வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 24

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புவதைப் பிலேயாம் கவனித்தான். எனவே, பிலேயாம் அதனை மாற்ற எவ்வகையான மந்திரத்தையும் பயன்படுத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் பிலேயாம் திரும்பி பாலைவனத்தை நோக்கிப் பார்த்தான்.
2பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பார்த்தான். அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தங்கள் கோத்திரங்களோடு கூடாரமிட்டுத் தங்கி இருந்தார்கள். தேவனுடைய ஆவி பிலேயாமின் மீது வந்தது.
3அதனால் அவன் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்: “பேயோரின் குமாரனான பிலேயாமிடமிருந்து வரும் செய்தி. நான் தெளிவாக பார்த்தவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
4நான் தேவனிடமிருந்து இந்த செய்தியைக் கேட்டேன். சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குக் காட்டியதை நான் பார்த்தேன். நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பணிவாகக் கூறுகிறேன்.
5“யாக்கோபின் ஜனங்களே, உங்கள் கூடாரங்கள் அழகாக இருக்கின்றன! இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் வீடுகள் அழகாக இருக்கின்றன!
6நீங்கள் நதிக்கரையில் அமைக்கப்பட்ட தோட்டம் போன்றும், ஆற்றங்கரையில் வளர்ந்த தோட்டம் போன்றும் இருக்கின்றீர்கள். கர்த்தரால் நடப்பட்ட வாசனை நிறைந்த அடர்ந்த செடிகளைப் போன்று இருக்கின்றீர்கள். தண்ணீர்க்கரையில் வளர்ந்திருக்கும் அழகான மரங்களைப் போன்று இருக்கின்றீர்கள்.
7உங்கள் விதைகள் வளர்வதற்கேற்ற போதுமான தண்ணீரை நீங்கள் பெறுவீர்கள். ஆகாக் அரசனைவிட உங்கள் அரசன் பெரியவன். உங்கள் ராஜ்யம் மிகப் பெரியதாகும்.
8“தேவன் அந்த ஜனங்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்தார். அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலமுள்ளவர்கள். அவர்கள் பகைவர்கள் அனைவரையும் தோற்கடிப்பார்கள். அவர்களின் எலும்பை நொறுக்கி, தங்கள் அம்புகளை எய்வார்கள்.
9“இஸ்ரவேல் ஜனங்கள் சிங்கம் போன்றவர்கள். அவர்கள் சுருண்டு படுத்திருக்கிறார்கள். ஆமாம்! அவர்கள் இளம் சிங்கத்தைப் போன்றவர்கள். எவரும் அவர்களை எழுப்ப விரும்பவில்லை! உங்களை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். உங்களை சபிப்பவர்கள் சபிக்கப்படுவார்கள்.”
10பிலேயாம் மீது பாலாக்குக்கு பெருங்கோபம் ஏற்பட்டது. பாலாக் பிலேயாமிடம், “நீ வந்து என் பகைவருக்கு எதிராகப் பேசும்படி அழைத்தேன். ஆனால் நீ அவர்களை மூன்று முறை ஆசீர்வதித்திருக்கிறாய்.”
11இப்போது இந்த இடத்தைவிட்டு வீட்டிற்கு ஓடிப்போ. நான் உனக்கு ஒரு நல்ல தொகையைக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் உனது பரிசை நீ இழப்பதற்குக் கர்த்தர் காரணமாக இருந்துவிட்டார்” என்றான்.
12ஆனால் பிலேயாம், நீ என்னிடம் சிலரை அனுப்பினாய், அவர்கள் என்னை அழைத்தனர். ஆனால் நான் அவர்களிடம்,
13பாலாக் தனது அழகான வீடு நிறைய வெள்ளியும் தங்கமும் எனக்குத்தரலாம். ஆனால் கர்த்தர் எதைச் சொல்லவேண்டும் என்று ஆனையிடுகிறாரோ அதை மட்டுமே சொல்வேன். நானாக எதையும் என்னால் செய்ய முடியாது. அது நன்மையோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். கர்த்தர் ஆணையிட்டபடியே நான் சொல்ல வேண்டும்’ என்றேன். நான் உன் ஆட்களிடம் கூறியதை நினைத்துப்பார்.
14நான் இப்போது என் சொந்த ஜனங்களிடம் திரும்பிச் செல்கிறேன். ஆனால் நான் உனக்கு இந்த எச்சரிக்கையை கொடுக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் உனக்கும் உன் ஜனங்களுக்கும் வரும் நாட்களில் என்ன செய்வார்கள் என்பதையும் உனக்குக் கூறிவிடுகிறேன்” என்றான்.
15பிறகு பிலேயாம் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்: “பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லும் செய்தி இது. நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறேன்.
16நான் இந்தச் செய்திகளை தேவனிடமிருந்து கேட்டேன். உன்னதமான தேவன் கற்பித்தவற்றை நான் அறிந்தேன். சர்வ வல்லமையுள்ள தேவன் காட்டியவற்றை நான் கண்டேன். நான் தெளிவாகப் பார்த்தவற்றை மட்டுமே உங்களுக்குப் பணிவுடன் கூறுவேன்.
17“கர்த்தர் வருவதை நான் காண்கிறேன். ஆனால் இப்பொழுது அல்ல. நான் அவரைக் காண்பேன், ஆனால் வெகு சீக்கிரம் அல்ல. யாக்கோபின் குடும்பத்திலிருந்து ஒரு நட்சத்திரம் வரும். இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒரு அரசன் வருவார். அவர் மோவாப் ஜனங்களின் தலைகளை நசுக்கி, சேத்தின் பிள்ளைகளது தலைகளையெல்லாம் அந்த அரசன் அழிப்பார்.
18இஸ்ரவேல் ஜனங்கள் பலத்தோடு வளர்வார்கள்! அவர்கள் ஏதோமின் நாட்டைப் பெறுவார்கள். அவர்களது பகைவர்களான சேயர்களின் நாட்டையும் அவர்கள் கைப்பற்றுவார்கள்.
19“யாக்கோபின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய அரசன் வருவார். நகரத்தில் உயிரோடு மிஞ்சியிருக்கும் ஜனங்களை அவர் அழிப்பார்.”
20பிறகு பிலேயாம் திரும்பி அமலேக் ஜனங்களை நோக்கி, “அமலேக் நாடானது அனைத்து நாடுகளையும்விடப் பலம்பொருந்தியது. ஆனால் இந்த அமலேக்கும் கூட அழிக்கப்படும்!” என்று சொன்னான்.
21பிறகு கேனிய ஜனங்களைப் பார்த்து: “மலை உச்சியில் இருக்கும் பறவையின் கூடு போல உங்கள் நாடு பாதுகாப்புடன் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
22ஆனால் கேனிய ஜனங்களும் கூடுகளைப் போன்று கர்த்தரால் அழிக்கப்படுவார்கள். அசீரியா உங்களைச் சிறை பிடிக்கும்” என்றான்.
23மேலும் அவன்: “தேவன் இவ்வாறு செய்யும்போது ஒருவனும் தப்பிக்க முடியாது.
24சைப்ரஸிலிருந்து கப்பல்கள் வரும். அவர்கள் அசீரியாவையும், எபோரையும் தோற்கடிப்பார்கள். ஆனால் அந்தக் கப்பல்களும் அழிக்கப்படும்” என்றான்.
25பிறகு பிலேயாம் எழுந்து தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். பாலாக் தன் பாதையில் சென்றான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.