1 | எரொபவாம் தூபம் காட்டப் பீடத்தருகில் நிற்கையில், இதோ இறையடியார் ஒருவர் ஆண்டவரின் சொற்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்தார். |
2 | ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க அவர் அப்பீடத்திற்கு எதிராகக் குரலேழுப்பி,“பலிபீடமே! பலிபீடமே! இதோ, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்: அவன் உன்மீது தூபத்தை எரிக்கும்” தொழுகைமேடுகளின் குருக்களை உன்மீதே பலியிடுவான்! மனிதரின் எலும்புகளை உன்மீது சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர் “ என்றார். |
3 | “பேசியுள்ளவர் ஆண்டவரே என்பதற்கு இதுவே அடையாளம்: இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்: அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும் “ என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதே நாளில் தந்தார். |
4 | பெத்தேலில் இருந்த அப்பலிபீடத்துக்கு எதிராக இறையடியார் கூறின சொற்களை அரசன் எரொபவாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி,“அவனைப் பிடியுங்கள் “ என்றான். நீ”ட்டிய கை விறைத்து நின்று விட்டது: அதை அவனால் மடக்க முடியவில்லை. |
5 | ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க இறையடியார் கொடுத்திருந்த அடையாளத்திற்கேற்ப, பலிபீடம் இடிந்து விழுந்தது: அதன் மேலிருந்த சாம்பலும் கீழே கொட்டியது. |
6 | அப்போது அரசன் இறையடியாரை நோக்கி,“எனக்காக நீர் உம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இறைஞ்சி மன்றாடும்: என் கை முன்போல் ஆகிவிடும் “ என்றான். அவ்வாறே இறையடியார் ஆண்டவரை நோக்கி மன்றாட, அரசனது கை முன் போல் ஆயிற்று. |
7 | அப்பொழுது அரசன் இறையடியாரிடம்,“நீர் என்னோடு என் வீட்டுக்கு வந்து உண்டு இளைப்பாறும். உமக்கு அன்பளிப்பு வழங்குவேன் “ என்றான். |
8 | ஆனால், இறையடியார் அரசனிடம்,“நீர் எனக்கு உம் வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடு வரமாட்டேன். இவ்விடத்தில் உண்ண மாட்டேன்: தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். |
9 | ஏனென்றால்,“உணவு அருந்தக் கூடாது, தண்ணீர் குடிக்ககூடாது, போன் வழியாய்த் திரும்பி வரக்கூடாது “ என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் “ என்று சொன்னார். |
10 | அவ்வாறே அவர் பெத்தேலுக்குத் தாம் வந்த வழியாகச் செல்லாமல் வேறு வழியாகத் திரும்பிப் போனார். |
11 | வயது முதிர்ந்த இறைவாக்கினர் ஒருவர் பெத்தேலில் வாழ்ந்து வந்தார். அவருடைய மைந்தர்கள் தங்கள் தந்தையிடம் வந்து இறையடியார் அன்று பெத்தேலில் செய்தவை அனைத்தையும், அரசனுக்குக் கூறியவற்றையும் அறிவித்தார்கள். |
12 | அவர்களின் தந்தை அவர்களை நோக்கி,“அவர் எவ்வழியாகச் சென்றார்? “ என்று வினவினார். அதற்கு அவர்கள் யூதாவிலிருந்து வந்த அந்த இறையடியார் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள். |
13 | அவர் தம் மைந்தர்களிடம்,“கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள் “ என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொண்டுவர, அவர் அதன் மேல் ஏறிக் கொண்டார். |
14 | அந்த இறையடியாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு,“யூதாவிலிருந்து வந்த இறையடியார் நீர்தாமோ? “ என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர்,“நான்தான் “ என்றார். |
15 | முதியவர் அவரை நோக்கி,“என்னோடு என் வீட்டிற்கு வந்து உணவருந்தும் “ என்று கேட்டுக்கொண்டார். |
16 | அதற்கு அவர்,“நான் திரும்பி உம்மோடு வர இயலாது. இந்த இடத்தில் உம்மோடு உணவு அருந்த மாட்டேன். தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். ஏனென்றால், 'அங்கே நீ உணவு அருந்தக் கூடாது: |
