1 | கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகியோர் மோசேக்கு எதிராகக் கிளம்பினார்கள். (கோராகு இத்சேயாரின் மகன். இத்சேயார் கோகாத்தின் மகன். கோகாத் லேவியின் மகன். தாத்தானும், அபிராமும் சகோதரர்கள். இவர்கள் எலியா பின் பிள்ளைகள். ஓன் பேலேத்தின் மகன். இவர்கள் அனைவரும் ரூபன் சந்ததியைச் சேர்ந்தவர்கள்.) |
2 | இவர்கள் நான்கு பேரும் 250 இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்து மோசேக்கு எதிராக நின்றனர். இவர்கள் அனைவரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்கள். அவர்களை அனைவருக்கும் தெரியும். |
3 | அவர்கள் அனைவரும் ஒரு குழுவாகி மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராகப் பேச வந்தனர். அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து, “நீங்கள் அளவை மிஞ்சிப் போய் விட்டீர்கள். நீங்கள் தவறானவர்கள்! இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் மத்தியில் கர்த்தர் வாழ்கிறார்! கர்த்தரின் மற்ற ஜனங்களைவிட, நீங்கள் உங்களை மட்டும் மிக முக்கிமானவர்களாக்கிக் கொண்டீர்கள்” என்றனர். |
4 | இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான். |
5 | பிறகு மோசே, கோராகிடமும் அவனைப் பின் பற்றி வந்தவர்களிடமும்: “நாளை காலையில் கர்த்தர், தனது உண்மையான ஊழியன் யாரென்றும் உண்மையில் யார் பரிசுத்தமானவன் என்பதையும் காட்டுவார். அந்த மனிதனை அவர் தன்னருகில் அழைப்பார். அந்த மனிதனைத் தேர்ந்தெடுத்து, கர்த்தர் தன்னருகே சேர்த்துக்கொள்வார். |
6 | எனவே, கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் |
7 | நாளை தூபகலசங்களில் நெருப்பை உண்டாக்கி, அதில் நறுமணப் பொருட்களையிட்டு, அவற்றைக் கர்த்தருக்கு முன்னால் கொண்டு வாருங்கள். உண்மையில் பரிசுத்தமானவன் யார் என்பதைக் கர்த்தர் தேர்ந்தெடுப்பார். லேவியர்களாகிய நீங்கள்தான் மிதமிஞ்சி போகிறீர்கள். நீங்கள் தவறானவர்கள்” என்றான். |
8 | மேலும் மோசே கோராகிடம், “லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். |
9 | இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் உங்களைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் மேலும் மகிழ்ச்சி அடையவேண்டும், இல்லையா? மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டவர்கள். பரிசுத்தக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காகக் கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் தம்மருகே உங்களை வரச்செய்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைக்கு நீங்கள் உதவ வேண்டும். இது போதாதா? |
10 | ஆசாரியர்களுக்கு உதவும்படி லேவியர்களாகிய உங்களைக் கர்த்தர் தன்னருகே அனுமதித்திருக்கிறார். ஆனால் நீங்கள் இப்போது ஆசாரியர்களாக மாறப் பார்க்கிறீர்கள். |
11 | “நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் சேர்ந்து கர்த்தருக்கு எதிராக நிற்கிறீர்கள். ஆரோன் ஏதாவது தவறு செய்தானா? இல்லையே! அவ்வாறு இருக்க அவனுக்கு எதிராக ஏன் முறையிடுகிறீர்கள்?” என்றான். |
12 | பிறகு மோசே எலியாப்பின் மகன்களான தாத்தானையும், அபிராமையும் அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்! |
13 | நீர் ஏராளமான நன்மைகள் நிறைந்த நாட்டிலிருந்து வெளியேற்றி எங்களை கொல்வதற்காக இப்பாலைவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர். இப்போது எங்களை விட உம்மை திறமை மிக்கவராக காட்ட விரும்புகிறீர். |
14 | நாங்கள் ஏன் உம்மை பின்பற்ற வேண்டும்? தேவன் வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குள் நீர் எங்களைக் கொண்டு வரவில்லை. நீர் எங்களுக்கு வயல்களோ, திராட்சை தோட்டங்களோ கொடுக்கவில்லை. இந்த ஜனங்களையெல்லாம் உங்கள் அடிமைகளாக்குவதுதான் உங்கள் எண்ணமா? முடியாது. நாங்கள் அங்கே வரமாட்டோம்” என்றனர். |
