1 | தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே: |
2 | “அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாயிரு. |
3 | உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்படி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய். |
4 | ஏனெனில் ஆண்டவர் என்னை நோக்கி, 'உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை' என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும். |
5 | இஸ்ரயேலின் இரு படைத்தலைவர்களான நேரின் மகன் அப்னேர், எத்தேரின் மகன் அமாசா ஆகியோருக்கு செரூயாவின் மகன் யோவாபு செய்ததும் அதனால் எனக்கு நேர்ந்ததும் உனக்குத் தெரியும். அவன், போர்க்காலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்கச் சமாதான காலத்தில் அவர்களைக் கொன்றான். அவ்வாறு செய்து, அவன் தன் அரைக்கச்சையிலும் தன் மிதியடிகளிலும் இரத்தக்கறை படியச் செய்தான். |
6 | ஆகையால் அவனுடன் விவேகமாய் நடந்துகொள். அவன் நரைமுடியனாய் மன அமைதியுடன் பாதாளத்தில் இறங்க விட்டுவிடாதே. |
7 | கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் மைந்தர்களுக்கோ இரக்கம் காட்டு. உன் பந்தியில் உண்பவர்களோடு அவர்களும் இருக்கட்டும். ஏனெனில் உன் சகோதரன் அப்சலோமுக்கு அஞ்சி நான் ஓடியபொழுது எனக்கு அவர்கள் துணைநின்றார்கள். இன்னும் கேள். |
8 | பகுரிம் ஊரைச் சார்ந்த பென்யமினனாகிய கேராவின் மகன் சிமயி உன்னோடு இருக்கிறான் அல்லவா? அவன், மகனயிமுக்கு நான் சென்றபோது, மிகவும் இழிவான முறையில் பேசி என்னைச் சபித்தான். ஆயினும் யோர்தானுக்கு அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, 'உன்னை வாளால் கொல்லமாட்டேன்' என்று ஆண்டவர்மேல் ஆணையிட்டு அவனுக்கு நான் சொன்னேன். |
9 | எனினும் நீ அவனைக் குற்றமற்றவனென எண்ணி விடாதே. நீ விவேகமுள்ளவன். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியும். அவன் நரைமுடியாய் இரத்தத்தில் தோய்ந்து பாதாளத்தில் இறங்கும்படி செய். “ |
10 | பின்னர் தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். |
11 | தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார். |
12 | சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது. |
13 | அகித்தின் மகன் அதோனியா சாலமோனின் தாய் பத்தேசாபவிடம் வந்தான்.“நீ வருவதன் நோக்கம் என்ன? சமாதானமா? “ என்று அவர் கேட்டார். |
14 | அதற்கு அவன்,“ஆம்: சமதானமே “ என்றான். பிறகு அவன்,“நான் உம்மிடம் ஒன்று சொல்லவேண்டும் “ என்றான். அவரும் “சொல் “ என்றார். |
15 | அதற்கு அவன்,“அரசுரிமை என்னுடையதே. நான் அரசனாக வேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் விரும்பினர். இது உமக்குத் தெரிந்ததே. ஆனால் நடந்தது வேறு. அரசுரிமை என் சகோதரனுக்குப் போய்விட்டது. |
16 | அது ஆண்டவரின் திருவுளம். ஆயினும் உம்மிடம் ஒன்று வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். அதை நீர் எனக்கு மறுக்கக்கூடாது “ என்றான். |
17 | அதற்கு அவர்,“அது என்ன? சொல் “ என, அவன்,“அரசர் சாலமோன் உம் சொல்லைத் தட்டமாட்டார். சூனேமைச் சார்ந்த அபிசாகை எனக்கு மணமுடித்து வைக்கும்படி அவரிடம் சொல்லும் “ என்றான். |
18 | அதற்குப் பத்சேபா,“நல்லது: நான் உனக்காக அரசரிடம் பரிந்து பேசுகிறேன் “ என்றார். |
