1 | பெருநோய் ஏற்பட்ட பிறகு கர்த்தர் மோசேயிடமும் ஆரோனின் மகனும், ஆசாரியனுமாகிய எலெயாசரிடமும் பேசினார். |
2 | அவர், “ இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிடுங்கள். 20 வயதும் அதற்கு மேலுமுள்ள ஆண்களைக் குடும்ப வாரியாகக் கணக்கிட்டு பட்டியல் செய்யுங்கள். இவர்களே இஸ்ரவேல் படையில் சேர்ந்து பணியாற்றும் தகுதி உடையவர்கள்” என்றார். |
3 | இந்த நேரத்தில் ஜனங்கள் மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்குப் பகுதியில் முகாமிட்டிருந்தார்கள். இது, யோர்தான் ஆறு எரிகோவிலிருந்து வந்து கடக்கும் இடமாகும். எனவே மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஜனங்களிடம் இங்கே பேசினர். அவர்கள், |
4 | “நீங்கள் 20 வயதும் அதற்கு மேற்பட்டுமுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட வேண்டும். கர்த்தர் மோசேயிடம் இந்த ஆணையை அளித்திருக்கிறார்” என்றனர். எகிப்திலிருந்து வெளியேறி வந்த ஜனங்களின் பட்டியல் இதுதான்: |
5 | ரூபன் குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்கள் தான்: (ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்.) அந்தக் குடும்பங்களாவன: ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தந்தையான ஆனோக், பல்லூவியர் குடும்பத்துக்குத் தந்தையான பல்லூ, |
6 | எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தந்தையான எஸ்ரோன், கர்மீயர் குடும்பத்துக்குத் தந்தையான கர்மீ. |
7 | இவர்கள் ரூபனின் குழுவில் உள்ள குடும்பத்தினர். இவர்களில் மொத்தம் 43,730 ஆண்கள் கணக்கிடப்பட்டனர். |
8 | பல்லூவின் மகன் எலியாப். |
9 | எலியாப்புக்கு மூன்று மகன்கள். அவர்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் ஆகியோர். இவர்களில் தாத்தான் அபிராம் என்ற இரு தலைவர்களும், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரும்பினவர்கள் ஆவார்கள். இவர்கள் கர்த்தருக்கு எதிராகச் செயல்பட்ட கோராகைப் பின்பற்றினார்கள். |
10 | அப்போது பூமி பிளந்து கோராகையும் அவனைப் பின்பற்றியவர்களையும் விழுங்கிவிட்டது. அதினால் 250 பேர் மரித்துப் போனார்கள்! அது இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் எச்சரிக்கையாய் இருந்தது. |
11 | ஆனால் கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் மரிக்கவில்லை. |
12 | சிமியோனின் கோத்திரத்திலும் பல குடும்பங்கள் இருந்தன: நேமுவேல் குடும்பத்தின் தந்தையான நேமுவேல், யாமினியர் குடும்பத்தின் தந்தையான யாமினி, யாகீனியர் குடும்பத்தின் தந்தையான யாகீன், |
13 | சேராகியர் குடும்பத்தின் தந்தையான சேராகி, சவுலியர் குடும்பத்தின் தந்தையான சவுல். |
14 | இவர்களே சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 22,200 பேர் இருந்தனர். |
15 | காத் கோத்திரத்தில் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். சிப்போனியர் குடும்பத்தின் தந்தையான சிப்போன், ஆகியரின் குடும்பத்தின் தந்தையான ஆகி, சூனியர் குடும்பத்தின் தந்தையான சூனி, |
16 | ஒஸ்னியர் குடும்பத்தின் தந்தையான ஒஸ்னி, ஏரியர் குடும்பத்தின் தந்தையான ஏரி, |
17 | ஆரோதியர் குடும்பத்தின் தந்தையான ஆரோத், அரேலியர் குடும்பத்தின் தந்தையான அரேலி, |
18 | இவர்களே காத்தின் குடும்பத்திலுள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 40,500 பேர் இருந்தனர். |
19 | யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்களின் பெயர்கள்: சேலாவியர் குடும்பத்தின் தந்தையான சேலாவி, பாரேசியர் குடும்பத்தின் தந்தையான பாரேசி, சேராவியர் குடும்பத்தின் தந்தையான சேரா ஆகியோர். |
20 | (யூதாவின் ஏர், ஓனான் எனும் இரு மகன்களும் கானான் நாட்டில் மரித்துப் போனார்கள்.) |
