வேதாகமத்தை வாசி

லேவியராகமம் 18

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
3நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்
4என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
6ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் கர்த்தர்.
7உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது.
8உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
9உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது.
10உன் மகனுடைய மகளையாவது உன் மகளுடைய மகளையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அது உன்னுடைய நிர்வாணம்.
11உன் தகப்பனுடைய மனைவியிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த மகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உனக்குச் சகோதரி.
12உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள்.
13உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள்.
14உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
15உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது.
16உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
17ஒரு பெண்ணையும் அவளுடைய மகளையும் நிர்வாணமாக்கக்கூடாது; அவளுடைய மகன்களின் மகளையும் மகளின் மகளையும் நிர்வாணமாக்கும்படி திருமணம் செய்யக்கூடாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின உறவானவர்கள்; அது முறைகேடு.
18உன் மனைவி உயிரோடிருக்கும்போது அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்குவதற்காக அவளைத் திருமணம் செய்யக்கூடாது.
19பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
20பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம்.
21நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகு தெய்வத்திற்கென்று தீயில் பலியாக்க இடம்கொடுக்காதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
22பெண்ணோடு உடலுறவு செய்வதுபோல ஆணோடே உடலுறவு செய்யவேண்டாம்; அது அருவருப்பானது.
23எந்தவொரு மிருகத்தோடும் நீ உடலுறவுகொண்டு, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; பெண்ணானவள் மிருகத்தோடே உடலுறவுகொள்ள ஏதுவாக அதற்கு முன்பாக நிற்கக்கூடாது; அது அருவருப்பான தாறுமாறு.
24இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற மக்கள் இவைகளெல்லாவற்றாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
25ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் மக்களை புறக்கணித்துவிடும்.
26இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர்கள் செய்ததினாலே தேசம் தீட்டானது.
27இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த மக்களை தேசம் புறக்கணித்ததைப்போல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் புறக்கணிக்காதிருக்க
28நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
29இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் ஒன்றையாவது யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள்.
30ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலிருக்க என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.