1 | ஆகாபிற்குச் சமாரியாவில் எழுபது மைந்தர்கள் இருந்தனர். ஆதலால் ஏகூ சமாரியாவின் தலைவர்களுக்கும் இஸ்ரயேலின் பெரியோர்களுக்கும் ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் இதுவே: |
2 | “இம்மடல் உங்களை வந்தடைந்தவுடன் உங்கள் தலைவரின் மைந்தர்கள் உங்களோடு இருப்பதாலும், தேர்களும், குதிரைகளும் அரண்சூழ் நகரும் படைக்கலங்களும் உங்களிடமிருப்பதாலும், |
3 | உங்கள் தலைவரின் மைந்தர்களுள் சிறந்தவனும் தகுதி உடையவனுமான ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுடைய தந்தையின் அரியணையில் அமர்த்தி, உங்கள் தலைவரின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடுங்கள்.” |
4 | ஆனால் அவர்கள் மிகமிக அச்சமுற்று, “அவனை எதிர்த்து நிற்க, இரண்டு அரசர்களால் முடியவில்லையே! அப்படியிருக்க, நாம் எங்ஙனம் எதிர்த்து நிற்க கூடும்?” என்றனர். |
5 | எனவே அரண்மனை மேற்பார்வையாளனும், நகரின் ஆளுநனும், பெரியோர்களும், ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களும், ஏகூவிடம் தூதனுப்பித் தெரிவித்ததாவது: “நாங்கள் உம் அடிமைகள். நீர் கட்டளையிடுவதை எல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கிறோம். நாங்கள் யாரையும் அரசனாக்கப் போவதில்லை உமக்கு நல்லதென்றுபடுவதையே செய்தருளும்” என்று தெரிவித்தனர். |
6 | அவன் மீண்டும் அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு மற்றொரு மடல் அனுப்பினான்: “நீங்கள் எனக்குக் கட்டுப்பட்டு எனக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தால், உங்கள் தலைவருடைய மைந்தர்களின் தலைகளைக் கொய்து, நாளை இதே நேரத்தில் என்னிடம் இஸ்ரயேலுக்குக் கொண்டு வாருங்கள்.” அச்சமயம் அரசனின் மைந்தர் எழுபது பேரும் தங்களை வளர்த்து வந்த நகரப் பெரியோரோடுதான் இருந்தனர். |
7 | அம்மடலை அவர்கள் பெற்றுக்கொண்டவுடன், அரசனின் மைந்தர்களைப் பிடித்து அந்த எழுபது பேரையும் கொன்று, அவர்களின் தலைகளைக் கூடைகளில் வைத்து ஏகூவிடம் இஸ்ரயேலுக்கு அனுப்பி வைத்தனர். |
8 | தூதன் ஒருவன் அவனிடம் வந்து “அரச மைந்தர்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கின்றனர்” என்றான்.அதற்கு அவன், “நாளைக் காலைவரை அவற்றை நகரின் நுழைவாயிலில் இரு குவியலாக வையுங்கள்” என்று சொன்னான். |
9 | மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவன் வெளியே வந்து மக்கள் அனைவரின் முன்னிலையில் நின்றுகொண்டு கூறியது: “நீங்கள் குற்றமற்றவர்கள். என் தலைவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றவன் நான்தான். இவர்கள் எல்லாரையும் கொன்றது யார் தெரியுமா? |
10 | ஆகாபின் குடும்பத்திற்கு எதிராகக் கடவுள் உரைத்த வாக்கில் எதுவும் பொய்க்கவில்லையென்று இப்பொழுது அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஆண்டவர் தம் அடியான் எலிசாவின் மூலம் உரைத்ததை அவரே நிறைவேற்றினார்.” |
11 | பின்னர் ஏகூ இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தில் எஞ்சியிருந்த அனைவரையும்-அவனைச் சார்ந்த பெரியோர்கள், உற்ற நண்பர்கள் அர்ச்சகர்கள் அனைவரையும்-வெட்டி வீழ்த்தினான்: அவனைச் சார்ந்த எவனையும் விட்டு வைக்கவில்லை. |
