1 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. |
2 | “புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன? |
3 | என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது. |
4 | உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது: பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும். |
5 | ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால், |
6 | மலைகளின் மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால், |
7 | அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால், |
8 | வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால், |
9 | என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகெண்டால், அவன் நீதிமான் ஆவான்: அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
10 | ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும் முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால், |
11 | தந்தை இவற்றுள் எதையும் செய்யாதிருக்க-மகனோ மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்டு, பிறன் மனைவியைக் கறைப்படுத்தி, |
12 | எளியவரையும் வறியவரையும் ஒடுக்குபவனாகவும், கொள்ளையிடுபவனாகவும், அடைமானத்தைத் திருப்பித் தராதவனாகவும், சிலைகளை வணங்குபவனாகவும், அருவருப்பானதைச் செய்பவனாகவும், |
13 | வட்டிக்குக் கொடுப்பவனாகவும், கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால், அவன் வாழ்வானோ? அவன் வாழ மாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும். |
14 | ஆனால், இவனுக்குப் பிறந்த மகன் தன் தந்தை செய்த பாவங்களை எல்லாம் கண்டு தெளிந்து அவ்வாறு செய்யாதிருந்தால்- |
15 | அதாவது மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும, இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை வணங்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், |
16 | ஒருவரையும் ஒடுக்காமலும், அடைமானம் பெறாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவருக்குத் தன் உணவை அளித்தும், ஆடையின்றி இருப்பவருக்கு ஆடை கொடுத்தும், |
17 | எளியவருக்குத் தீங்கிழைக்காமலும், வட்டி வாங்காமலும், கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், என் நீதி நெறிகளைக் கடைப்பிடித்தும், என் நியமங்களின்படி நடந்தும் இருந்தால்-அவன் தன் தந்தையின் குற்றத்திற்காகச் சாக மாட்டான்: அவன் வாழ்வது உறுதி. |
18 | மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக் கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே நல்லன அல்லாதவற்றைச் செய்தால், தன் குற்றத்திற்காக மடிவான். |
19 | ஆயினும், “தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமக்கக்கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். மகன், நீதியையும் நேர்மையும் கடைப்பிடித்து, என் நியமங்களை எல்லாம் கைக்கொண்டு ஒழுகினால், அவன் வாழ்வது உறுதி. |
20 | பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும். |
21 | தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார். |
22 | அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்படமாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர். |
23 | உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
24 | நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத் தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானதெதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும், செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர். |
25 | ஆயினும், “தலைவரின் வழி செம்மையானதாக இல்லை” என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! |
26 | நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். |
27 | பொல்லார் தாம செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். |
28 | அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால், அவர்கள் வாழ்வது உறுதி: அவர்கள் சாகமாட்டார். |
29 | ஆயினும், “தலைவரின் வழி நேர்மையானதாக இல்லை” என இஸ்ரயேல் வீட்டார் சொல்கிறார்கள். இஸ்ரயேல் வீட்டாரே! என் வழிகளா நேர்மையற்றவை? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! |
30 | எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது. |
31 | எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்? |
32 | எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள். |