1 | ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள். |
2 | தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். |
3 | ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான். |
4 | வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள். |
5 | துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள். |
6 | இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன். |
7 | வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். |
8 | அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான். |
9 | வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. |
10 | உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். |
11 | செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். |
12 | நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள். |
13 | தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான். |
14 | எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். |
15 | ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான். |
16 | தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான். |
17 | இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம். |
18 | உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான். |
19 | தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். |
20 | உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான். |
21 | பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான். |
22 | பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான். |
23 | தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். |
24 | தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். |
25 | பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான். |
26 | தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். |
27 | தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். |
28 | துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள். |