12 | பின்பு ஏகூ புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான். செல்லும் வழியில் அவன் இடையர்களின் பெத் ஏக்கதை அடைந்தான். |
13 | அங்கு ஏகூ யூதாவின் அரசனான அகசியாவின் உறவினரைச் சந்தித்து, “நீங்கள்யார்?” என்று கேட்டான். அவர்கள், “நாங்கள் அகசியாவின் உறவினர். அரசரின் மைந்தர்களையும் பட்டத்தரசியின் மைந்தர்களையும் நலம் விசாரிக்க வந்துள்ளோம்” என்று மறுமொழி கூறினர். |
14 | அவன், “இவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்று கட்டளையிட, அவன் ஆள்கள் அவர்களைப் பிடித்துப் பெத்ஏக்கதில் இருந்த குழியருகே வெட்டி வீழ்த்தினர். அவர்கள் நாற்பத்திரண்டு பேர்: அவர்களுள் எவனையும் விட்டுவைக்கவில்லை. |
15 | அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போகும்போது தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருந்த இரேக்காபின் மகன் யோனதாபைக் கண்டு அவனுக்கு வாழ்த்துரைத்துக் கூறியது: “என் இதயம் உன் இதயத்தோடு இருப்பது போல், உன் இதயமும் நட்புறவு கொண்டுள்ளதா?” என்று கேட்டான். அதற்கு யோனதாகு”ஆம்” என்று பதிலுரைத்தான். அப்படியானால் “கை கொடு” என்றான். அவன் கை கொடுக்க ஏகூ அவனைத் தன்னோடு தேரில் ஏற்றிக் கொண்டான். |
16 | மேலும் அவன் அவனை நோக்கி, “நீ என்னோடு வந்து ஆண்டவர்மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பார்!” என்றான். இவ்வாறு அவன் அவனைத் தன்னோடு தேரில் பயணம் செய்யச் செய்தான். |
17 | அவன் சமாரியாவுக்கு வந்தவுடன், எலிசாவுக்கு உரைத்த ஆண்டவர் வாக்கின்படி ஆகாபின் குடும்பத்தவருள் அங்கு எஞ்சியிருந்த அனைவரையும் அழித்தொழித்தான். |
18 | பிறகு ஏகூ மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை நோக்கி, “பாகாலுக்கு ஆகாபு சிறிதளவு ஊழியமே செய்தான். ஏகூவாகிய நானோ பேரளவு ஊழியம் செய்யப் போகிறேன். |
19 | எனவே பாகாலின் வாக்குரைப்போர் அனைவரையும் அதற்கு ஊழியம் செய்யும் எல்லாரையும் அதன் அர்ச்சகர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களில் ஒருவரும் வரத் தவறக்கூடாது. ஏனெனில் நான் பாகாலுக்கு ஒரு மாபெரும் பலி செலுத்த வேண்டியிருக்கிறது. வராதவர் அனைவரும், உயிரிழப்பர்” என்றான். பாகாலுக்கு ஊழியம் செய்வோரை ஒழித்துக்கட்டும் நோக்கிலேதான் இவ்வாறு ஏகூ சூழ்ச்சி செய்தான். |
20 | மேலும் ஏகூ,”பாகாலுக்கென்று ஒரு திருவிழா கொண்டாடுங்கள்” என்று ஆணையிட்டு, இஸ்ரயேல் நாடெங்கும் ஆள்களை அனுப்பி, பாகாலுக்கு ஊழியம் செய்தோர் அனைவரையும் வரவழைத்தான். |
21 | அவர்களுள் எவனும் வரத்தவறவில்லை. அவர்கள் பாகாலின் கோவிலினுள் நுழைந்தனர். பாகாலின் கோவில் ஒருமுனை முதல் மறுமுனை வரை நிறைந்திருந்தது. |
22 | அப்பொழுது ஏகூ ஆடைப் பொறுப்பாளனிடம், “பாகாலின் ஊழியர்கள் அனைவருக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடு” என்றான். அவ்வாறே அவன் அவர்களுக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடுத்தான். |
