1 | ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்: வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். |
2 | உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களி கூர்வேன்: உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். |
3 | என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்: உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள். |
4 | நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்: என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர். |
5 | வேற்றினத்தாரைக் கண்டித்தீர்: பொல்லாரை அழித்தீர்: அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். |
6 | எதிரிகள் ஒழிந்தார்கள்: என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள். |
7 | அவர்களின் நகர்களை நீர் தரைமட்டம் ஆக்கினீர்: அவர்களைப்பற்றிய நினைவு அற்றுப் போயிற்று. ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்: நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார். |
8 | உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்: மன்னளினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். |
9 | ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்: நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே. |
10 | உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கைகொள்வர்: ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. |
11 | சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்: |
12 | ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர் எளியோரை நிpனைவில் கொள்கின்றார்: அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார். |
13 | ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்: என்னைப் பகைப்போரால் எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்: சாவின் வாயினின்று என்னை விடுவியும். |
14 | அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில் உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்: நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன். |
15 | வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்: அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. |
16 | ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்: பொல்லார் செய்த செயலில் அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை, இசை: சேலா) |
17 | பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்: கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர். |
18 | மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை: எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. |
19 | ஆண்டவரே, எழுந்தருளும்: மனிதரின் கை ஓங்க விடாதேயும்: வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக! |
20 | ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக! |