1 | சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியர்களை முறியடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டு நாட்கள் அங்கே இருந்த பின்பு |
2 | மூன்றாம் நாளிலே ஒரு மனிதன் சவுலின் முகாமிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தன்னுடைய தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதிடம் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான். |
3 | தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் முகாமிலிருந்து தப்பிவந்தேன் என்றான். |
4 | தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: மக்கள் யுத்தத்தைவிட்டு ஓடிப்போனார்கள்; மக்களில் அநேகம் பேர் விழுந்து இறந்துபோனார்கள்; சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்தார்கள் என்றான். |
5 | சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவித்த வாலிபனிடம் கேட்டதற்கு |
6 | அந்த வாலிபன்: நான் தற்செயலாகக் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகிடந்தார்; இரதங்களும் குதிரை வீரர்களும் அவரைப் பின்தொடர்ந்து நெருங்கினார்கள். |
7 | அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன். |
8 | அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன். |
9 | அவர் என்னை நோக்கி: நீ என் அருகில் வந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; இன்னும், என்னுடைய உயிர் முழுவதும் போகாததால் எனக்கு வேதனையாக இருக்கிறது என்றார். |
10 | அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவருக்கு அருகில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பின்பு அவருடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தையும் அவருடைய கையில் இருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என்னுடைய ஆண்டவனிடம் கொண்டுவந்தேன் என்றான். |
11 | அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு |
12 | சவுலும், அவனுடைய மகனான யோனத்தானும், கர்த்தருடைய மக்களும், இஸ்ரவேல் குடும்பத்தார்களும், பட்டயத்தால் விழுந்ததால் புலம்பி அழுது மாலைவரை உபவாசத்தோடு இருந்தார்கள். |
13 | தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய தேசத்தானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான். |
14 | தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம் செய்தவரைக் கொன்றுபோடும்படி நீ உன்னுடைய கையை நீட்டப் பயப்படாமல் போனது என்ன என்று சொல்லி |
15 | வாலிபர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ அவன் அருகே போய், அவனைக் கொன்றுபோடு என்றான்; அவன் அமலேக்கியனை வெட்டினான்; அவன் இறந்தான். |
16 | தாவீது அவனைப் பார்த்து: உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கட்டும்; கர்த்தர் அபிஷேகம் செய்தவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்னுடைய வாயே உனக்கு விரோதமான சாட்சி சொன்னது என்றான். |
17 | தாவீது சவுலையும் அவனது மகன் யோனத்தானையும்குறித்து, துயரப்பாடலைப் பாடினான். |
18 | (வில்வித்தையை யூதாவின் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்; அது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கிறது) அவன் பாடின துயரப்பாடலாவது: |
19 | இஸ்ரவேலின் புகழ், உயர்ந்த மலைகளில் இறந்துபோனது; பலசாலிகள் கொலைசெய்யப்பட்டுபோனார்கள். |
20 | பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும், அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள். |
21 | கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இருக்காமலும் போகட்டும்; அங்கே பெலசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படாதவர்போல அவருடைய கேடகமும் அவமதிக்கப்பட்டதே. |
22 | கொலைசெய்யப்பட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்காமலும், பெலசாலிகளின் கொழுப்பை சாப்பிடாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாகத் திரும்பினதில்லை. |
23 | உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும், சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள். |
24 | இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். |
25 | போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே. யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே. |
26 | என்னுடைய சகோதரனான யோனத்தானே, உனக்காக நான் துயரப்படுகிறேன்; நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது. |
27 | பெலசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோனதே என்று பாடினான். |