1 | யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கும் நான் கருணைக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று தாவீது கேட்டார். |
2 | சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனை தாவீதிடம் கூட்டிச் சென்றனர்.”நீ தான் சீபாவா? என்று அரசர் அவனிடம் கேட்க,”அடியேன் தான்” என்று அவன் பதிலளித்தான். |
3 | கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று அரசர் கேட்டார்.”யோனத்தானின் இருகால் ஊனமுற்ற மகன் ஒருவன் இருக்கிறான்”என்று அரசனிடம் சீபா பதிலளித்தான். |
4 | “எங்கே அவன்?” என்று அரசர் அவனிடம் கேட்க,”லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்று அரசனிடம் சீபா கூறினான். |
5 | லோதாபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச் செய்தார். |
6 | சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற வீழ்ந்து வணங்கினான்.”மெபிபொசேத்து” என்று தாவீது அழைக்க,”இதோ! உம் அடியான்” என்று அவன் பதிலிறுத்தான். |
7 | தாவீது அவனிடம்”அஞ்சாதே! உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்க கருணை காட்டுவது உறுதி, உன் மூதாதை சவுலின் நிலம் அனைத்தையும் உனக்க மீண்டும் கிடைக்கச் செய்வேன். நீ எப்போதும் என்னுடன் உணவருந்துவாய்” என்று கூறினார். |
8 | அவன் வணங்கி,” நான் செத்த நாய் போன்ற பணியாளன்: நீர் என்னைக் கடைக்கண் பார்ப்பதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது?” என்றான். |
9 | பிறகு அரசர் சவுலின் பணியாளன்சீபாவை அழைத்து சவுலுக்கும் அவர் தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன். |
10 | தலைவரின் பேரன் உண்பதற்காக நீயும், உன் பிள்ளைகளும், உன் பணியாளரும் அவனுக்காக நிலத்தை உழுது விளைச்சலைக் கொண்டு வருவீர்கள். ஆனால் உன் தலைவரின் பேரன் மெபிபோசேத்து எப்போதும் உன்னுடன் உணவருந்துவான்” என்று கூறினார். |
11 | தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைபடியே உம் பணியாளனும் செய்வான்” என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான். |
12 | மெபிபொசேத்துக்கு மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச் சார்ந்த அனைவரும் மெபிபொசேத்து பணியாளராக இருந்தனர். |
13 | இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான், எனவே எருசலேமிலேயே தங்கியிருந்தான். |