15 | எனவே, மோசே மிகவும் கோபம் கொண்டான். அவன் மீண்டும் கர்த்தரிடம், “நான் இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அவர்களிடமிருந்து எதையும், ஏன் ஒரு கழுதையையும் கூட எடுத்துக்கொள்ளவில்லை! கர்த்தாவே, இவர்களது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளாதிரும்” என்றான். |
16 | பிறகு மோசே கோராகிடம், “நாளை கர்த்தருக்கு முன்னால் நீயும், உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நிற்கவேண்டும். அங்கே உங்களோடு ஆரோனும் நிற்பான். |
17 | நீங்கள் ஒவ்வொருவரும் நறுமணப் பொருட்களை இடுகின்ற தூபகலசத்தைக் கொண்டு வந்து அவற்றைக் கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். மூப்பர்களுக்குரிய 250 தூபகலசத்தோடு உனக்கும், ஆரோனுக்குமாக இரண்டு தூப கலசங்கள் இருக்கும்” என்றான். |
18 | எனவே, ஒவ்வொரு தலைவரும் தனக்கென்று தூபகலசமும், அதில் இடுவதற்கு நறுமணப் பொருட்களும் கொண்டு வந்தனர். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் அவர்கள் வந்து நின்றனர். மோசேயும் ஆரோனும் அங்கே நின்றனர். |
19 | கோராகும் அனைத்து ஜனங்களையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுமாறு செய்தான். பிறகு அங்குள்ள ழுழு சபையினருக்கும் கர்த்தரின் மகிமை காணப்பட்டது. |
20 | கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், |
21 | “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். அவர்களை இப்போதே அழிக்கப் போகிறேன்!” என்றார். |
22 | ஆனால் மோசேயும், ஆரோனும் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கிக் கதறினார்கள், “தேவனே! நீர் மாம்சமான எல்லாருடைய ஆவிகளுக்கும் தேவன். ஒரே ஒருவன் மட்டும் பாவம் செய்தால் நீர் முழு சபையினர் மீதும் கோபங்கொள்ளலாமா?” என்றனர். |
23 | பிறகு கர்த்தர் மோசேயிடம், |
24 | “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப்போகும்படி ஜனங்களிடம் கூறு” என்று கேட்டுக் கொண்டார். |
25 | மோசே எழுந்து, தாத்தானிடமும், அபிராமிடமும் சென்றான். எல்லா மூப்பர்களும் அவனைப் பின்பற்றினர். |
26 | மோசே, ஜனங்களை எச்சரித்து. “அந்தத் தீய மனிதர்களின் கூடாரங்களை விட்டு விலகிப் போங்கள், அவர்களுக்குரிய எதையும் தொடாதீர்கள், நீங்கள் இவ்வாறு செய்தால் அவர்களது பாவத்தின் காரணமாக அழிக்கப்படுவீர்கள்” என்றான். |
27 | எனவே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு விலகிப் போனார்கள். தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே வந்து, தங்கள் கூடார வாசல்களில், தங்கள் மனைவி, குழந்தைகளோடு நின்று கொண்டிருந்தனர். |
28 | பிறகு மோசே, “இவை எல்லாவற்றையும் செய்யுமாறு கர்த்தர் என்னை அனுப்பினார் என்று ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். இதுதான் அதற்கான சாட்சி. இவை எனது சொந்த எண்ணங்கள் அல்ல என்பதை இவை உங்களுக்குக் காட்டும். |
29 | இங்குள்ள மனிதர்கள் மரித்துப்போவார்கள். அவர்கள் சாதாரண ஜனங்களைப் போன்று மரிப்பார்களேயானால் பிறகு கர்த்தர் உண்மையில் என்னை அனுப்பவில்லை என்று தெரிந்துக் கொள்ளுங்கள். |
30 | ஆனால் கர்த்தர் இவர்களை அசாதாரணமான முறையில் மரிக்க செய்வாரானால், இவர்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். பூமி பிளந்து இந்த மனிதர்களை அப்படியே விழுங்கிவிடும். இதுதான் அதற்கு சான்று, இவர்கள் உயிரோடு தங்கள் கல்லறைக்குள் புதைக்கப்படுவார்கள். இவர்களுக்குரிய அனைத்தும், இவர்களோடேயே போய்ச்சே ரும்” என்றான். |
31 | மோசே இவற்றைச் சொல்லி முடித்ததும், அவர்கள் நின்ற இடத்தில் பூமி பிளந்தது. |
32 | பூமி தன் வாயைத் திறந்து, அவர்களை விழுங்கியது போல் இருந்தது. கோரகின் ஜனங்களும் அவர்களின் குடும்பங்களும் அவர்களுக்குரிய அனைத்தும் பூமிக்குள் சென்று விட்டன. |