23 | பிறகு ஏகூ இரேக்காபின் மகன் யோனதாபுடன் பாகாலின் கோவிலினுள் நுழைந்தான். அவன் பாகால் ஊழியர்களை நோக்கி, “உங்களிடையே ஆண்டவரின் அடியார்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பாருங்கள்! இங்கே பாகாலின் அடியார்கள் மட்டுமே இருக்கவேண்டும்” என்றான். |
24 | பிறகு அவர்கள் பலிப்பொருள்களையும், எலிபலிகளையும் செலுத்த உள்ளே நுழைந்தார்கள். ஆனால் ஏகூ எண்பது காவலரை வெளியே நிறுத்தி வைத்து, “உங்கள் கையில் அளிக்கப்போகிற ஆள்களில் எவனையாவது நீங்கள் தப்பியோட விட்டால், அவனுக்குப் பதிலாக உங்கள் உயிரை இழப்பீர்கள்” என்று கூறியிருந்தான். |
25 | எரிபலி முடிந்தவுடன் ஏகூ காவலர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி, “நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பி ஓடிவிடாமல், எல்லாரையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்றான். அதன்படியே காவலர்களும், படைத்தலைவர்களும் அவர்களை வாளுக்கு இரையாக்கி, அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்த பின், பாகால் கோவிலின் உள்ளறைக்குச் சென்றனர். |
26 | அவர்கள் அங்கிருந்த பாகாலின் சிலைத் தூண்களை வெளியே கொண்டுவந்து எரித்துப்போட்டனர். |
27 | இவ்வாறு பாகாலின் சிலைத் தூண்களை எரித்து, பாகாலின் கோவிலையும் இடித்து, அவ்விடத்தைக் கழிவறை ஆக்கினர்: இன்றுவரை அப்படியேதான் பயன்பட்டு வருகிறது. |
28 | இவ்வாறு ஏகூ இஸ்ரயேல் நாட்டினின்று பாகால் வழிபாட்டை அறவே ஒழித்தான். |
29 | ஆயினும் இஸ்ரயேலரைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியினின்று ஏகூ விலகவுமில்லை: பெத்தேலிலும் தாணிலும் இருந்த பொற்கன்றுகளைக் கைவிடவுமில்லை. |
30 | பின்பு ஆண்டவர் ஏகூவை நோக்கி, “என் பார்வையில் செம்மையானதை நீ நன்கு செய்து முடித்ததாலும், ஆகாபின் குடும்பத்தினர்க்கு எதிராக நான் விரும்பியவற்றையெல்லாம் நிறைவேற்றினதாலும், உன் புதல்வர்கள் இஸ்ரயேலின் அரியணையில் நான்காம் தலைமுறைவரை வீற்றிருப்பர்” என்றார். |
31 | ஆனால் ஏகூ இஸ்ரயேலின் கடவுளாகிய தன் ஆண்டவரின் சட்டத்தைத் தன் முழு இதயத்தோடு பின்பற்றவில்லை. அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய எரோபவாமின் பாவ வழியினின்று விலகவில்லை. |
32 | அக்காலத்தில், ஆண்டவர் இஸ்ரயேல் நாட்டின் அளவைக் குறைக்கத் தொடங்கினர். அசாவேல் அதன் எல்லைப் பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றலானான். |
33 | காத்து, ரூபன், மனாசே ஆகிய குலங்களுக்குரிய, யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கிலயாது நாடு முழுவதிலும், அர்னோன் பள்ளத்தாக்கிலுள்ள அரோயேர் முதல் கிலயாது, பாசான் நாடுகள் வரையிலும் அவன் வெற்றி பெற்றான். |
34 | ஏகூவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் வீரச் செயல்கள் யாவும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா? |
35 | ஏகூ தன் மூதாதையருடன் துயில் கொண்டான். சமாரியா நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோவகாசு அரசனானான். |
36 | ஏகூ சமாரியாவிலிருந்து கொண்டு இருபத்தெட்டு ஆண்டுகள் இஸ்ரயேலை ஆட்சி செய்தான். |