1 | இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார். |
2 | அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். |
3 | இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள். |
4 | அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். |
5 | அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள்.அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர்.அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது. |
6 | அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். “இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று” என்றாள் அவள்.உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி, |
7 | “உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டாள். |
8 | பார்வோனின் மகள் அவளை நோக்கி, “சரி. சென்று வா” என்றாள்.அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். |
9 | பார்வோனின் மகள் அவளை நோக்கி, “இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல்.எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு.உனக்குக் கூலி கொடுப்பேன்” என்றாள்.எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண். |
10 | குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள்.நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்”என்று கூறி அவள் அவனுக்குமோசே”என்று பெயரிட்டாள். |
11 | அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்: அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்: மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்: |
12 | சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார். |
13 | அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்: குற்றவாளியை நோக்கி “உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார். |
14 | அதற்கு அவன், “எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?”என்று சொன்னான்.இதனால் மோசே அச்சமுற்றார்: “நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே” என்று சொல்லிக் கொண்டார்! |
15 | இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று. |
16 | அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர். |
17 | அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர்.உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார்.அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார். |
18 | அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், “என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?” என்றார். |
19 | அவர்கள், “எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்: ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள். |
20 | அவர் தம் புதல்வியரிடம், “எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்” என்று கூறினார். |
21 | அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார். |
22 | அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன்”என்று கூறி மோசே அவனைக்கேர்சோம்”என்று பெயரிட்டழைத்தார். |
23 | இந்த நீண்ட காலத்தில் எகிப்திய மன்னன் இறந்துவிட்டான்.இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர்.அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று. |
24 | அவர்களது புலம்பலைக் கடவுள் கேட்டார்.ஆபிரகாமுடனும், ஈசாக்குடனும், யாக்கோபுடனும் தாம் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். |
25 | கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்ணோக்கினார்.அவர்களது நிலைமைகளையும் கடவுள் அறிந்து கொண்டார். |