேர்த்து, உங்கள் மீது என் சினத்தின் கனலை ஊதுவேன். நீங்களும் நகரின் நடுவில் உருக்கப்படுவீர்கள். |
22 | வெள்ளி சூளையில் உருக்கப்படுவது போல் நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள். அதன் மூலம் ஆண்டவராகிய நான் என் சினத்தை உங்கள் மீது கொட்டியுள்ளேன் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். |
23 | ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: |
24 | “மானிடா! அந்த நாட்டுக்குச் சொல்: நீ தூய்மைப்படுத்தப் பெறாத நாடு. ஏனெனில் என் சினத்தின் நாள்களில் உன்னில் மழை பெய்யவில்லை. |
25 | அவளின் போலி இறைவாக்கினர் சதித்திட்டம் தீட்டி இரையைக் கிழிக்கும் கர்ச்சிக்கின்ற சிங்கம் போல் மக்களை விழுங்குகிறார்கள். அவர்கள் விலையுயர்ந்த கருவூலத்தையும் பொருள்களையும் எடுத்துச் செல்கின்றனர். கைம்பெண்களை நகரிடையே மிகுதியாக்குகின்றனர். |
26 | அவளின் குருக்கள் என் திருச்சட்டத்தை மீறுகின்றனர். எனக்குரிய தூய்மையானவற்றைத் தீட்டுப்படுத்துகின்றனர். தூய்மையானவற்றிற்கும் பொதுவானவற்றிற்கும் வேற்றுமைபாராமலும், தீட்டானவற்றையும் தீட்டற்றவற்றையும் பிரித்துணராமலும் இருக்கின்றனர். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது பற்றிக் கவலையற்றிருந்தனர். நானோ அவர்களால் அவமதிப்புக்குள்ளானேன். |
27 | அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர். அநீதியாய்ச் செல்வம் ஈட்ட மக்களைக் கொலை செய்து குருதி சிந்துகின்றனர். |
28 | அவளின் போலி இறைவாக்கினர் இச்செயல்களைப் பொய்க்காட்சிகள் மூலமும், பொய்க்குறிகள் மூலமும் வெள்ளையடித்து மூடி மறைக்கிறார்கள். ஆண்டவர் சொல்லாதபோதே “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே” என்கிறார்கள். |
29 | நாட்டின் பொதுமக்கள் பிறர்பொருளைப் பறிக்கின்றனர்: கொள்ளையடிக்கின்றனர். ஏழைகளையும் எளியவர்களையும் துன்புறுத்தி, அன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர். |
30 | எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை. |
31 | எனவே நான் அவர்கள்மேல் என் சினத்தைக் கொட்டி என் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன். அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன்” என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |