1 | கர்த்தர் மோசேயிடம் பேசினார். அவர், “ |
2 | இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தக் கட்டளையையும் கொடு. எனக்குரிய தானியக் காணிக்கையையும், பலிகளையும் உரிய காலத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல். அவற்றில் தகனபலியும் ஒன்று. அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். |
3 | கர்த்தருக்கு ஜனங்கள் கொடுக்க வேண்டிய பலிகளில் நெருப்பில் இடப்படும் தகன பலியும் ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிட வேண்டும். |
4 | இவற்றில் ஒன்றைக் காலையிலும், மற்றொன்றைச் சூரியன் அஸ்தமிக்கும் வேளையிலும் பானங்களின் காணிக்கையோடு கொடுக்க வேண்டும். |
5 | பிறகு தானியக் காணிக்கையும் தரவேண்டும். அதாவது ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவை, காற்படி ஒலிவ எண்ணெயிலே பிசைந்து செலுத்த வேண்டும். |
6 | (சீனாய் மலையில் அவர்கள் இவ்வாறு செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் இதனை நெருப்பில் தனகபலியாகச் செய்தனர். அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமாயிருந்தது.) |
7 | அவர்கள் தகனபலியோடுச் சேர்த்து பானங்களின் காணிக்கையையும் கொடுத்தனர். ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் அவர்கள் காற்படி திராட்சை ரசத்தையும் அளிக்க வேண்டும். பலிபீடத்தின் பரிசுத்தமான இடத்தில் பானங்களின் காணிக்கையை ஊற்ற வேண்டும். இது கர்த்தருக்குத் தரும் அன்பளிப்பாகும். |
8 | மாலையில் சூரியன் அஸ்தமித்த பிறகு இன்னொரு ஆட்டுக்குட்டியைப் பலியிட வேண்டும். காலையில் செய்தது போலவே மாலையிலும் செய்ய வேண்டும். அதோடு பானங்களின் பலியையும் கொடுக்க வேண்டும். இந்தப் பலியானது நெருப்பின் மூலம் செலுத்தப்பட வேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்குப் பிடிக்கும்.” |
9 | “ஓய்வு நாளுக்கு, நீங்கள் ஒரு வயதான 2 ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்க வேண்டும். அவை பழுதற்றதாக இருக்க வேண்டும். அதோடு தானியக் காணிக்கையையும் கொடுக்க வேண்டும். மெல்லிய மாவிலே பத்தில் இரண்டு பங்கினை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து தரவேண்டும். பானங்களின் காணிக்கையையும் தரவேண்டும். |
10 | இது ஓய்வு நாளுக்குரிய சிறப்பான பலியாகும். இது, வழக்கமான தினப் பலிகளோடு சேர்த்து கொடுக்க வேண்டிய பலியாகும் பானங்களின் காணிக்கையும் இதோடு சேரவேண்டும். |
11 | “ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் கர்த்தருக்கு விசேஷமான ஒரு தகனபலி கொடுக்க வேண்டும். இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதுடைய ஏழு பழுதற்ற ஆட்டுக் குட்டிகளையும் பலி தரவேண்டும். |
12 | ஒவ்வொரு காளையோடும் தானியக் காணிக்கையும் கொடுக்க வேண்டும். அது பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து கொடுக்க வேண்டும். ஆட்டுக்கடாவோடு கொடுக்கப்படும் உணவுப் பலியில் பத்தில் இரண்டு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். |
13 | ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் தரப்படும் தானியப்பலியில் பத்திலே ஒரு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். இவற்றை நெருப்பில் தகன பலிகயாகக் கொடுக்கவேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். |
14 | பானங்களின் காணிக்கையானது ஒவ்வொரு காளையோடு அரைப்படி திராட்சைரசமாக இருக்க வேண்டும். செம்மறி ஆட்டுக்கடாவோடு ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சை ரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் அரைப்படி திராட்சைரசமும் கொடுக்க வேண்டும். இவை தகன பலியாக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் அளிக்க வேண்டும். |
15 | வழக்கமாக நாள் தோறும் தரப்படும் தகன பலியோடும், பானபலியோடும் ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்க வேண்டும். |
16 | “முதல் மாதத்தின் 14வது நாள் கர்த்தருடைய பஸ்கா பண்டிகையாகும். |
17 | அம்மாதத்தின் 15வது நாளில் புளிப்பில்லா அப்பப் பண்டிகை துவங்குகிறது. இது ஏழு நாட்களுக்கு இருக்கும். இந்த நாட்களில் புளிப்பில்லாத அப்பத்தை மட்டும் சாப்பிட வேண்டும். |
18 | இதன் முதல் நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. |
19 | கர்த்தருக்கு தகனபலி தர வேண்டும். அதில் 2 காளைகள், 1 ஆட்டுக்கடா, ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகள் இருக்க வேண்டும். இவற்றில் எந்தக்குறையும் இருக்கக் கூடாது. |
20 | தானியக் காணிக்கையாக ஒவ்வொரு காளையோடும் பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தரவேண்டும். |
21 | ஆட்டுக் கடாவோடு பத்தில் இரண்டு பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தர வேண்டும்; ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தர வேண்டும். |
22 | அத்தோடு நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். அது உங்களை சுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலியாகும். |
23 | இதனை நீங்கள் வழக்கமாகக் காலையில் கொடுக்கும் பலியோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும். |
24 | “இதுபோலவே, ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளிலும் இவற்றை நெருப்பில் தகன பலியாகக் கொடுக்க வேண்டும். அதனோடு பானங்களின் காணிக்கையும் சேரும். கர்த்தருக்கு இம்மணம் மிகவும் பிடிக்கும். இப்பலிகள் ஜனங்களுக்கு உணவாகும். நீங்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு நாளும் கொடுக்கும் பலியோடு சேர்த்து கொடுக்க வேண்டும். |
25 | “இதன் ஏழாவது நாள் இன்னொரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எவ்வித வேலையும் செய்யக்கூடாது. |
26 | “முதல் கனிகளைச் செலுத்தும் பண்டிகையின் போதும் (பெந்தெகோஸ்தே என்னும் வாரங்களின் பண்டிகை) புதிய அறுவடையின்போது கர்த்தருக்கு தானியக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு சிறப்புக் கூட்டத்திற்கும் நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. |
27 | நீங்கள் ஒரு தகன பலியைக் கொடுக்க வேண்டும். இது நெருப்பின் மூலம் அளிக்கப்பட வேண்டும். இந்த வாசனை கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். அப்போது நீங்கள் 2 காளைகளையும், 1 செம்மறி ஆட்டுக்கடாவையும், 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தர வேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதுடையதாய் பழுதற்றதாய் இருக்க வேண்டும். |
28 | ஒவ்வொரு காளையோடும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண் ணெயுடன் பிசைந்து தரவேண்டும்; ஒவ்வொரு செம்மறி ஆட்டுக் கடாவோடும், 16 கிண்ணம் மெல்லியமாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். |
29 | ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும், 8 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும். |
30 | ஒரு வெள்ளாட்டுக் கடாவை உங்களைச் சுத்தப்படுத்த பாவப்பரிகார பலியாகத் தர வேண்டும். |
31 | நீங்கள் இந்தப் பலிகளை வழக்கமாகத்தரும் தினப் பலிகளோடு சேர்த்துத் தர வேண்டும். மிருகங்களில் எவ்வித குறையும் இல்லாதவாறு எச்சரிக்கையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பானங்களின் காணிக்கைகளிலும் குறையில்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். |