1 | “இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது. |
2 | நான் உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். |
3 | “பாகால்பேயோரின் நிமித்தம், கர்த்தர் என்ன செய்தார் என்று பார்த்தீர்கள். பொய்த் தெய்வங்களான அங்குள்ள பாகாலை வழிபட்ட உங்கள் ஜனங்கள் அனைவரையும், உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கே அழித்தார். |
4 | ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருந்த நீங்கள் அனைவரும் இன்று உயிருடன் இருக்கின்றீர்கள். |
5 | “என் தேவனாகிய கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படி உங்களுக்கு கட்டளைகளையும், நியாயங்களையும் போதித்தேன். நீங்கள் நுழையவும் வசப்படுத்தவும் தயாராகவுள்ள எந்த நாட்டிலும் அச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்பதற்காகவே நான் அவற்றைப் போதித்தேன், |
6 | எச்சரிக்கையுடன் இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் அறிவும், ஞானமும் உள்ளவர்கள் என்பதை இது மற்ற நாட்டு ஜனங்களுக்கு எடுத்துக்காட்டும். அந்நாட்டு ஜனங்களும் இச்சட்டங்களைக் கேள்விப்படும்போது, ‘உண்மையிலேயே, இந்த பெரிய ஜனத்தின் (இஸ்ரவேலர்) ஜனங்கள் ஞானமுள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். |
7 | “நாம் உதவி கேட்கும்பொழுது தேவனாகிய கர்த்தர் நமது அருகில் இருக்கிறார். வேறெந்த நாட்டிற்கும் அவரைப்போல ஒரு தேவன் இல்லை! |
8 | நான் இன்று உங்களுக்கு வழங்கும் போதனைகளைப் போன்று நீதியான சட்டவிதிகள் வேறு எந்த பெரிய ஜனத்துக்கும் இல்லை. |
9 | ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவைகள் உங்கள் இதயத்திலிருந்து நீங்காதபடிக்கு காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். |
10 | ஓரேப் மலையில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் நின்றதை நினைத்துப்பாருங்கள். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்வதைக் கேட்க ஜனங்களை ஒன்று கூட்டு. பின்னர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எனக்குப் பயந்து மதிப்பளிக்க கற்பார்கள். மேலும் இவற்றை அவர்கள் தமது குழந்தைகளுக்குக் கற்பிப்பார்கள்’என்று கூறினார். |
11 | நீங்கள் நெருங்கிவந்து மலையின் கீழ்ப்பகுதியில் நின்றீர்கள். தீப்பற்றி மலை வான உயரத்திற்கு எரிந்தது. கரிய மேகங்கள் சூழ்ந்து இருண்டது. |
12 | பின் நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களிடம் பேசினார். யாரோ பேசும் குரலை நீங்கள் கேட்டீர்கள். ஆனால் உருவம் எதையும் நீங்கள் பார்க்கவில்லை. குரல்மட்டுமே கேட்டது. |
13 | கர்த்தர் உங்களிடம் தமது உடன்படிக்கையைச் சொன்னார். அவர் பத்துக் கட்டளைகளைக் கூறி, அவற்றிற்குக் கீழ்ப்படியச் சொன்னார். அந்த உடன்படிக்கையின் சட்டங்களைக் கர்த்தர் இரு கற்பலகைகளில் எழுதினார். |
14 | அதே சமயம், நீங்கள் எடுத்துக்கொண்டு வாழப்போகும் நாடுகளில், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை உங்களுக்குப் போதிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார். |
15 | “ஒரேப் மலை மீது நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களுடன் பேசிய நாளில், நீங்கள் அவரைப் பார்க்கவில்லை. ஏனென்றால் தேவனுக்கு உருவமில்லை. |
16 | எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எந்த உயிரினத்தின் வடிவத்திலும் சிலைகளையோ பொய்யான தெய்வங்களை உருவாக்கும் பாவத்தைச் செய்து உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். ஆண் அல்லது பெண் போன்ற சிலைகளைச் செய்யாதீர்கள். |
17 | நிலத்தில் வாழும் ஒரு மிருகத்தைப்போலவோ அல்லது வானில் பறக்கும் ஒரு பறவையைப் போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள். |
18 | நிலத்தில் ஊர்பவை அல்லது கடலில் உள்ள மீனைப்போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள். |
19 | வானத்தைப் பார்க்கும் பொழுதும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் வானில் உள்ள பல்வேறு பொருட்களைப் பார்க்கும் பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றைத் தொழுதுகொள்ளவும், சேவை செய்யவும் தூண்டப்படாதிருக்க எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உலகின் மற்ற ஜனங்களை அவ்வாறு செய்யும்படி விட்டிருக்கிறார். |
20 | ஆனால் கர்த்தர் எகிப்திலிருந்து உங்களை வெளியேற்றி தமது சிறப்பான ஜனமாக்கியுள்ளார். இது, இரும்பை உருக்கும் வெப்பமிக்க உருக்காலையிலிருந்து உங்களை வெளியே இழுத்துப்போட்டது போலாகும். இப்பொழுதோ நீங்கள் அவருடைய ஜனங்கள்! |
21 | “உங்களால் என்மீது கோபங்கொண்ட கர்த்தர், நான் யோர்தான் நதியைக் கடக்க இயலாது என்று ஆணையிட்டார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் சிறப்பான நாட்டிற்குள் நான் கடந்து போவதில்லை” என்றார். |
22 | ஆகவே நான் இங்கேயே மரிக்க வேண்டும். ஆனால் நீங்களோ விரைவில் யோர்தான் நதியைக் கடந்து நல்ல நிலப்பகுதியைக் கைப்பற்றி அங்கு வாழ்வீர்கள். |
23 | அப்புதிய பூமியில், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நீங்கள் மறக்கக்கூடாது. கர்த்தருடைய கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். எந்த உருவிலும் விக்கிரகங்களைச் செய்யாதீர்கள். |
24 | ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தம் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கிறார். அழிக்கும் அக்கினியாகவும் கர்த்தர் விளங்குவார்! |
25 | “அந்நாட்டில் நீங்கள் நீண்டகாலம் வசிப்பீர்கள். அங்கே குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் பெறுவீர்கள். அங்கு நீங்கள் முதுமையடைவீர்கள். பின் எல்லா வகையான விக்கிரகங்களையும் செய்து உங்கள் வாழ்க்கையை பாழாக்குவீர்கள். நீங்கள் அவ்வாறுச் செய்யும்போது, தேவனுக்கு மிகுந்த கோபமூட்டுவீர்கள்! |
26 | ஆகவே இப்பொழுதே நான் உங்களை எச்சரிக்கிறேன். பரலோகமும் பூமியும் எனக்குச் சாட்சி! அக்கொடியச் செயலை நீங்கள் செய்தால் விரைவில் அழிக்கப்படுவீர்கள். அப்பூமியைக் கைப்பற்ற நீங்கள் யோர் தான் நதியை இப்பொழுது கடக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் ஏதேனும் விக்கிரகங்களைச் செய்தால், அங்கே நீங்கள் நீண்ட காலம் வசிக்கமாட்டீர்கள். இல்லை, நீங்கள் முழுவதுமாக அழிக்கப்படுவீர்கள்! |
27 | கர்த்தர் உங்களைப் பல நாடுகளில் சிதறடிப்பார். கர்த்தர் உங்களை அனுப்பும் நாடுகளுக்குச் செல்ல உங்களில் வெகுசிலரே மீதியாயிருப்பீர்கள். |
28 | அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப் பட்டு பார்க்கவோ, கேட்கவோ, உண்ணவோ அல்லது நுகரவோ சக்தியற்ற, மனிதர்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்குச் சேவை செய்வீர்கள். |
29 | ஆனால் மற்ற நாடுகளில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் முழு மனதுடனும் முழு இருதயத்துடனும் தேடினால் அவரைக் கண்டடைவீர்கள். |
30 | நீங்கள் துன்பமடைகிற பொழுது, இவைகளெல்லாம் உங்களுக்கு நேரும்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புவீர்கள். அவருக்குக் கீழ்ப்படிவீர்கள். |
31 | உங்கள் தேவனாகிய கர்த்தர் கருணைமிக்க தேவன், உங்களை அங்கே விட்டுவிடமாட்டார் அவர் உங்களை முழுமையாக அழிக்கமாட்டார். உங்கள் முற்பிதாக்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கமாட்டார். |
32 | “இதைப்போன்ற பெரிய செயல் ஏதும் இதற்கு முன் நடந்ததுண்டா? இல்லவே இல்லை. கடந்த காலத்தைப் பாருங்கள். நீங்கள் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்தையும் சிந்தித்துப் பாருங்கள். பூமியில் தேவன் மனிதர்களைப் படைத்த காலம் வரைக்கும் பின்னோக்கிப் பாருங்கள். இவ்வுலகில் நடந்த எல்லாவற்றையும் பாருங்கள். இப்படிப்பட்ட பெரிய காரியம் எதனையும் யாரும் கேள்விப்பட்டதுண்டா? இல்லை! |
33 | தேவன் அக்கினியிலிருந்து உங்களுடன் பேசியதைக் கேட்டும் உயிருடன் இருக்கிறீர்கள்! வேறெவருக்கேனும் அவ்வாறு நடந்ததுண்டா? இல்லை! |
34 | மேலும் வேறு எந்த தேவனும் ஒரு நாட்டிற்குள் நுழைந்து தன் ஜனங்களை தனக்காகத் தேர்ந்தெடுக்க முயன்றதுண்டா? இல்லை! ஆனால் இந்த அற்புதச் செயல்களை உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்ததை நீங்களே கண்டீர்கள்! தன் வல்லமையையும் பலத்தையும் உங்களுக்குக் காண்பித்தார். ஜனங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைக் கண்டீர்கள். அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டீர்கள். போரையும், கொடுஞ் செயல்கள் ஏற்பட்டதையும் பார்த்தீர்கள். |
35 | கர்த்தர் அவர் தேவன் என்பதை நீங்கள் அறியவே அவற்றை நிகழ்த்தினார். அவரைப் போல் வேறொரு தேவன் இல்லை! |
36 | உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க பரலோகத்திலிருந்து நீங்கள் அவரது குரலைக் கேட்க வைத்தார். பூமியின் மீது அவருடைய பெரும் நெருப்பை நீங்கள் காணும்படிச் செய்து, அதிலிருந்து உங்களுடன் பேசினார். |
37 | “கர்த்தர் உங்கள் முற்பிதாக்களை நேசித்தார். அதனால்தான், அவர்களின் சந்ததியினரான உங்களைத் தேர்ந்தெடுத்தார். அதனாலேயே கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார். அவர் உங்களுடன் இருந்து, தமது பெரும் வல்லமையினால் உங்களை வெளியேற்றினார். |
38 | நீங்கள் முன்னேறியபொழுது, உங்களைவிடவும் பெரியதும் வலிமை மிக்கதுமான ஜனங்களை கர்த்தர் வெளியில் துரத்தினார். அந்நாடுகளுக்குள் உங்களை வழிநடத்தினார். நீங்கள் வாழ்வதற்காக உங்களுக்கு அவர்களுடைய நாடுகளைக் கொடுத்தார். இன்றும் அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார். |
39 | ஆகவே கர்த்தரே தேவன் என்பதை நீங்கள் இன்று உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். மேலேயுள்ள பரலோகத்திலும், கீழேயுள்ள பூமியிலும் அவரே தேவன். வேறு தேவன் இல்லை! |
40 | நான் உங்களுக்கு இன்று தரும் அவரது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கும் உங்களுக்குப் பின் வசிக்கப்போகும் உங்கள் குழந்தைகளுக்கும் ஒவ்வொன்றும் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கே எப்பொழுதும் சொந்தமாக உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கும் நாட்டில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள். இது என்றும் உங்களுடையதாயிருக்கும்!” என்றான். |
41 | பின் யோர்தான் நதியின் கிழக்குத் திசையில் மோசே மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுத்தான். |
42 | ஒருவன் முற்பகையின்றி மற்றவனைக் கைத்தவறி கொலை செய்தால், அவன் அம்மூன்று நகரங்களில் ஒன்றுக்குள் கொல்லப்படாமல் ஓடிவிடலாம். ஆனால் அவன் மற்றவனை வெறுக்காமலும், வேண்டுமென்றே கொலை செய்யாதிருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கமுடியும். |
43 | மோசே தேர்ந்தெடுத்த மூன்று நகரங்களாவன: ரூபனின் கோத்திரத்திற்குரிய உயரமான சமவெளியில் உள்ள பேசேர், காத்தின் கோத்திரத்திற்குரிய கீலேயாத்தில் உள்ள ராமோத் மற்றும் மனாசேயின் கோத்திரத்திற்குரிய பாசானில் உள்ள கோலான் ஆகியவையாகும். |
44 | தேவனின் சட்டங்களை மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தான். |
45 | இஸ்வரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியேறியபின், மோசே இப்போதனைகளையும் பிரமாணங்களையும் தந்தான். |
46 | அவர்கள் பெத்பேயோரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் யோர்தான் நதிக்குக் கிழக்கில் இருந்தபொழுது, மோசே இச்சட்டங்களை அவர்களுக்கு வழங்கினான். எஸ்போனில் வசித்த எமோரிய அரசனாகிய சீகோனின் நாட்டில் அவர்கள் இருந்தார்கள். (எகிப்திலிருந்து வெளியேறிய பொழுது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் சீகோனைத் தோற்கடித்தனர். |
47 | அவர்கள் சீகோனின் தேசத்தைப் பிடித்துக் கொண்டார்கள். மேலும் பாசானின் அரசனாகிய ஓக்கின் தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள். இவ்விரு எமோரிய அரசர்களும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் வசித்தார்கள். |
48 | இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஆரோவேர் முதல் சிரியோன் மலை (எர்மோன் மலை) வரையிலும் பரவியுள்ளது. |
49 | யோர்தான் நதியின் கிழக்கில் யோர்தான் பள்ளத்தாக்கு முழுவதையும் இந்நிலப்பகுதி உள்ளடக்கியுள்ளது. இது தெற்கில் சவக்கடல் வரையிலும் கிழக்கில் பிஸ்கா மலையின் அடிவாரம் வரையிலும் பரவியுள்ளது.) |