17 | தண்ணீர் குடிக்கக் கூடாது: போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது' என்று ஆண்டவர் எனக்குக் கூறியிருக்கிறார் என்றார். |
18 | அதற்கு முதியவர்,“உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். 'உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஆண்டவர் ஒரு வானதூதர் வாயிலாக எனக்குச் சொன்னார் “ என்றார். ஆனால் அவர் சொன்னதோ பொய். |
19 | ஆயினும் இறையடியார் அதை நம்பி அவரோடு திரும்பிச் சென்று அவரது வீட்டில் உணவருந்தித் தண்ணீர் குடித்தார். |
20 | அவர்கள் பந்தியில் அமர்ந்திருந்தபோது, அவரை அழைத்துக் கொண்டு வந்த இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது. |
21 | அவர் யூதாவிலிருந்து வந்த இறையடியாரை நோக்கி உரத்த குரலில்,“ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரின் சொல்லை நீ மீறினாய்: உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இட்ட கட்டளையின்படி நீ நடக்கவில்லை. |
22 | நீ உணவு அருந்தவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டிருக்க, நீ அவர் விலக்கின இடத்திற்குத் திரும்பி வந்து உணவு அருந்தித் தண்ணீர் குடித்ததால், உனது சடலம் உன் மூதாதையரின் கல்லறையில் வைக்கப்படமாட்டாது “ என்று கூறினார். |
23 | அழைத்து வரப்பட்ட இறைவாக்கினர் உண்டு குடித்த பிறகு முதியவர் அவருக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொடுத்தார். |
24 | அவர் திரும்பிப் போகையில், ஒரு சிங்கம் வழியில் அவரைக் கண்டு அடித்துக் கொன்றது. அவரது சடலம் வழியில் கிடந்தது. அதன் அருகில் கழுதை நின்று கொண்டிருந்தது. சிங்கமும் அச்சடலத்தின் அருகே நின்று கொண்டிருந்தது. |
25 | அவ்வழியே சென்ற ஆள்கள் வழியில் கிடந்த சடலத்தையும் அதனருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தையும் கண்டனர். அவர்கள் முதிய இறைவாக்கினர் குடியிருந்த நகருக்கு வந்து அதைத் தெரிவித்தார்கள். |
26 | தம் வழியே சென்ற இறையடியாரைத் திரும்பி வரச் செய்த இறைவாக்கினர் அதைக் கேட்டபோது,“இந்த இறையடியார் ஆண்டவரின் சொல்லை மீறியவர். எனவே ஆண்டவர் அவருக்குச் சொல்லியிருந்தபடியே அவரைச் சிங்கத்துக்கு இரையாக்கினார். அது அவரைப் பீறிக் கொன்றுவிட்டது “ என்றார். |
27 | பின்னர் தம் மைந்தரை நோக்கி,“எனக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள் “ என்றார். அவர்களும் சேணம் பூட்டினார்கள். |
28 | அவர் புறப்பட்டுச்சென்று வழியில் அந்த இறையடியாரின் சடலம் கிடப்பதையும் அதனருகில் கழுதை, அந்தச் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சடலத்தைத் தின்னவுமில்லை: கழுதையைப் பீறிப் போடவுமில்லை. |
29 | அப்பொழுது அந்த முதிய இறைவாக்கினர் இறையடியாரின் சடலத்தை எடுத்துக் கழுதையின்மேல் ஏற்றி, துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும் தம் ஊருக்குக் கொண்டு வந்தார். |
30 | அவர் அவரது சடலத்தைத் தம் கல்லறையில் அடக்கம் செய்தார். பிறகு அவர்கள்,“ஐயோ! என் சகோதரனே! “ என்று அவருக்காகப் புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள். |
31 | அவர் அவரை அடக்கம் செய்தபின் தம் மைந்தரை நோக்கி,“நான் இறந்த பின் இறையடியாராகிய இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள். |
32 | பெத்தேலில் இருக்கும் பலிபீடத்தையும் சமாரியாவின் நகர்களிலிருக்கும் எல்லாத் தொழுகை மேட்டுக் கோவில்களைப் பற்றியும் அவர் கூறிய ஆண்டவரின் வாக்கு திண்ணமாக நிறைவேறும் “ என்றார். |
33 | இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். |
34 | இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழித்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று. |