19 | பத்சேபா அதோனியாவுக்காக அரசர் சாலமோனிடம் பரிந்து பேசும் படி போனார். அப்போது அரசர் எழுந்து அவரை எதிர்கொண்டு வந்து வணங்கியபின், தம் அரியணையில் அமர்ந்து கொண்டார். அரசரின் தாய்க்கு அவரது வலப்புறத்தில் ஓர் இருக்கை போடப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார். |
20 | அப்போது அவர்,“நான் உன்னிடம் கேட்க விரும்பும் சிறு வேண்டுகோள் ஒன்று உண்டு. அதை நீ மறுக்கக்கூடாது “ என்றார். அதற்கு அரசர்,“கேளுங்கள் அம்மா! நான் மறுக்கமாட்டேன் “ என்றார். |
21 | அப்போது அவர்,“சூனேமைச் சார்ந்த அபிசாகை உன் சகோதரன் அதோனியாவுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் “ என்றார். |
22 | அரசர் சாலமோன் தம் தாய்க்கு மறுமொழியாக,“சூனேமைச் சார்ந்த அபிசாகை அதோனியாவுக்காக நீர் கேட்பானேன்? இந்த அரசையும் அவனுக்காக நீர் கேட்டிருக்கலாமே? அவன்தான் என் மூத்த சகோதரனயிற்றே! மேலும் குரு அபியத்தாரும் செரூயாவின் மகன்யோவாபும் அவர் பக்கம் இருக்கின்றனரே! “ என்று சொன்னார். |
23 | பிறகு அரசர் சாலமோன் ஆண்டவர் மேல் ஆணையிட்டு “அதோனியா சொன்ன இந்த வார்த்தை அவன் உயிருக்கே கேடு விளைவிக்கும். இல்லையேல் கடவுள் எனக்குத் தகுந்த தண்டணை அளிப்பாராக! |
24 | எனவே என் அரசுரிமையை நிலைநிறுத்தி என் தந்தை தாவீதின் அரியணையில் என்னை அமர்த்தித் தாம் சொன்னபடி என் குடும்பத்தை அரச பரம்பரையாக்கியவரான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அதோனியா இன்றே கொல்லப்படுவான் “ என்று சொன்னார். |
25 | சாலமோன் அரசர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார். அவனும் அதோனியாவைத் தாக்கவே, அவனும் இறந்தான். |
26 | பிறகு அரசர் குரு அபித்தாரை நோக்கி,“உம் நிலங்கள் இருக்கிற அனத்தோத்திற்குப் போய்விடும். நீர் சாகவேண்டியவர். இருப்பினும், இன்று நான் உம்மைக் கொல்ல மாட்டேன். ஏனெனில், நீர் என் தந்தை தாவீதுக்கு முன்னனால் தலைவராகிய ஆண்டவரின் பேழையைத் த}க்கி வந்தீர். மேலும் என் தந்தைக்குத் துன்பம் வந்த போதெல்லாம் நீரும் அவரோடிருந்து துன்பம் அனுபவித்தீர் “ என்றார். |
27 | இவ்வாறு அபித்தார் ஆண்டவரின் குருவாய் இராதபடி சாலமோன் அவரை விலக்கிவிட்டார். ஆண்டவர் சீலோவில் ஏலியின் வீட்டாரைப் பற்றி உரைத்த வார்த்தை இவ்வாறு நிறைவேறியது. |
28 | இந்தச் செய்தி யோவாபுக்கு எட்டியது. அவர் அப்சலோமின் பக்கம் சாராமல், அதோனியாவின் பக்கம் சார்ந்திருந்தவர். ஆகையால் அவர் ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப் பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டார். |
29 | யோவாபு ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப்போனார் என்றும் பலிபீடத்தின் அருகே அவர் நிற்கிறார் என்றும் சாலமோன் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சாலமோன் யோயாதாவின் மகன் பெனாயாவை அனுப்பி,“நீ போய் அவனை வெட்டி வீழ்த்து “ என்றார். |
30 | பெனாயா ஆண்டவரின் கூடாரத்திற்குப் போய் அவரைக் கண்டு,“வெளியே வா: இது அரச கட்டளை “ என்றான். அதற்கு அவர் மறுமொழியாக,“முடியாது: நான் இங்கேயே சாவேன் “ என்றான். எனவே பெனாயா அரசரிடம் திரும்பி வந்து யோவாபு தனக்குக் கூறிய மறுமொழியைத் தெரிவித்தான். |
31 | அப்போது அரசர் அவனை நோக்கி,“அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம் செய். இவ்வாறு, யோவாபு சிந்திய குற்றமற்ற இரத்தத்தின் பழி என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் விட்டு நீங்கச் செய். |
