1 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
2 | மானிடா! காட்டிலிருக்கும் எல்லா மரக்கிளைகளையும்விட திராட்சைக்கொடி எவ்வகையில் சிறந்தது? |
3 | ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து கட்டை எடுக்கப்படுகிறதா? அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட ஒரு முளையை அதிலிருந்து செய்வார்களா? |
4 | இதோ, அது நெருப்புக்கு இரையாகப் போடப்படுகிறது: அதன் இரு முனைகளையும் நெருப்பு எரிக்கிறது: அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது: அது எந்த வேலைக்காவது பயன்படுமா? |
5 | இதோ, அது முழுமையாய் இருந்த போதே அதைக்கொண்டு ஒரு வேலையும் செய்யமுடியவில்லை. நெருப்பால் எரிந்து கருகிய அதை எந்த வேலைக்காவது பயன்படுத்த முடியுமா? |
6 | ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: காட்டுத் தாவரங்களுள் ஒன்றான திராட்சைக் கொடியை நான் நெருப்புக்கு இரையாக அளித்தது போல், எருசலேமில் வாழ்வோரையும் கையளிப்பேன். |
7 | என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து தப்பிச் சென்றாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நான் என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். |
8 | நான் நாட்டைப் பாழாக்குவேன். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |