வேதாகமத்தை வாசி

உபாகமம் 5

                   
புத்தகங்களைக் காட்டு
1மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம், “இஸ்ரவேல் ஜனங்களே! நான் இன்று உங்களிடம் கூறும் சட்டங்களையும் நியாயங்களையும் நன்றாகக் கவனித்துக் கேளுங்கள். நீங்கள் அவற்றை மனதில் கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும்.
2நமது தேவனாகிய கர்த்தர் ‘ஓரேப்’ மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்.
3கர்த்தர் இந்த உடன்படிக்கையை நமது முற்பிதாக்களுடன் செய்து கொள்ளாமல், இன்று உயிரோடு வாழ்கின்ற நம் எல்லோருடனுமே செய்துகொண்டார்.
4மலையிலே கர்த்தர் உங்களிடம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார். அவர் அக்கினியின் நடுவிலிருந்து உங்களிடம் பேசினார்.
5ஆனால், அந்த அக்கினியைக் கண்டு நீங்கள் பயந்தீர்கள். அதனால் நீங்கள் மலையில் ஏறாமல் இருந்தீர்கள். எனவே, கர்த்தர் சொல்வதை உங்களுக்கு அறிவிக்க நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவில் நின்றேன். அப்பொழுது கர்த்தர் சொன்னார்:
6உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் எகிப்தில் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியேறச் செய்தேன். எனவே நான் கூறும் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.
7“என்னைத் தவிர அந்நிய தெய்வங்களை நீங்கள் தொழுதுகொள்ளக்கூடாது.
8“மேலே ஆகாயத்திலோ, கீழே பூமியிலோ அல்லது பூமிக்குக் கீழே தண்ணீரிலோ உள்ள வைகளின் சிலைகளையோ உருவங்களையோ உண்டாக்கக்கூடாது.
9நீங்கள் எத்தகைய விக்கிரகங்களையும் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! என் ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நான் வெறுக்கின்றேன். எனக்கு எதிராக அவ்வாறு பாவம் செய்யும் ஜனங்கள் என் எதிரிகள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் அவர்களின் குழந்தைகளையும்கூடத் தண்டிப்பேன்.
10ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்!
11“உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெயரைத் தவறான வழியில் பயன்படுத்தாதே. அவ்வாறு, ஒருவன் கர்த்தருடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் அவன் தண்டிக்கப்படுவான். அவன் கர்த்தரால் குற்றமற்றவனாகக் கருதப்படமாட்டான்.
12“உங்கள் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாகக் கழிப்பாயாக.
13வாரத்திற்கு ஆறு நாட்கள் உன் வேலைக்குரிய கிரியைகளைச்செய்.
14ஆனால், ஏழாவது நாளோ உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான ஓய்வுநாள். எனவே, அந்த நாளில் யாரும் வேலை செய்யக்கூடாது. நீ மட்டுமின்றி, உனது மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், உன் வீட்டிலுள்ள மாடு, கழுதை மற்றும் பிற விலங்குகளும்கூட வேலைச் செய்யக் கூடாது. உன் வீட்டிலிருக்கின்ற அந்நியர்களும் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. நீ ஓய்வு எடுப்பது போல உன் அடிமைகள் எல்லோருமே ஓய்வு எடுக்க வேண்டும்.
15நீங்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவரது ஆற்றல் மிகுந்த கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தார். உங்களை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமாக்கினார். இதனாலேயே ஓய்வுநாளை எப்போதும் விசேஷித்த நாளாக செய்யும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார்.
16“உன் தாய், தந்தைக்கு மரியாதை செலுத்த வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீ இதைச் செய்வதற்குக் கட்டளையிட்டுள்ளார். நீ இந்தக் கட்டளையைப் பின்பற்றினால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உனக்கு அளிக்கும் நாட்டிலே உன்னை நீண்ட நாள் வாழச் செய்வார்.
17“யாரையும் கொலை செய்யாதிருக்க வேண்டும்.
18“விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்யாதே.
19“எந்த ஒரு பொருளையும் திருடக் கூடாது.
20“பிறருக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது.
21“பிறருடைய மனைவி மீது ஆசைகொள்ளாதே. பிறரது வீட்டையும், அவரது நிலத்தையும், அவரது வேலைக்காரன் வேலைக்காரிகளையும், அவனது மாடு அல்லது கழுதைகளையும் விரும்பக் கூடாது. மற்றவர்களிடம் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்ள ஆசைப்படக் கூடாது” என்றான்.
22மோசே, “இந்தக் கட்டளைகளை கர்த்தர் மலையிலே உங்கள் எல்லோர் முன்னிலையிலுமே வழங்கினார். அக்கினியிலிருந்தும், மேகத்திலிருந்தும், இருளிலிருந்தும் மகாசத்தமாகவே கர்த்தர் பேசினார். அவர் வழங்கிய இக்கட்டளைகளைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவர் இந்தக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.
23“மலை அக்கினியால் எரிந்தபோது இருளிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள். பின்பு மூப்பர்களும் உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் என்னிடம் வந்தார்கள்.
24அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர் அவரது மகிமையையும், பெருமைகளையும் காண்பித்தார். நாம் அவர் அக்கினியிலிருந்து பேசியதைக் கேட்டோம். தேவன் மனிதனோடு பேசியும் அவர் உயிரோடு வாழ்வதை இந்நாளில் கண்டோம்.
25ஆனால், இங்கே மீண்டும் நமது தேவனாகிய கர்த்தர் பேசுவதைக் கேட்டோமானால் நாம் மரிப்பது உறுதி. அந்த பயங்கரமான அக்கினியானது நம்மை அழித்துவிடும். நாம் மரிக்க விரும்பவில்லை.
26நாம் கேட்டதுபோல் அக்கினியின் நடுவே இருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை வேறு யாராவது கேட்டு உயிரோடிருந்ததுண்டோ!
27மோசே, நீ நெருங்கிச் சென்று, நமது தேவனாகிய கர்த்தர் கூறும் எல்லாவற்றையும் கேட்க வேண்டும். பின் கர்த்தர் உம்மிடம் கூறிய எல்லாவற்றையும் எங்களிடம் சொல்ல வேண்டும். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்டு அதன்படியே செய்வோம்’ என்றீர்கள்.
28“கர்த்தர் நீங்கள் என்னோடு பேசியதைக் கேட்டுக்கொண்டு, அவர் என்னிடம் சொன்னது, ‘இந்த ஜனங்கள் உன்னோடு பேசியதை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னது எல்லாமே நன்றாகவே இருந்தன.
29நான் விரும்புவதெல்லாம் அவர்களது சிந்தனை வழிமாறாமல் என்னை மதித்து எனக்குக் கீழ்ப்படிந்து, எனது கட்டளைகளை எல்லாம் பின்பற்றக்கூடிய மனஉறுதியைப் பெறவேண்டும். அப்போது அவர்களுக்கு எல்லாவற்றிலும் நன்மை உண்டாயிருக்கும். அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் அனைத்தும் நன்றாய் அமையும்.
30“ ‘நீ சென்று அந்த ஜனங்களிடம், அவர்களது கூடாரங்களுக்குத் திரும்பிப் போகச் சொல்,
31ஆனால் நீயோ இங்கே எனது அருகிலேயே நில். நான் உன்னிடம் எல்லா கட்டளைகளையும், சட்டங்களையும் நியாயங்களையும் சொல்லுகிறேன். அவற்றை நீ அவர்களுக்குப் போதிக்க வேண்டும். நான் அவர்கள் வாழும்படி கொடுத்த நிலத்தில் உன் போதனைப்படியே அவர்கள் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்.’
32“ஆகையால், நீங்கள் கர்த்தர் உங்களுக்குக் கூறிய கட்டளைகளின்படி நடந்துகொள்ளக் கவனமாக இருங்கள். தேவன் கூறியவற்றைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதீர்கள்.
33உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கட்டளைகளின்படியே நெறிதவறாது வாழவேண்டும். பின் நீங்கள் தொடர்ந்து எல்லாவற்றிலும் நலம்பெற்று வாழலாம். உங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நீண்டநாள் நீங்கள் வாழ்வீர்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.