21 | பாரேசின் மகன்களின் குடும்பத்தில், எஸ்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக எஸ்ரோனியும், ஆமூலியர் குடும்பத்தின் தந்தையாக ஆமூலும் இருந்தனர். |
22 | இவர்கள் அனைவரும் யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 76,500 பேர் இருந்தனர். |
23 | இசக்காரின் கோத்திரத்தில், தோலாவியர் குடும்பத்தின் தந்தையாக தோலாவும் பூவாவியர் குடும்பத்தின் தந்தையாக பூவாவும். |
24 | யாசூபியர் குடும்பத்தின் தந்தையாக யாசூபும் சிம்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக சிம்ரோனும் இருந்தனர். |
25 | இவர்கள் இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,300 பேர் இருந்தனர். |
26 | செபுலோனியர் கோத்திரத்தில், சேரேத்தியர் குடும்பத்தின் தந்தையாக சேரேத்தும், ஏலோனியர் குடும்பத்தின் தந்தையாக ஏலோனும், யாலேயேலியர் குடும்பத்தின் தந்தையாக யாலேயேலும் இருந்தனர். |
27 | இவர்கள் செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 60,500 பேர் இருந்தனர். |
28 | யோசேப்பிற்கு மனாசே, எப்பிராயீம் எனும் இரண்டு மகன்கள் இருந்தனர், இரு வரும் தம் சொந்தக் குடும்பங்களோடு, ஒரு கோத்திரமாக உருவானார்கள். |
29 | மனாசேயின் குடும்பங்கள் பின்வருமாறு: மாகீர் - மாகீரியர் குடும்பம் (மாகீர் கிலெயாத்தின் தந்தை) கிலெயாத் - கிலெயாத்தின் குடும்பம். |
30 | கிலெயாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: ஈயேசேர் - ஈயேசேரியரின் குடும்பம். ஏலேக் - ஏலேக்கியரின் குடும்பம். |
31 | அஸ்ரியேல் - அஸ்ரியேலரின் குடும்பம். சேகேம் - சேகேமியரின் குடும்பம். |
32 | செமீதா - செமீதாவியரின் குடும்பம். ஏப்பேர் - ஏப்பேரியரின் குடும்பம். |
33 | ஏப்பேரின் மகன் செலோப்பியாத். ஆனால் அவனுக்கு மகன்கள் இல்லை. மகள்கள் மட்டுமே இருந்தனர். மக்லாள், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவை அவர்களின் பெயர்களாகும். |
34 | இவர்கள் மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 52,700 பேர் இருந்தனர். |
35 | எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: சுத்தெலாகி - சுத்தெலாகியரின் குடும்பம், பெகேர் - பெகேரியரின் குடும்பம், தாகான் - தாகானியரின் குடும்பம், |
36 | ஏரான் சுத்தெலாகியர் குடும்பத்தவன். இவனது குடும்பம் ஏரானியர் குடும்பம் ஆயிற்று. |
37 | இவர்கள் எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 32,500 பேர் இருந்தனர். இந்த ஜனங்கள் அனைவரும் யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்கள்: |
38 | பென்யமீனின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: பேலா - பேலாவியரின் குடும்பம், அஸ்பேல் - அஸ்பேலியரின் குடும்பம், அகிராம் - அகிராமியரின் குடும்பம், |
39 | சுப்பாம் - சுப்பாமியரின் குடும்பம், உப்பாம் - உப்பாமியரின் குடும்பம், |
40 | போலாவின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: ஆரேது - ஆரேதியரின் குடும்பம், நாகமான் - நாகமானியரின் குடும்பம், |
41 | இவர்கள் அனைவரும் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45, 600 பேர் இருந்தனர். |
42 | தாணின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: சூகாம் - சூகாமியரின் குடும்பம். இது தாணின் கோத்திரத்திலிருந்து வந்த கோத்திரங்களாகும். |
43 | சூகாமியரின் கோத்திரத்தில் ஏராளமான குடும்பங்கள் இருந்தன. இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,400 பேர் இருந்தனர். |
44 | ஆசேருடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: இம்னா - இம்னாவியரின் குடும்பம், இஸ்வி - இஸ்வியரின் குடும்பம், பெரீயா - பெரீயாவியரின் குடும்பம், |
45 | பெரீயாவின் குடும்பங்களில் உள்ளவர்கள்: ஏபேர் - ஏபேரியரின் குடும்பம், மல்கியேல் - மல்கியேலியரின் குடும்பம். |
