வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஏசாயா 53

                   
புத்தகங்களைக் காட்டு
1நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
2இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்: நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை: நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை:
3அவர் இகழப்பட்டார்: மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்: வேதனையுற்ற மனிதராய் இருந்தார்: நோயுற்று நலிந்தார்: காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்: அவர் இழிவுபடுத்தப்பட்டார்: அவரை நாம் மதிக்கவில்லை.
4மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.
5அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
6ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்: நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்: ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.
7அவர் ஒடுக்கப்பட்டார்: சிறுமைப்படுத்தப்பட்டார்: ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை: அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.
8அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்: என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.
9வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை: ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்: செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.
10அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.
11அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்: நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்: அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.
12ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்: அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்: ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்: கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்: ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்: கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.