2 | உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள அனைத்து மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்துப் பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற அனைத்தும், சமுத்திரத்தின் மீன்வகைகள் அனைத்தும் உங்கள் கையில் கொடுக்கப்பட்டன. |
3 | நடமாடுகிற உயிரினங்கள் அனைத்தும் உங்களுக்கு உணவாக இருக்கட்டும்; பசுமையான தாவரங்களை உங்களுக்குக் கொடுத்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன். |
4 | இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். |
5 | உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். |
6 | மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டதால், மனிதனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படட்டும். |
7 | நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாகப் பெற்றெடுத்து பெருகுங்கள் என்றார். |
8 | பின்னும் தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் நோக்கி: |
9 | நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும் |
10 | உங்களுடன் கப்பலிலிருந்து புறப்பட்ட அனைத்து உயிரினங்கள்முதல் இனிப் பூமியில் பிறக்கப்போகிற அனைத்து உயிரினங்கள்வரை பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள அனைத்து காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். |
11 | இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். |
12 | மேலும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: |
13 | நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும். |
14 | நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். |
15 | அப்பொழுது எல்லா உயிரினங்களையும் அழிக்க இனி தண்ணீரானது வெள்ளமாகப் பெருகாதபடி, எனக்கும் உங்களுக்கும் மாம்சமான அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். |
16 | அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படி அதைப் பார்ப்பேன். |
17 | இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான அனைத்திற்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவிடம் சொன்னார். |
18 | கப்பலிலிருந்து புறப்பட்ட நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். |
19 | இம்மூவரும் நோவாவின் மகன்கள்; இவர்களாலே பூமியெங்கும் மக்கள் பெருகினார்கள். |
20 | நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத்தோட்டத்தை நாட்டினான். |
21 | அவன் திராட்சைரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் ஆடை விலகிப் படுத்திருந்தான். |
22 | அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம், தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர்கள் இருவருக்கும் சொன்னான். |
23 | அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்துத் தங்களுடைய தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, பின்முகமாக வந்து, தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாகப் போகாததால், தங்களுடைய தகப்பனின் நிர்வாணத்தைப் பார்க்கவில்லை. |
24 | நோவா திராட்சைரசத்தின் போதைதெளிந்து விழித்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்து: |
25 | கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதாரர்களிடம் அடிமைகளுக்கு அடிமையாக இருப்பான் என்றான். |
26 | சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான். |
27 | யாப்பேத்தை தேவன் பெருகச்செய்வார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாக இருப்பான் என்றான். |
28 | வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் உயிரோடிருந்தான். |
29 | நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருடங்கள்; அவன் இறந்தான். |