1 | யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை: |
2 | ரூபன், சிமியோன், லேவி, யூதா: |
3 | இசக்கார், செபுலோன், பென்யமின்: |
4 | தாண், நப்தலி, காத்து, ஆசேர். |
5 | யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர்.யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார். |
6 | பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர். |
7 | இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்: ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்: இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது. |
8 | இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். |
9 | அவன் தன் குடிமக்களை நோக்கி, "இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது. |
10 | அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள்.ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்: நம்மை எதிர்த்துப் போரிடுவர்: இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்" என்று கூறினான். |
11 | எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும்அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர்.பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர். |
12 | ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்: பெருகிப் பரவினர்.இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர். |
13 | எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்: |
14 | கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர். |
15 | எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது: |
16 | எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும். |
17 | ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை.மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள். |
18 | எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி,ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?”என்று கேட்டான். |
19 | அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, “எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்: ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்: மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது” என்று காரணம் கூறினர். |
20 | இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார்.இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார்.அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர். |
21 | இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார். |
22 | பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, “பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள்.பெண்மகவையோ வாழவிடுங்கள்” என்று அறிவித்தான். |