வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 30

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேல் கோத்திரங்களில் உள்ள தலைவர்களைப் பார்த்து மோசே பேசினான். கர்த்தர் தனக்குச் சொன்ன இக்கட்டளைகளை எல்லாம் மோசே அவர்களிடம் சொன்னான். அவன்,
2“ஒருவன் கர்த்தருக்கு ஏதாவது விசேஷ பொருத்தனை செய்ய விரும்பினால், அல்லது கர்த்தருக்கு விசேஷமானவற்றைக் கொடுக்க விரும்பினால், அவன் அவ்வாறே செய்யட்டும். ஆனால் அவன் வாக்களித்தபடிக் கொடுக்க வேண்டும்!
3“ஓர் இளம் பெண் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்போது சிலவற்றை கொடுப்பதாக அவள் கர்த்தரிடம் ஒரு விசேஷ பொருத்தனை பண்ணியிருக்கலாம்.
4இதைப்பற்றி அவளது தந்தை தெரிந்து கொண்டு அந்த வாக்கை நிறைவேற்ற ஒப்புக் கொண்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும்.
5ஆனால் அவளது வேண்டுதலை அவளது தந்தை அறிந்து அதைத் தடுத்தால், பிறகு அவள் தன் வாக்கில் இருந்து விடுதலை பெறுகிறாள். அவள் தனது பொருத்தனையை நிறைவேற்றத் தேவையில்லை. அவளது தந்தை அவளைத் தடுத்துவிட்டால் அவளை கர்த்தர் மன்னித்துவிடுவார்.
6“ஒரு பெண் தான் கர்த்தருக்கு சிலவற்றைக் கொடுப்பதாக விசேஷ வாக்கை கர்த்தரிடம் செய்த பிறகு திருமணம் ஆகியிருக்கலாம்.
7அவளது கணவன் அந்த வேண்டுதலை அறிந்து அதற்க்கு ஒப்புக் கொண்டுவிட்டால் அவள் அதை நிறைவேற்ற வேண்டும்.
8ஆனால் அவளது கணவன் அவளது வேண்டுதலை அறிந்து மறுத்துவிட்டால் பிறகு அவள் தன் வாக்கை நிறைவேற்ற வேண்டாம். அவளது கணவன் அந்த வாக்கை முறித்து அதனை நிறைவேற்ற முடியாதபடி செய்துவிட்டதால் கர்த்தர் அவளை மன்னித்துவிடுவார்.
9“ஒரு விதவை அல்லது விவாகரத்து செய்து கொண்ட பெண் சிறப்பான பொருத்தனை செய்திருக்கலாம். அப்போது அவள் தனது பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும்.
10ஒரு திருமணமானப் பெண் கர்த்தருக்கு ஒரு பொருத்தனை செய்திருக்கலாம்.
11இதைப்பற்றி அவளது கணவன் அறிந்து அதை அவன் அனுமதித்துவிட்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். அவள் வாக்கின்படி அனைத்தையும் கொடுக்க வேண்டும்.
12ஆனால் அவளது கணவன் அதனை அறிந்து மறுத்துவிட்டால், அவள் தன் வாக்கை நிறைவேற்ற தேவையில்லை. அவளது வாக்கை அவளது கணவன் முறித்துவிட்டதால் அது பொருட்படுத்தக் கூடியதாக இல்லை. எனவே கர்த்தர் மன்னித்துவிடுவார்.
13ஒரு திருமணமான பெண் கர்த்தருக்குச் சிலவற்றைத் தருவதாக வாக்களித்திருக்கலாம்; அல்லது அவள் தன் ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது விசேஷ வாக்குறுதிகளைச் செய்திருக்கலாம். அவற்றை அவளது கணவன் தடுக்கவோ அல்லது காப்பாற்றவோ செய்யலாம்.
14எவ்வாறு ஒரு கணவன் தன் மனைவியின் வாக்கை நிறைவேற்ற உதவ முடியும்? அவன் அதைப் பற்றி அறிந்ததை ஏற்றுக் கொண்டால் போதும். அவன் மறுக்காத பட்சத்தில் அவள் அதனை முழுமையாகச் செய்து முடித்துவிட வேண்டும்.
15ஆனால் அவளது கணவன் அவளது வாக்கை அறிந்தும் தடுத்துவிட்டால், வாக்குறுதியை உடைத்த பொறுப்பு அவனைச் சார்ந்ததாகும்” என்றான்.
16இந்தக் கட்டளைகளையே மோசேயிடம் கர்த்தர் கூறினார். இவை, ஒருவனுக்கும் அவன் மனைவிக்கும் உரிய கட்டளைகளாகும். இவை, ஒரு தந்தைக்கும் தந்தை வீட்டில் வாழும் இளம் பெண்ணுக்கும் உரிய கட்டளைகளாகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.