வேதாகமத்தை வாசி

ஆதியாகமம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம்,“கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?' என்று கேட்டது.
2பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.
3ஆனால் "தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது: அதைத் தொடவும் கூடாது.மீறினால் நீங்கள் சாவீர்கள்” என்று கடவுள் சொன்னார்,” என்றாள்.
4பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்:
5ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்.நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.
6அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள்.அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள்.அவனும் உண்டான்.
7அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன: அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர்.ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
8மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
9ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
10“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன்.ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது.ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன்.எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
11“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
12அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் உண்டேன்”என்றான்.
13ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.
14ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்.
15உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.
16அவர் பெண்ணிடம் “உன் மகப்போற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்: வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய்.ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்: அவனோ உன்னை ஆள்வான்” என்றார்.
17அவர் மனிதனிடம், “உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது: உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.
18முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும்.வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.
19நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.நீ மண்ணாய் இருக்கிறாய்: மண்ணுக்கே திரும்புவாய்”என்றார்.
20மனிதன் தன் மனைவிக்கு‘ஏவாள்’ என்று பெயரிட்டாள்: ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
21ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.
22பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான்.இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது” என்றார்.
23எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
24இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார்.ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.