வேதாகமத்தை வாசி

மீகா 5

                   
புத்தகங்களைக் காட்டு
1சேனைகளையுடைய நகரமே, இப்போது குழுக்குழுவாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றுகை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.
2எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
3ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கும்வரை அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரர்களில் மீதியானவர்கள் இஸ்ரவேல் மக்களோடு திரும்புவார்கள்.
4அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனி பூமியின் எல்லைகள் முழுவதிலும் மகிமைப்படுவார்.
5இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
6இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
7யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனிதனுக்குக் காத்திருக்காமலும், மனுமக்களுக்குத் தாமதிக்காமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
8யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமமாகவும் மக்களுக்குள் அநேக மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
9உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் எதிரிகளெல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
10அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராமல் அழித்து, உன் இரதங்களை அழித்து
11உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து
12சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.
13உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய்.
14நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து
15செவிகொடுக்காத அந்நிய மக்களிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.