46 | சாராள் என்ற பேரில் ஆசேருக்கு ஒரு மகள் இருந்தாள். |
47 | இவர்கள் அனைவரும் ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 53,400 பேர் இருந்தனர். |
48 | நப்தலியினுடைய குடும்பத்தில் உள்ள குடும்பங்கள்: யாத்சியேல் - யாத்சியேலியரின் குடும்பம், கூனி - கூனியரின் குடும்பம். |
49 | எத்சேர் - எத்சேரியரின் குடும்பம். சில்லேமின் - சில்லேமியரின் குடும்பம். |
50 | இவர்கள் அனைவரும் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45,400 பேர் இருந்தனர். |
51 | எனவே மொத்தம் 601, 730 இஸ்ரவேல் ஆண்கள் இருந்தனர். |
52 | கர்த்தர் மோசேயிடம், |
53 | “இந்த நாடானது பங்கிடப்பட்டு இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொருԔகோத்திரமும் போதுமான நிலத்தைப் பெற்றுக்கொள்ளும். |
54 | “பெரிய கோத்திரம் மிகுதியான நிலத்தைப் பெறும். சிறிய கோத்திரம் குறைந்த அளவு நிலத்தைப் பெறும். அவர்கள் பெற்றுள்ள இந்த நாடானது சமமாகப் பங்கு வைக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும். |
55 | ஆனால் நீயோ சீட்டுக் குலுக்கல் முறை மூலமே எந்தப் பகுதி எந்தக் கோத்திரத்திற்கு உரியது என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் தனது பங்கினைப் பெற வேண்டும். அப்பங்கானது கோத்திரத்தின் பெயரிலேயே கொடுக்கப்பட வேண்டும். |
56 | சிறியதும் பெரியதுமான அனைத்து கோத்திரத்திற்கும் நிலங்கள் கொடுக்கப்படும். இதனை முடிவுசெய்ய சீட்டு குலுக்கல் முறையைக் கையாளவேண்டும்” என்றார். |
57 | அவர்கள் லேவியின் கோத்திரத்தையும் எண்ணிக் கணக்கிட்டனர். லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: கெர்சோன்-கெர்சோனியரின் குடும்பம். கோகாத் - கோகாத்தியரின் குடும்பம். மெராரி - மெராரியரின் குடும்பம். |
58 | லிப்னீயரின் குடும்பம், எப்ரோனியரின் குடும்பம், மகலியரின் குடும்பம், மூசியரின் குடும்பம், கோராகியரின் குடும்பம் ஆகியவை லேவியரின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள். அம்ராமும் கோகாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் |
59 | அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். இவளும் லேவியின் கோத்திரத்தில் உள்ளவள். அவள் எகிப்திலே பிறந்தவள். யோகெபேத்தும் அம்ராமும் ஆரோனையும் மோசேயையும் பெற்றனர். அவர்களுக்கு மிரியம் என்ற மகளும் உண்டு. |
60 | ஆரோன் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமர் ஆகியோரின் தந்தை. |
61 | ஆனால் நாதாபும் அபியூவும் மரித்துப்போனார்கள். ஏனென்றால் அவர்கள் அங்கீகரிக்கப்படாத அக்கினியால் கர்த்தருக்கு பலியைச் செலுத்தினார்கள். |
62 | “லேவியின் கோத்திரத்தில் ஆண்கள் மொத்தம் 23,000 பேர் இருந்தனர். ஆனால் இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணி கணக்கிடப்படவில்லை. அவர்கள், மற்றவர்களுக்குக் கர்த்தர் கொடுத்த நாட்டின் பங்குகளையும் பெறவில்லை. |
63 | மோசேயும் எலெயாசாராகிய ஆசாரியனும் சேர்ந்து அனைத்து ஜனங்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்தபோது அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். இந்த இடம் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் அருகில் இருந்தது. |
64 | பல ஆண்டுகளுக்கு முன்னால், சீனாய் பாலைவனத்தில் மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். ஆனால் அவர்கள் மரித்துவிட்டனர். அவர்களில் யாரும் உயிரோடு இல்லை. |
65 | ஏனென்றால் அவர்கள் அனைவரும் பாலைவனத்திலேயே மரித்துப் போவார்கள் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் அவர்கள் மரித்தார்கள். அவர்களில் இருவர் மட்டுமே உயிரோடு இருந்தனர். ஒருவன், எப்புன்னேயின் மகனான காலேப். இன்னொருவன் நூனின் மகனாகிய யோசுவா. |