1 | கானானிய ஜனங்களுக்கு ஆராத் என்ற அரசன் இருந்தான். அவன் பாலைவனத்தின் தென் பகுதியில் குடி இருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அத்தாரீம் சாலைவழியாக வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் படைவீரர்களை அனுப்பி இஸ்ரவேல் ஜனங்களைத் தாக்கினான். ஆராத் சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். |
2 | பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் ஒரு விசேஷ வேண்டுதல் செய்தனர். அவர்கள், “கர்த்தாவே! இந்த ஜனங்களை வெல்ல எங்களுக்கு உதவும். நீர் இவ்வாறு செய்தால் அவர்களின் நகரங்களை உமக்கு அர்ப்பணிப்போம். நாங்கள் அவர்களை முழுமையாக அழித்துவிடுவோம்” என்று கூறினார்கள். |
3 | இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுதலைக் கர்த்தர் கேட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை முழுமையாக அழித்தனர். அவர்களின் நகரங்களும் அழிக்கப்பட்டன. எனவே அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டனர். |
4 | ஓர் என்ற மலையை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பயணம் செய்தனர். ஏதோம் நாட்டைச் சுற்றிக் கொண்டு அவர்கள் சென்றனர். இதனால் ஜனங்கள் பொறுமை இழந்தனர். |
5 | அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுக்கத் துவங்கினார்கள். அவர்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்கள் இங்கே பாலைவனத்தில் மரித்துக் கொண்டிருக்கிறோம்! உண்ண அப்பம் இல்லை! தண்ணீர் இல்லை! இந்த அற்பமான உணவை நாங்கள் வெறுக்கிறோம்!” என்றனர். |
6 | எனவே, கர்த்தர் விஷமுள்ள பாம்புகளை அனுப்பினார். அவை அவர்களைக் கடித்தன. அநேக இஸ்ரவேல் ஜனங்கள் மரணமடைந்தனர். |
7 | ஜனங்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் உமக்கும் கர்த்தருக்கும் எதிராகப் பேசும்போதெல்லாம் பாவம் செய்வதாக அறிகிறோம். கர்த்தரிடம் ஜெபம் செய்யும். இப்பாம்புகள் அகலும்படி கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்” என்றனர். மோசே ஜனங்களுக்காக வேண்டினான். |
8 | கர்த்தர் மோசேயிடம், “வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து அதனைக் கம்பத்தின் மேல் வை. பாம்பால் கடிக்கப்பட்ட எவனும் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்தால் மரிக்கமாட்டான்” என்றார். |
9 | எனவே மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணி அதனைக் கம்பத்தில் வைத்தான். பாம்பால் கடிக்கப்பட்டவர்கள் கம்பத்தில் உள்ள பாம்பைப் பார்த்து உயிர்பிழைத்தனர். |
10 | இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விடத்தை விட்டுப் பயணம் செய்து ஓபோத்தில் கூடாரம் போட்டனர். |
11 | பிறகு அவர்கள் அதனை விட்டுப்போய் மோவாபுக்குக் கிழக்கே பாலைவனத்தில் அய் அபாரீமினில் தங்கினார்கள். |
12 | பிறகு அங்கிருந்து பயணம் செய்து சாரோத் பள்ளத்தாக்கில் கூடாரம் போட்டனர். |
13 | பின்னர் அங்கிருந்து சென்று, அர்னோன் ஆற்றைக் கடந்து கூடாரம் போட்டனர், இந்த ஆறு அம்மோனியர்களின் எல்லையிலிருந்து புறப்படுகிறது. அந்தப் பள்ளத்தாக்கானது மோவாபியருக்கும் எமோரியருக்கும் எல்லையாக இருந்தது. |
14 | இதனால்தான் கர்த்தருடைய யுத்தங்கள் என்ற நூலில்: “சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றின் பள்ளத்தாக்குகளும் |
15 | ஓர் எனும் இடத்துக்குப் போகும் பள்ளத்தாக்குகளும், மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கிறது. |
16 | இஸ்ரவேல் ஜனங்கள் அந்த இடத்தையும் விட்டு பேயீருக்குப் போனார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில் தான் கர்த்தர் மோசேயிடம், “ஜனங்களை இங்கே கூட்டிவா அவர்களுக்கு தண்ணீர் வழங்குவேன்” என்றார். |
17 | பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் இந்தப் பாடலைப் பாடினார்கள்: “கிணறு, தண்ணீரால் நிரம்பி வழிகிறது! இதைப் பற்றி பாடுங்கள்! |
18 | பெரிய மனிதர்கள் இந்தக் கிணற்றைத் தோண்டினார்கள். முக்கிய தலைவர்களால் தோண்டப்பட்ட கிணறு இது. அவர்கள் தங்கள் ஆயுதங்களாலும் தடிகளாலும் அதைத் தோண்டினார்கள். பாலைவனத்தில் இது ஒரு அன்பளிப்பாகும்.” எனவே, அவர்கள் அந்தக் கிணற்றை “மாத்தனா” என்று அழைத்தனர். |
