1 | யூதா அரசன் ஆகாசு ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசேயா சமாரியாவில் அரசனாகி இஸ்ரயேலின் மீது ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். |
2 | அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான். ஆயினும் முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்களைப்போல் அவ்வளவு தீயவனாக இல்லை. |
3 | அசீரிய மன்னன் சல்மனேசர் அவனுக்கு எதிராய்ப் படையெடுத்து வரவே, ஓசேயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தி வந்தான். |
4 | ஆனால் இடையில் ஓசேயா எகிப்திய மன்னனான சோவிடம் உதவி கேட்டுத் தூதனுப்பியதோடு, அசீரியாவுக்கு ஆண்டுதோறும் செலுத்தி வந்த கப்பத்தையும் நிறுத்திக்கொண்டான். இதை அறிந்த சல்மனேசர் ஓசேயாவைப் பிடித்துச் சிறையிலிட்டான். |
5 | பின்னர் அசீரியா மன்னன், நாடு முழுவதன்மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். |
6 | ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான். |
7 | ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர். |
8 | மேலும் இஸ்ரயேல்மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும். இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின்படியும் நடந்து வந்தனர். |
9 | இஸ்ரயேல் மக்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தகாதனவற்றை மறைவாய்ச் செய்தனர்: மேலும் காவல் மாடம் முதல் அரண்சூழ் கோட்டைவரை எல்லா நகர்களிலும் தங்களுக்குத் தொழுகை மேடுகளை அமைத்துக் கொண்டனர்: |
10 | உயர் குன்றுகளிலும், பசுமையான மரங்களின் அடியிலும், நடுகற்களையும், அசேராக் கம்பங்களையும் அமைத்துக் கொண்டனர். |
11 | அங்கு அவர்கள் தூபம் காட்டி அம்மேடுகள் அனைத்திலும், ஆண்டவர் அவர்கள் முன்னிலையிலிருந்து விரட்டியடித்த வேற்றினத்தாரைப் போல் தீயன புரிந்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர். |
12 | 'இக்காரியத்தை நீங்கள் செய்யலாகாது' என ஆண்டவர் அவர்களுக்கு உரைத்திருந்தாலும், அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தனர். |
13 | ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: “உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.” |
14 | ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்: |
15 | ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்த, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்: 'வேற்றினத்தாரைப் பின்பற்றலாகாது' என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர். |
16 | தங்கள் கடவுளான ஆண்டவரின் எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர்: இரண்டு கன்றுகளைத் தங்களுக்கென வார்த்துக்கொண்டு, அசேராக் கம்பம் நிறுத்தி, வானத்தின் அணிகளுக்குத் தலைவணங்கி, பாகாலை வழிபட்டனர்: |
17 | தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்: ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர். |
18 | எனவே ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளி விட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர். |
19 | யூதா குலத்தாரும் தங்கள் கடவுளான ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, இஸ்ரயேலின் விதிமறைகளைப் பின்பற்றி வந்தனர். |
20 | எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் வழிமரபினர் அனைவரையும் கைவிட்டு, அவர்களை ஒடுக்கி, கொள்ளைக்காரரின் கையில் ஒப்புவித்து, தமது திருமுன்னின்று தள்ளிவிட்டார். |
21 | அவர் இஸ்ரயேலைத் தாவீதின் மரபினின்று வெட்டிப் பிரித்தபோது நெபாற்றின் மகன் எரொபவாமைத் தங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டனர். எரொபவாம் இஸ்ரயேலர் ஆண்டவரை விட்டு விலகும்படி செய்து, அவர்களைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கியிருந்தான். |
22 | இவ்வாறு எரொபவாம் நடந்த பாவ வழிகளில் அனைத்திலும் இஸ்ரயேல் மக்கள் நடந்து வந்தனர். அவற்றை விட்டு அவர்கள் விலகவில்லை. |
23 | ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாக உரைத்திருந்தபடி, அவர்களைத் தமது திருமுன்னின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவ வழிகளைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர். |
