1 | அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: |
2 | நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்? |
3 | தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? |
4 | உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும் |
5 | நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பம்செய்து |
6 | சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார். |
7 | உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். |
8 | ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். |
9 | நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. |
10 | அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ? |
11 | சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? |
12 | அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ? |
13 | தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும். |
14 | அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும். |
15 | ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது. |
16 | வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்; |
17 | அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும். |
18 | அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும். |
19 | இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள். |
20 | இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. |
21 | இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். |
22 | உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான். |