33 | அவர்கள் தங்கள் கல்லறைக்குள் உயிரோடு சென்றனர். அவர்களுக்குரிய பொருட்களும், அவர்களோடு சென்றன. பிறகு பூமி மூடிக்கொண்டது. அவர்கள் முகாமிலிருந்து மூடப்பட்டு மடிந்தனர்! |
34 | இஸ்ரவேல் ஜனங்கள் அழிந்து போனவர்களின் அழுகுரல்களைக் கேட்டனர், அவர்கள் பல திசைகளிலும் ஓடிப்போய், “இந்தப் பூமி எங்களையும் விழுங்கிக் கொன்றுவிடும்” என்று கதறினர். |
35 | பிறகு கர்த்தரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபதீபம் காட்டிய 250 தலைவர்களையும் அழித்துப் போட்டது. |
36 | கர்த்தர் மோசேயிடம் |
37 | “ஆசாரியனான ஆரோனின் மகனான எலெயாசாரிடம் நெருப்புக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவற்றிலுள்ள கரியையும், சாம்பலையும் கொட்டிவிடச் சொல். அவர்கள் எனக்கெதிராகப் பாவம் செய்தார்கள். அவர்களது பாவம் அவர்களின் உயிரைப் போக்கிவிட்டது. |
38 | ஆனால், அக்கலசங்கள் இப்போதும் பரிசுத்தமானவை. அவற்றை கர்த்தருக்குக் கொண்டுவந்ததால் பரிசுத்தமடைந்தன. அவற்றைத் தகடுகளாக அடித்து, பலிபீடத்தைச் சுற்றிலும் மூடிவைக்கவும். இது எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்று கூறினார். |
39 | எனவே, ஆசாரியனாகிய எலெயாசார் அனைத்து வெண்கலத் தூபகலசங்களையும் சேகரித்தான். அவற்றைக் கொண்டு வந்த மனிதர்கள் மரித்துப்போனார்கள். ஆனால், கலசங்கள் இருந்தன. அவன் அவற்றை அடித்து, தகடாக்கும்படி செய்து, பின் அத்தகடுகளைப் பலிபீடத்தைச் சுற்றி மாட்டி வைத்தான். |
40 | மோசே மூலமாக கர்த்தர் எலெயாசாருக்குக் கட்டளையிட்டபடிச் செய்து முடித்தான். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளம் ஆயிற்று. ஆரோன் ஜனங்களைத் தவிர வேறு யாரேனும் நறுமணப் பொருள் கொண்டு வரக் கூடாது என்பதற்கு இது நினைவூட்டல் ஆயிற்று. யாராவது கர்த்தருக்கு நறுமணப் பொருள் கொண்டுவந்தால், கோராகும் அவனைப் பின்பற்றியவர்களும் மரித்துப் போனதுபோல் மரித்துப்போவார்கள். |
41 | நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நானே உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தேன். நான் உங்கள் தேவனாயிருக்க இவற்றைச் செய்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார். எதிராகத் திரும்புதல் |
42 | மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்று கொண்டு இருந்தனர். ஜனங்கள் அங்கே கூடி அவர்களுக்கு எதிராக முறையிட்டனர். ஆனால் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை நோக்கியபோது அதை மேகம் சூழ்ந்தது. அங்கே கர்த்தரின் மகிமை காணப்பட்டது. |
43 | பிறகு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பாக வந்தனர். |
44 | மோசேயிடம் கர்த்தர், |
45 | “இந்த ஜனங்களிடமிருந்து விலகி நில்லுங்கள். நான் இவர்களை உடனே அழிக்கப்போகிறேன்” என்றார். எனவே மோசேயும் ஆரோனும் தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கினார்கள். |
46 | பிறகு மோசே ஆரோனிடம், “உனது வெண்கலத் தூபகலசத்தை எடுத்துக்கொள், பலிபீடத்திலுள்ள நெருப்பை அதில் இடு, பின் நறுமணப் பொருளைப்போடு, அவற்றை ஜனங்களிடம் கொண்டு போய் காட்டு, அது அவர்களைத் சுத்தமாக்கும். அவர்கள் மேல் கர்த்தர் கோபமாக உள்ளார். அவர்களுக்கு துன்பம் ஏற்கெனவே தொடங்கி விட்டது” என்றான். |
47 | ஆரோன் மோசே சொன்னபடி தூபகலசமும், நெருப்பும், நறுமணப் பொருட்களும் எடுத்துக்கொண்டு ஜனங்கள் மத்தியில் ஓடினான். ஆனால், ஏற்கெனவே நோய் அவர்களிடையே துவங்கிவிட்டது. |
48 | எனவே ஆரோன் மரித்துப் போனவர்களுக்கும், இன்னும் உயிரோடு இருந்தவர்களுக்கும் இடையே நின்று அவர்களைத் சுத்தப்படுத்தவதற்குரியவற்றைச் செய்தான். நோயும் நிறுத்தப்பட்டது. |
49 | ஆனால் 14,700 பேர் நோயால் மரித்துப்போனார்கள். கோரகினால் மரித்தவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை. |
50 | எனவே நோய் நிறுத்தப்பட்டது. பின் ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்ற மோசேயிடம் திரும்பி வந்தான். |