24 | பாபிலோன், கூத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம் ஆகியவற்றினின்று அசீரிய மன்னன் ஆள்களைக் கொண்டு வந்து, இஸ்ரயேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியா நகர்களில் குடியேற்றினான். அவர்கள் சமாரியாவை உரிமையாகக் கொண்டு அதன் நகர்களில் வாழ்ந்து வந்தனர். |
25 | அவர்கள் அங்கு வாழத் தொடங்கியபோது ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே, ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை ஏவிவிட, அவை அவர்களுள் சிலரைக் கொன்று போட்டன. |
26 | எனவே அசீரிய மன்னனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது: “நாட்டினின்று அப்புறப்படுத்திச் சமாரியாவின் நகர்களில் நீர் குடியேற்றிய இந்த மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது. எனவே அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பியுள்ளார். இதோ, அவை அவர்களைக் கொன்று கொண்டிருக்கின்றன! ஏனெனில் அவர்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது. |
27 | எனவே, அசீரியா மன்னன், “நீங்கள் சமாரியாவிலிருந்து நாடு கடத்தியிருக்கும் குருக்களுள் ஒருவன், அங்குத் திரும்பிச் செல்லட்டும். அவன் அங்கே சென்று, அவர்களுடன் தங்கியிருந்து நம் மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறையைக் கற்பிக்கட்டும்” என்று கட்டளையிட்டான். |
28 | அவ்வாறே, சமாரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குருக்களுள் ஒருவன், பெத்தேலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவருக்கு அஞ்சி வாழும் முறைபற்றிக் கற்றுக்கொடுத்தான். |
29 | ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர். |
30 | பாபிலோனியா சுக்கோத் பெனோத்து சிலையையும், கூத்தியர் நேர்கால் சிலையையும், ஆமாத்தியர் அசமா சிலையையும், |
31 | அவ்வியர் நிபுகசு, தர்த்தாக்குச் சிலைகளையும் செய்து வைத்துக் கொண்டனர். மேலும் செபர்வயர் தம் நாட்டுத் தெய்வங்களான அதிரம்மெலக்கு, அனம் மெலக்கிற்குத் தங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டு பலி கொடுத்தனர். |
32 | அவர்கள் ஆண்டவரையும் வழிபட்டு வந்தனர். ஆயினும் தொழுகை மேடுகளில் பணிபுரியத் தங்களுக்குள் அர்ச்சகர்களை நியமித்துக் கொண்டனர். |
33 | அவர்கள், ஆண்டவரை வழிபட்டுவந்து போதிலும், எங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்களோ அங்கிருந்த வழக்கப்படியே தம்தம் தெய்வங்களையும் வணங்கி வந்தனர். |
34 | இன்றுவரை அவர்கள் தங்கள் முன்னைய வழக்கத்தையே கைக்கொண்டுள்ளனர். ஆண்டவரிடம் அவர்கள் அச்சம் கொள்வதில்லை: மேலும் ஆண்டவரால் 'இஸ்ரயேல்' என்று பெயரிடப்பட்ட யாக்கோபின் மக்களுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் கடைப்பிடிப்பதுமில்லை. |
35 | ஆண்டவர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்து அவர்களுக்கு இட்ட கட்டளை இதுவே: “வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சவேண்டாம்: அவைகளை வணங்கி வழிபடவும் வேண்டாம்: அவைகளுக்குப் பலியிடவும் வேண்டாம்: |
36 | ஆனால், உங்களைப் பேராற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த ஆண்டவருக்கு மட்டுமே நீங்கள் அஞ்ச வேண்டும். அவரையே வணங்கி வழிபட வேண்டும். அவருக்கே பலி செலுத்த வேண்டும். |
37 | அவர் உங்களுக்கு எழுதித் தந்த நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் எந்நாளும் கருத்தோடு கடைப்பிடித்து வாழுங்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள். |
38 | நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறவாதீர்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள். |
39 | உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி நடங்கள். அவரே உங்கள் எதிரிகள் அனைவரின் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.” |
40 | ஆயினும், அவ்வேற்றினத்தார் அதற்குச் செவிகொடாமல் அவர்களது முன்னைய வழக்கத்தின்படியே செய்து வந்தனர். |
41 | அவர்கள் ஆண்டவரை வழிபட்டு வந்தபோதிலும், தங்கள் தெய்வச் சிலைகளையும் வணங்கி வந்தனர். இன்றுவரை அவர்களுடைய பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அவர்கள் மூதாதையரைப் போலவே செய்து வருகின்றனர். |