19 | ஜனங்கள் மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், பிறகு நகாலியேலிலிருந்து பாமோத்துக்குப் பயணம் செய்தனர். |
20 | ஜனங்கள் பாமோத்திலிருந்து மேவாப் பள்ளத்தாக்குக்குப் பயணம் செய்தனர். அங்கே பிஸ்கா மலை உச்சியானது பாலை வனத்துக்கு மேலே தெரிந்தது. |
21 | இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் அரசனாகிய, சீகோனிடம் சில மனிதர்களை அனுப்பினர். அவர்கள் அரசனிடம், |
22 | “உங்கள் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய அனுமதி தாருங்கள். நாங்கள் வயல் வழியாகவோ திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதையின் வழியாக மட்டுமே செல்வோம். உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை நாங்கள் சாலையிலேயே தங்குவோம்” என்றனர். |
23 | ஆனால் சீகோன் அரசனோ, இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அந்த அரசன் தன் படைகளைத் திரட்டி பாலை வனத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிடப் புறப்பட்டான். யாகாஸ் எனும் இடத்தில் அவன் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட்டான். |
24 | இஸ்ரவேல் ஜனங்கள் அந்த அரசனைக் கொன்றனர். பிறகு அவர்கள் அவனுடைய நாட்டை அர்னோன் நதி முதல் யாப்போக் நதிவரை எடுத்துக்கொண்டனர். அவர்கள் எடுத்துக் கொண்ட நாடானது அன்று வரை அம்மோனியர்களின் எல்லையாக இருந்தது. அம்மோனிய ஜனங்களால் பலமாக பாதுகாக்கப்பட்டதால் அவர்கள் எல்லை வரை நிறுத்திக் கொண்டார்கள். |
25 | இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியரின் அனைத்து நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டு அதில் வாழத் துவங்கினார்கள். அவர்கள் எஸ்போன் நகரத்தையும் இன்னும் பல நகரங்களையும்கூட வென்றனர். |
26 | எஸ்போன் நகரத்தில் தான் எமோரியரின் அரசனான சீகோன் வசித்து வந்தான். கடந்த காலத்தில் சீகோன், மோவாப் அரசனோடு சண்டை செய்திருக்கிறான். சீகோன் அர்னோன் ஆறுவரையுள்ள நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டான். |
27 | இதனால்தான் பாடகர்கள் கீழ்க் கண்டவாறு பாடினார்கள்: “எஸ்போனே, நீ மீண்டும் கட்டப்பட வேண்டும்! சீகோனின் நகரமும் பலமுள்ளதாக வேண்டும். |
28 | எஸ்போனில் நெருப்பு தோன்றியது. சீகோனின் நகரத்திலும் நெருப்பு தோன்றியது. மோவாபிலுள்ள ஒரு நகரத்தையும் நெருப்பு அழித்தது. அது அர்னோன் ஆற்றுக்கு மேலேயுள்ள குன்றுகளையும் எரித்தது. |
29 | மோவாபே உனக்கு ஐயோ! கேமோஷ் ஜனங்களை இழந்தாய். அவனது மகன்கள் ஓடிவிட்டனர். அவனது மகள்கள் எமோரிய அரசனான சீகோனால் சிறைப்பிடிக்கப்பட்டனர். |
30 | ஆனால் நாங்கள் அத்தகைய எமோரியர்களைத் தோற்கடித்தோம். அவர்களின் நகரங்களை அழித்தோம். எஸ்போன் முதல் திபோன்வரையும் மேதேபாவுக்கு அருகிலுள்ள நோப்பாவரை அழித்தோம்” |
31 | பின்னர், இஸ்ரவேல் ஜனங்கள், எமோரியரின் நாட்டில் தங்கள் முகாம்களை அமைத்தனர். |
32 | மோசே யாசேர் பட்டணத்தைப் பார்வையிடும்படி சிலரை அனுப்பி வைத்தான். மோசே இவ்வாறு செய்தபிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள சிறு பட்டணங்களையும் கைப்பற்றினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எமோரியர்களை விரட்டியடித்தனர். |
33 | பிறகு அவர்கள் பாசானுக்குப் போகும் சாலையில் பயணம் செய்தனர். பாசானின் அரசனான ஓக் என்பவன் தனது படைகளோடு இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்து வந்து, எத்ரே என்னும் இடத்தில் அவன் இவர்களோடு சண்டையிட்டான். |
34 | ஆனால் கர்த்தர் மோசேயிடம், “அந்த அரசனுக்குப் பயப்பட வேண்டாம். அவர்களைத் தோற்கடிக்கும்படி செய்வேன். நீங்கள் அவனது படைகளையும், நாட்டையும் கைப்பற்றிக் கொள்வீர்கள். எஸ் போனில் இருந்த எமோரியரின் அரசனான சீகோனுக்கு நீங்கள் செய்தது போன்று இங்கேயும் செய்வீர்கள்” என்றார். |
35 | எனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஓக் அரசனையும் அவனது படைகளையும் தோற்கடித்து, அவனையும் அவனது பிள்ளைகளையும் படைகளையும் கொன்றதுடன் அவனது நாட்டையும் கைப்பற்றிக் கொண்டனர். |