32 | இந்த இரத்தப் பழியை ஆண்டவர் அவன் தலைமேலேயே விழச் செய்வாராக! ஏனெனில், அவன் தன்னை விட நேர்மையிலும் பண்பிலும் சிறந்தவர்களான நேரின் மகனும் இஸ்ரயேலின் படைத் தலைவனுமான அப்னேர், எத்தேரின் மகனும் யூதாவின் படைத்தலைவனுமான அமாசா ஆகியோரை என் தந்தை தாவீதுக்குத் தெரியாமல் தாக்கி வாளால் கொன்றான். |
33 | இந்த இரத்தப்பழி யோவாபின் தலைமேல் மட்டுமன்று: அவன் வழி மரபினர் தலை மேலும் என்றென்றும் இருப்பதாக! ஆனால் தாவீது, அவர் வழிமரபினர், அவர் வீட்டார் ஆகியோர் மீதும் அவர் அரியணை மீதும் என்றென்றும் ஆண்டவரின் சமாதானம் தங்கி இருப்பதாக! “ என்றார். |
34 | அவ்வாறே யோயாதாவின் மகன் பெனாயா புறப்பட்டுப் போய் யோவாபைத் தாக்கிக் கொன்றான். அவர் பாலை நிலத்திலிருந்த தம் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார். |
35 | அப்பொழுது அரசர் யோவாபுக்குப் பதிலாக யோயாதாவின் மகன் பெனாயாவைப் படைத்தலைவனாக நியமனம் செய்தார். மேலும் அபியத்தாருக்குப் பதிலாகச் சாதோக்கைக் குருவாக நியமித்தார். |
36 | பிறகு அரசர் சிமயியை வரவழைத்து அவனை நோக்கி, நீ எருசலேமில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வேறெங்கும் செல்லாமல் அங்கேயே குடியிரு. |
37 | என்று நீ வெளியேறித் கிதரோன் நீரோடையைக் கடப்பாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைத் திண்ணமாய் அறிந்துகொள். உன் இரத்தத்தின் பழி உன் தலைமேலேயே விழும் “ என்றார். |
38 | சிமயி அரசரைப் பார்த்து,“நல்லது, அரசே! என் தலைவராகிய நீர் சொன்னபடியே அடியேன் செய்வேன் “ என்றான். |
39 | அவ்வாறே சிமயி நெடுநாள் எருசலேமில் குடியிருந்தான். மூன்று ஆண்டுகளுக்குப் பின் சிமயியின் அடிமைகளில் இருவர் காத்தின் மன்னனாகிய மாக்கா மகன் ஆக்கிசிடம் ஓடிவிட்டனர். அந்த அடிமைகள் காத்தில் இருப்பதாகச் சிமயி கேள்விப்பட்டான். |
40 | உடனே சிமயி தன் கழுதைக்குச் சேணம் பூட்டித் தன் அடிமைகளைத் தேடப் புறப்பட்டான். அவன் காத்திலிருந்து ஆக்கிசிடம் சென்று, தன் அடிமைகளைக் கண்டு அங்கிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தான். |
41 | சிமயி எருசலேமிலிருந்து காத்துக்குப் போய்த் திரும்பி வந்தான் என்று சாலமோனுக்கு அறிவிக்கப்பட்டது. |
42 | அப்போது அரசர் சிமயியை வரவழைத்து“என்று நீ வெளியேறி வேறெங்காவது போவாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைக் திண்ணமாய் அறிந்து கொள் என்று நான் உனக்கு முன்பே எச்சரிக்கை செய்து, உன்னையும் ஆண்டவர்மேல் ஆணையிடச் செய்யவில்லையா? நீயும் அதற்கு,“நல்லது, நீர் சொன்னபடி கேட்கிறேன் “ என்று பதில் கூறவில்லையா? |
43 | அப்படியிருக்க ஆண்டவர்மேல் நீ இட்ட ஆணையையும் உனக்கு நான் இட்ட கட்டளையையும் மீறியது ஏன்? “ என்று கேட்டார். |
44 | மேலும் அரசர் சிமயியைப் பார்த்து,“என் தந்தை தாவீதுக்கு நீ இழைத்த தீங்குகள் அனைத்தையும் பற்றி உன் நெஞ்சே அறியும். ஆகையால் நீ செய்த தீங்கு உன்னையே அழிக்கும்படி ஆண்டவர் செய்வார். |
45 | ஆனால் அரசராகிய சாலமோன் ஆசி பெற்றவராய் இருப்பார். தாவீதின் அரியணையும் ஆண்டவர் முன்னிலையில் என்றென்றும் நிலைத்து நிற்கும் “ என்று சொன்னார். |
46 | பின்னர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்கு அரசர் கட்டளையிட, அவன் சென்று சிமயியைத் தாக்கவே, அவனும் இறந்தான். இவ்வாறு சாலமோனின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. |